காருக்குள் 2 வயது மகனை பூட்டிவைத்துக் கொன்ற தந்தைக்கு மரணதண்டனை வாய்ப்பு..?
அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ரோஸ் ஹாரிஸ் (வயது 33). இவர், தன்னுடைய 2 வயது குழந்தையை பராமரிப்பு மையத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். ஆனால் கடந்த மாதம் 18-ம்தேதியன்று அவர் அக்குழந்தையைத் தன்னுடைய காரிலேயே வைத்துப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான் காரின் பின்சீட்டில் குழந்தை சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்துள்ளார். பூட்டிய காரினுள் ஏழு மணி நேரத்திற்கும் மேல் இருந்ததால் ஆக்சிஜன் குறைபாடாலும், வெப்பத்தினாலும் குழந்தை இறந்துள்ளது என்று கூறி காவல்துறை அவரைக் கைது செய்தது. இந்த வழக்கு அட்லாண்டா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளிக் கூண்டில் இருந்த ஹாரிஸ் தான் தனது மகன் கூப்பரை பராமரிப்பு மையத்தில் விடுவதற்கு மறந்துவிட்டதாகவும், திரும்பி வரும்போதுதான் குழந்தை காரிலேயே இறந்து கிடந்ததைக் கண்டதாகவும் நீதிபதியிடம் கூறினார்.
இந்த வழக்கில் ஒரு எதிர்பாராத திருப்பமாக குழந்தை காரினுள் மரணமடைந்த சமயத்தில் ஹாரிஸ் தனது அலுவலகத்தில் 17 வயது இளம்பெண் உட்பட ஆறு பெண்களுக்கு பாலியல் செய்திகளை அனுப்பியுள்ளதை புலனாய்வுத்துறை வெளிப்படுத்தியது. அதேபோல் ஜூன் 18-ந்தேதிக்குமுன் குழந்தைகள் இல்லாத வாழ்க்கை, சிறை வாழ்க்கை மற்றும் காரில் பூட்டப்படும் விலங்குகள் வெயிலினால் இறந்து போவது பற்றிய வீடியோத் தொகுப்புகளை ஹாரிஸ் பார்த்திருந்தார் என்பதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி குழந்தை இறந்த பின்னர் எந்தவித உணர்ச்சியுமின்றி இருந்துள்ளதாக துப்பறியும் நிபுணர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கான நிபந்தனை ஜாமீன் மறுக்கப்பட்டது. ஹாரிஸின் நடத்தையைக் கடுமையாகக் கண்டித்த நீதிபதி இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனைத் தீர்ப்பும் அளிக்கப்படலாம் என்றார்.
இந்த அதிர்ச்சிகரமான தகவல்களை ஒட்டி அமெரிக்க மக்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகளைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அந்நாட்டின் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன. விசாரணை நடைபெற்ற மூன்று மணி நேரமும் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் இருந்த ஹாரிஸ் நீதிபதியின் உரை முடிந்ததும் கண்ணீர் விட்டு அழுதார். அவர் தன் குழந்தையிடம் ஒரு அன்பான தந்தையாகவே இருந்தார் என்று காவல்துறையில் பணிபுரியும் அவரது சகோதரர் தெரிவித்தார்.
Post a Comment