Header Ads



உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 207 கோடி பரிசு

மிகவும் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் இன்று ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இதில், சாதித்து சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, கால்பந்து அரங்கின் ‘வல்லரசாக’ வலம் வரலாம். 
உலக கோப்பை கால்பந்து தொடர் பிரேசிலில் நடக்கிறது. மொத்தம் 32 அணிகளில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயின், போட்டியை நடத்தும் பிரேசில் உட்பட 30 அணிகள் நடையை கட்டின.
கடந்த ஒரு மாத போராட்டத்தின் முடிவில், இன்று நடக்கும் பைனலில் உலகின் ‘நம்பர்–2’ அணி ஜெர்மனி (ஐரோப்பா), 5வது இடத்திலுள்ள அர்ஜென்டினாவை (தென் அமெரிக்கா) சந்திக்கிறது.
அர்ஜென்டினா அணியை பொறுத்த வரையில் இத்தொடரில் கேப்டன் மெஸ்சியை மட்டும் முழுதாக நம்பி களமிறங்கியது. இதற்கேற்ப, துவக்க போட்டிகளில் மெஸ்சி சிறப்பாக செயல்பட்டார். 
மெஸ்சி ‘மேஜிக்’:
லீக் சுற்றின் 3 போட்டிகளில் 4 கோல் அடித்த இவர், அனைத்திலும் ஆட்ட நாயகன் ஆனார். ‘ரவுண்டு–16’, காலிறுதி மற்றும் அரையிறுதியில் ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றினார். அதிலும், நெதர்லாந்துக்கு எதிரான அரையிறுதியில் 120 நிமிடங்கள் களத்தில் இருந்த போதும், எதிரணியின் கோல் ஏரியாவுக்குள் மெஸ்சியால் பந்தை கொண்டு செல்லவே முடியவில்லை.
இம்முறை மெஸ்சியை சமாளிக்க ஜெர்மனி கூடுதல் கவனம் செலுத்த முயற்சிக்கும்.
தற்காப்பு பலம்:
அணியின் மற்ற வீரர்களை பொறுத்தவரையில், ஹிகுவேன், அகுயரோ, பலாசியோ, லாவேசி போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை தந்தனர். இவர்களிடம் சரியான ‘பினிஷிங்’ இல்லாதது பெரும் சோகம். ஏஞ்சல் டி மரியா களமிறங்கும் பட்சத்தில் இந்தக்குறை தீரலாம்.
அணியின் தற்காப்பு ‘ஏரியாவில்’ ரோட்ரிக்ஸ், மாசெரானோ என, இருவரும் துணிச்சலாக செயல்பட்டு, எதிரணி வீரர்களை மடக்குகின்றனர். கோல் கீப்பர் ரொமெரோவும், எளிதாக கோல் அடிக்க விடமாட்டார். 
தாக்குதல் வேகம்:
 இதுவரை 61 முறை கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது, அர்ஜென்டினாவின் தாக்குதல் வேகத்தை காட்டுகிறது. இதில் 8 முறை மட்டுமே கோலாக மாற்ற முடிந்தது.
24 ஆண்டுக்குப் பின் கோப்பை வெல்லும் முயற்சியில் உள்ள இந்த அணிக்கு சற்று பின்னடைவு தான்.
‘கில்லர்’ முல்லர்:
கடந்த 1990 வரை மேற்கு ஜெர்மனியாக பங்கேற்ற இந்த அணி, 1994 முதல் ஒருங்கிணைந்த ஜெர்மனியானது. இப்போதும் அப்படித்தான், எந்த ஒரு தனி வீரரையும் நம்பாமல், உண்மையில் ஒருங்கிணைந்து தான் செயல்படுகிறது.
முன்னணி வீரர் தாமஸ் முல்லர் (5), இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் 2வது இடத்தில் உள்ளார். 6 போட்டிகளில் மொத்தம் 68.8 கி.மீ., துாரம் ஓடிய இவர், மீண்டும் அசத்த முயற்சிக்கலாம்.
அடுத்து 3 கோல் அடித்த ஆன்ட்ரூ சுருல், உலக சாதனை படைத்த குளோஸ் (2 கோல்), டோனி குருஸ் (2) என, பெரும்பாலான வீரர்கள் தங்கள் திறமை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோல் மழை:
மொத்தம் 64 முறை தாக்குதல் நடத்தியதில், 17 கோல்கள் அடித்துள்ளனர். ஹம்மல்ஸ், போயட்டங், ‘கோல்டன் கிளவ்ஸ்’ போட்டியில் முன்னணியில் உள்ள கோல் கீப்பர் நுாயரும் சிறப்பாக செயல்படுகின்றனர்.
லீக் சுற்றில் போர்ச்சுகலை 4–0 என, பெரிதாக வென்ற ஜெர்மனி, அரையிறுதியில் 7–1 என, மிகப்பெரிய வரலாற்று வெற்றியை, பிரேசிலுக்கு எதிராக பதிவு செய்தது. இந்த உற்சாகத்தில் இன்று அர்ஜென்டினாவை எளிதாக சமாளிக்கும் என்று தெரிகிறது.
பழிதீர்க்க வாய்ப்பு
கடந்த 1986 உலக கோப்பை பைனலில், ஜெர்மனியை வீழ்த்திய அர்ஜென்டினா கோப்பை வென்றது. பின் 1990, பைனலில் ஜெர்மனி, அர்ஜென்டினாவை பழிதீர்த்து, கோப்பை கைப்பற்றியது.
பின், 2006, 2010 காலிறுதி போட்டிகளில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினா தோற்றுள்ளது. இம்முறை மீண்டும் பைனலில் மோதவுள்ளன. இதில் கடந்த கால தோல்விக்கு அர்ஜென்டினா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
இந்த உலக கோப்பை தொடரில், ‘ரவுண்டு–16’, காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில், அர்ஜென்டினா அணி எதிரணிகளை ஒரு முறை கூட கோல் அடிக்க அனுமதிக்கவில்லை.
* லீக் சுற்றில் 3 போட்டிகளிலும், 3 கோல்கள் மட்டுமே அர்ஜென்டினாவுக்கு எதிராக அடிக்கப்பட்டன.
3
ஜெர்மனி 18வது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 1954, 1974, 1990ல் கோப்பை வென்றது. 1966, 1982, 1986, 2002 என, நான்கு முறை பைனலில் வீழ்ந்தது. 1934, 1970, 2006, 2010 என, 4 முறை, மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
6
உலக கோப்பை தொடரில் ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் மொத்தம் 6 முறை மோதின. இதில் ஜெர்மனி 3, அர்ஜென்டினா ஒரு வெற்றி பெற்றன. 2 போட்டிகள் ‘டிரா’ ஆனது.
* 1974 தொடரில் கிழக்கு ஜெர்மனிக்கு எதிரான ஒரு போட்டி (1–1) இதில் சேர்க்கப்படவில்லை.
8
இந்த உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி பங்கேற்ற 3 லீக், ‘ரவுண்டு–16’, காலிறுதி மற்றும் அரையிறுதி வரை 6 போட்டிகளில் 8 கோல்கள் (1 ‘சேம் சைடு’ கோல் உட்பட) மட்டுமே அடித்தது. அரையிறுதியில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ உதவியால் அடிக்க கோல்கள் (4–2) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
* கடந்த 2010ல் லீக் சுற்றில் 4, ‘நாக் அவுட்’ போட்டிகளில் 4 என, மொத்தம் 8 கோல்கள் மட்டும் அடித்த ஸ்பெயின் கோப்பை வென்றது.
12
கடந்த 2002, உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது ஜெர்மனி. இதில் பிரேசிலிடம் கோப்பை இழந்தது. தற்போது 12 ஆண்டுக்குப் பின், மீண்டும் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.
24
கடந்த 1930ல் முதன் முறையாக பங்கேற்ற அர்ஜென்டினா, பைனலுக்கு முன்னேறியது. பின், 1978, 1986ல் கோப்பை வென்றது. 1990ல் பைனலில் ஜெர்மனியிடம் தோற்றது. இதன் 24 ஆண்டுகள் கழித்து இப்போது தான் பைனலுக்கு முன்னேறியுள்ளது.
64
பிரேசில் உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி வீரர்கள் மொத்தம் 64 முறை, எதிரணியினரை ‘பவுல்’ செய்தனர். இதற்காக 6 முறை ‘எல்லோ கார்டு’ பெற்றுள்ளனர். ‘ரெட் கார்டு’ பெறவே இல்லை.
71
ஜெர்மனி அணி பங்கேற்ற 6 போட்டிகளில், மொத்தம் 71 முறை ‘பவுல்’ செய்துள்ளனர். இதற்காக, 4 ஜெர்மனி வீரர்கள் ‘எல்லோ கார்டு’ பெற்றனர். யாரும் ‘ரெட் கார்டு’ வாங்கவில்லை.
1986க்குப் பின்...
கடந்த 1986, உலக கோப்பை தொடரில் மாரடோனா தலைமையில் களமிறங்கிய அர்ஜென்டினா, கோப்பை வென்று அசத்தியது. இதில் 5 கோல்கள் அடித்த மாரடோனா, 4 கோல்கள் அடிக்க சக வீரர்களுக்கு உதவினார். இத்தொடரில் அர்ஜென்டினா அணி மொத்தம் 14 கோல்கள் அடித்தது.
* இம்முறை மெஸ்சி தலைமையில் களமிறங்கிய இந்த அணி, பைனலுக்கு முன்னேறியது. இதில் 4 கோல் அடித்த மெஸ்சி, ஒரு கோல் அடிக்க, சக வீரர்களுக்கு உதவினார். இத்தொடரில் அர்ஜென்டினா அணி இதுவரை 8 கோல் அடித்துள்ளது.
 ‘கோல்டன் ஷூ’
இத்தொடரில் இதுவரை 5 கோல் அடித்துள்ள ஜெர்மனியின் தாமஸ் முல்லர், அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். இன்றைய பைனலில் இவர் இரண்டு கோல் அடிக்கும் பட்சத்தில், கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்சை (6 கோல்) பின்தள்ளி முதலிடம் பிடிக்கலாம். இதன்மூலம் அதிக கோல் அடித்தவருக்கான ‘கோல்டன் ஷூ’ விருது பெறலாம். கடந்த முறை (2010) 5 கோல் அடித்த முல்லர், இவ்விருதை வென்றார்.
அழகிய மரகானா
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள, மிகப் பெரிய மரகானா மைதானத்தில் பைனல் நடக்கிறது. இங்கு 1950க்கு பின் மீண்டும் உலக கோப்பை பைனல் நடப்பது சிறப்பம்சம். சுமார் 79 ஆயிரம் பேர் போட்டியை அமர்ந்து காணலாம்.  
இம்முறை பிரேசிலின் ‘சூப்பர் மாடல்’ அழகி ஜிசல் பண்ட்சென் மற்றும் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியின் கார்லஸ் புயோல் சேர்ந்து, உலக கோப்பையை மரகானா மைதானத்துக்குள் எடுத்து வர உள்ளனர்.
பரிசு எவ்வளவு
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய பெறுமதி ரூ. 207 கோடி பரிசு வழங்கப்படும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 148 கோடி கிடைக்கும்.

No comments

Powered by Blogger.