மலேசியாவில் விடுதலைப் புலிகளின் 4 தலைவர்கள் கைது
சிறிலங்காவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள், மலேசியாவில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், நான்கு விடுதலைப் புலிகளை கைது செய்திருப்பதாக, மலேசிய காவல்துறை கூறியுள்ளது.
கோலாலம்பூர் மற்றும் செலங்கூர் ஆகிய இடங்களில் நேற்று தீவிரவாத முறியடிப்பு பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, மலேசிய காவல்துறை மா அதிபர் தன் சிறி காலித் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள், தமது நடவடிக்கைக்கான பரப்புரை மற்றும் இடைத்தங்கல் தளமாக மலேசியாவைப் பயனபடுத்த முனைந்தார்கள் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த தேடுதலின் போது, பெரும் எண்ணிக்கையான பல்வேறு நாடுகளின் போலி கடவுச்சீட்டுகள், மலேசிய குடிவரவு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தூதரகங்களின் போலி முத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஒருவர், வெடிபொருள் நிபுணர் என்றும் அவர், ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் அமைப்பின் அட்டையை வைத்திருப்பதாகவும், மலேசிய காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது சந்தேக நபர், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் கொலை முயற்சியில் தொடரபுடையவர் என்று நம்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது நபர், சென்னை, பெங்களூர் நகரங்களில் உள்ள சிறிலங்கா துதரகங்களின் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்றும், மலேசிய காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
நான்காவது சந்தேக நபர், விடுதலைப் புலிகளின் அடுத்த பிரிவினைவாத தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்து தகவல்களைப் பரிமாறுபவர் என்றும் நம்பப்படுவதாகவும், அவர் கூறியுள்ளார்.
2009ம் ஆண்டுக்குப் பின்னர், மலேசியாவில் இதுவரை 14 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment