Header Ads



யாருக்கு 3வது இடம்..? பிரேசில், நெதர்லாந்து பலப்பரீட்சை


உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில், பிரேசில், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. 
பிரேசிலில், 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. பிரேசிலியாவில் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில், அரையிறுதியில் தோல்வி அடைந்த பிரேசில், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

சில்வா நம்பிக்கை:

லீக் சுற்றில், குரோஷியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய பிரேசில் அணி, மெக்சிகோவிடம் ‘டிரா’ செய்தது. பின், காமரூனை வீழ்த்தி 7 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்தது. ‘ரவுண்டு–16’ போட்டியில் சிலியை வீழ்த்திய பிரேசில், காலிறுதியில் கொலம்பியாவை தோற்கடித்தது. பின், ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில், 1–7 என்ற கணக்கில் மோசமான தோல்வியை பதிவு செய்தது.

வருகிறார் சில்வா:

முதுகெலும்பு முறிவு காரணமாக நட்சத்திர வீரர் நெய்மர் தொடரில் இருந்து விலகியது பிரேசில் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படுத்தியது. தடை காரணமாக அரையிறுதியில் விளையாடாத கேப்டன் தியாகோ சில்வா இன்று களமிறங்குவது நம்பிக்கை அளிக்கலாம். ஜெர்மனிக்கு எதிராக கடைசி நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்த ஆஸ்கர் கைகொடுக்கலாம். இத்தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத மேக்ஸ்வெல் இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹல்க், பிரட், வில்லியன், டேவிட் லுாயிஸ், பவுலினோ, மார்செலோ உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் 3வது இடம் பிடித்து ஆறுதல் பெறலாம்.

நெதர்லாந்து அணி, லீக் சுற்றில் ஸ்பெயின், ஆஸ்திரேலியா, சிலி அணிகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. பின், ‘ரவுண்டு–16’ போட்டியில் மெக்சிகோவை வீழ்த்திய நெதர்லாந்து, காலிறுதியில் கோஸ்டாரிகாவை ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் வீழ்த்தியது. அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதியில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஏமாற்றியதால், நெதர்லாந்தின் முதலாவது சாம்பியன் பட்டம் வெல்லும் கனவு முடிவுக்கு வந்தது.

இதுவரை 12 கோல் அடித்துள்ள நெதர்லாந்துக்கு ராபின் வான் பெர்சி, ராபென் கூட்டணி நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் இவர்களால் அரையிறுதியில் ஒரு கோல் கூட அடிக்க முடியாதது ஏமாற்றம். இவர்கள் இன்றைய போட்டியில் எழுச்சி காணும் பட்சத்தில், 3வது இடம் பிடித்து ஆறுதல் தேடலாம். இவர்களை தவிர ஸ்னைடர், மெம்பிஸ் டெம்பே, ரான் விலார், குயிட் உள்ளிட்டோர் கைகொடுக்கலாம்.

பதிலடி வாய்ப்பு

கடந்த 2010ல் போர்ட் எலிசபெத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து காலிறுதியில், நெதர்லாந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. இத்தோல்விக்கு பதிலடி கொடுக்க, 4 ஆண்டுகளுக்கு பின் பிரேசில் அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

விருப்பம் இல்லை

பொதுவாக உலக கோப்பை கால்பந்து அரங்கில், எந்த ஒரு அணியும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் விளையாட விரும்பாது. ஏனெனில் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, இப்போட்டியில் விளையாட எந்த ஒரு அணிக்கும் விருப்பம் இருக்காதாம்.

No comments

Powered by Blogger.