Header Ads



ஜூன் 15ன் வடு வைராக்கியமாக மாறலாமா..?

அஷ்ஷெஹ் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)

இலங்கை முஸ்லிம்களுக்கும் பௌத்த சிங்களவர்களுக்கும் இடையிலான உறவின் வரலாற்றில் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஒரு கரிநாள் என்பதில் சந்தேகமில்லை. வீடுகளும் கடைகளும் உடைந்து போனது போல் மனங்களும் உடைந்து போயின. விரக்தியும் ஆக்ரோஷமும் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கி முஸ்லிம்களில் பலரை விரும்பத்தகாத சிந்தனைகளுக்கு அது உட்படுத்தியுமிருக்கிறது.

இப்படியான நெருக்கடிமிக்க நேரத்தில் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் தூர நோக்கோடும் சிந்திப்பது கடமை என்பதை வலியுறுத்தவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. 
சிங்களவர்கள் அனைவரும் இனவாதிகள் அல்லர்

முஸ்லிம்கள் மீது துவேசத்தை கக்கும் பௌத்தர்களது தொகை குறைவாகும். ஆனால், அண்மைக் காலத்தில் அத்தொகை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. சில அரசியல்வாதிகளது சுயநலம், சர்வதேச சக்திகளது சதித்திட்டம், முஸ்லிம்கள் சிலரது இறுக்கமான நடவடிக்ககைகள், வேறு சிலரது பிற சமூக உறவுகளின் போதான முறையற்ற நடத்தைகள் என்பன இதற்கு காரணங்களாக அமைந்துள்ளன. இப்படியான சூழ்நிலைகளது வளர்ச்சி முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்ககைகளாக பரிமாணம் எடுத்துள்ளன. 

ஆனால், ஏலவே கூறப்பட்டது போல சிங்கள சமூகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களுடன் சகவாழ்வை பேண விரும்புகிறார்கள். பல்கலைகழகங்களில் உள்ள விரிவுரையாளர்கள், பௌத்த குருமார், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலர் இப்படியான நிதானமான நிலையில் இருப்பதுடன் முஸ்லிம்கள் ஒடுக்கப்படும் போது பலமாக குரல் கொடுப்பவர்களாகவும் சமாதானத்துக்காக பல அர்ப்பணங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். பேராசிரியர் கும்புருகமுவே வஜிர ஹிமி, கலாநிதி ஹூநுபலகம வஜிர ஹிமி, விட்டியால கவிதஜ ஹிமி, வடரக விஜித ஹிமி,பத்தேகம சமித ஹிமி   போன்ற குருமாரும் பல்கலைக்கழக பேராசிரியர்களான சாந்த ஹேன நாயக, நவரத்ன பண்டார,ஜயந்த செனெவிரத்ன, போன்றோரும் ஆய்வாளர்களான திஸரனி குனசேகர,விக்டர் அய்வன்,தரிஷ;ட பஷ;டியன்,குமார் டேவிட்                     போன்றோரும் அரசியல் மட்டங்களில் அநுரகுமார திசானாயக,ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர,திலான் பெரேரா,பாலித தவரப்பெரும போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களை நபி(ஸல்) அவர்களது காலத்து அபூதாலிப்களாகவும், முத்இம் இப்னு அதீகளாகவும் நாம் நிச்சயமாகக் கருத முடியும். இத்தகையவர்களுடன் நல்லுறவைப் பேணுவதும்,அவர்களது வட்டத்தை பெருக்குவதும்.அவர்களை பகைக்கும் நடவடிக்கைகளில் இறங்காதிருப்பதும் அவசியமாகும். முஸ்லிகளது நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்கும் பெரும்பான்மையினது நீசத்தனமான, துவேசமான, ஒருதலைப்பட்சமான நடவடிக்ககைகளை கண்டிக்கும் இவர்களது ஒத்துழைப்பு எமக்கு என்றும் தேவைப்படுகின்றது.

பகைத்துக்கொண்டு, ஒதுங்கி வாழ முடியாது 

அத்தோடு பெரும்பான்மை பௌத்தர்களை பகைத்துக் கொண்டு இந்நாட்டில் முஸ்லிம்களால் ஒரு போதும் வாழ முடியாது. அதற்கு பின்வரும் காரணங்களை முன்வைக்கலாம். 

1. இலங்கை முஸ்லிம்கள் மொத்த சனத்தொகையில் 9.7 சதவீதத்தினராகவே உள்ளனர். 90.3 சதவீதத்தினர் சிங்கள, தமிழ், கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்தவர்களே. எனவே,முஸ்லிம்களது நலன்கள் முஸ்லிம் அல்லாதவர்களது நலன்களோடு பின்னிப் பிணைந்துள்ளன.

2. முஸ்லிம்கள் இலங்கையில் எல்லா பாகங்களிலும் சிதறுண்டு வாழுகிறார்கள். முஸ்லிம் கிராமங்கள் நிலத்தொடர்பு அற்ற நிலையில் உள்ளன. ஒரு முஸ்லிம் ஊருக்குப் போய் சேர பல சிங்கள ஊர்களைக் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. நாடு பூராவும் ஒரு இனக்கலவரம் ஏற்படும் பட்சத்தில் முஸ்லிம்கள் கிராமங்களுக்குள் சிக்கவைக்கப்பட்டு எதுவும் நடந்தேறலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

3. முஸ்லிம் அல்லாதவர்களது உதவி முஸ்லிம்களுக்கு அதிகம் தேவைப்படும் நிலையில்தான் முஸ்லிம்கள் வாழுகிறார்கள். வேறுவிதத்தில் கூறினால்,முஸ்லிம்கள் அதிகமாக பிறரில் தங்கி இருக்கிறார்கள். வைத்தியசாலைகள், நீதிமன்றம், பாராளுமன்றம், அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நிருவனங்கள், வங்கிகள் என்று இன்னோரன்ன இடங்களில் முஸ்லிம் அல்லாதவர்களே அதிகமாக பெரும் பதவிகளிலும் பொறுப்புக்களிலும் இருக்கிறார்கள். இவர்களை பகைத்துக் கொண்டு. இவர்களிடம் இருந்து சேவைகளைப் பெறுவது எப்படியும் சாத்தியமில்லை. அளுத்கமைக் கலவரத்தில் பொலிசாரும் விNஷட அதிரடிப்படையினரும் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என்பது பலரும் அறிந்த உண்மையாக இருந்தாலும் கலவரத்தின் போதும் தற்போதும் முஸ்லிம் அல்லாத அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு படையினரையும் பொலிஸாரையுமே முஸ்லிம்கள் உதவிக்கு அழைத்தார்கள். அதாவது, இறுதியில் அவர்களது - சிங்களவர்களது உதவியையே நாடவேண்டி ஏற்பட்டது. கலவரத்தில் காயப்படுபவர்களை வைத்தியசாலைக்கு நாம் கொண்டு சென்றால் அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கயிருப்பவர்கள் பெரும்பாலும் சிங்கள வைத்தியர்களும் தாதிகளும் மற்றும் சிற்றூழியர்களுமே. எம்மைப்பற்றி அவர்களுக்கு நல்லெண்ணம் இல்லாத போது சிகிச்சைக்கு பதிலாக வேறு காரியங்கள் கூட நடக்கலாம்.

பல்கலைக்கழகங்களில் உள்ள சகல பீடங்களிலும் கடமையாற்றும் விரிவுரையாளர்கள் பெரும்பாலும் முஸ்லிமல்லாதவர்களாவர்களே. அவர்கள் துவேசம் பிடித்தவர்களாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.அப்போது முஸ்லிம் மாணவர்களது உயர்கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

 நாம் முஸ்லிம் அல்லாதவர்களை வெறுத்து ஒதுக்கி, தூரமாகி வாழ்வது சாத்தியமில்லை. அவ்வாறு வாழ்வது எம்மைப் மேலும் பலவீனப்படுத்தும் சில போது அது எம்மை அழித்துக் கொள்வதாக அமையும். முஸ்லிம்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு நாம் கூறவில்லை நாம் அடிமைகள் அல்லர். சுயமரியாதையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட கண்ணியமும் கொண்டவர்கள்தான். இந்த நாட்டில் பிறருக்குள்ள உரிமைகள் எமக்கும் உண்டு என்று சட்ட யாப்பில் கூறப்பட்டாலும் அதனை அமுல்படுத்தும் அதிகாரி;களது மனப்பாங்கு எமக்கு எதிரானதாக மாறிவிட்டால் நிலை என்னவாகும்?

4. முஸ்லிம்கள் பிற சமூகங்களில் தங்கி இருக்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் வியாபார கொடுக்கல்வாங்கல்களாகும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளை எடுத்து நோக்கினால் முஸ்லிம்கள் பெரும்பாலும் வியாபாரத்தையே தமது ஜீவனோபாயமாகக் கொள்கிறார்கள். அதேவேளை, சிங்களவர்கள் தான் பெரும்பாலும் முஸ்லிம்களது வாடிக்கையாளர்களாகவோ வியாபாரக் கூட்டாளிகளாகவோ இருக்கிறார்கள்.அதாவது, முஸ்லிம் வியாபாரி ஒருவரிடம் நாம் சென்று உங்களிடம் பொருட்கள் வாங்குவோரில் இனரீதியாகப்பார்த்தால் அதிகமான வாடிக்கையாளர்கள் யார் என்று வினவும் பட்சத்தில் அவர் 90சதவீதமானவர்கள் சிங்களவர்களே என பதில் தருவார.; அப்படியாயின் எமது பொருளாதாரம் அவர்களில் அதிகம் தங்கியிருப்பதாகக் கருதமுடியும் அல்லவா? முஸ்லிம்களது வியாபாரத்தலங்களில், பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என அண்மைக்காலமாக பொது பலசேனா போன்ற தீவிரவாத அமைப்புக்கள்  சிங்களவர்களிடம் பிரச்சாரம் செய்தன. முஸ்லிம்களது பொருளாதாரத்தை உடைக்க வேண்டும் என்ற இந்தப் பொறாமை மிகுந்த முயற்சி பயனளிக்கவில்லை. சிங்களவர்கள் இந்த வலையில் சிக்கியிருந்தால் முஸ்லிம்களது நிலை என்னவாகும்?
அந்தவகையில் பார்க்கும் போதும் சிங்ளவர்களுடன் நல்லுறவைப் பேணுவது அவசியமாக மாறுகிறது. 

முஸ்லிம்களது உறவை வேண்டி நிற்கும் சிங்களவர்கள்

முஸ்லிம்கள் சிங்ளவர்களில் தங்கி இருப்பது போலவே முஸ்லிம்களுடன் சிங்களவர்கள் பொருளாதார ரீதியாக இருக்கமான உறவைப் பேணிவருவது கண்கூடு. அண்மைக்காலக் கலவரம் நடந்ததால் முஸ்லிம்கள் மட்டுமின்றி சிங்களவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தர்கா நகரில் முஸ்லிம்கள் பெரிய, சிறிய அளவுகளில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை வைத்திருக்கிறார்கள். இவற்றில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள யுவதிகளாவர். சுமார் 700 சிங்கள் யுவதிகள் இவ்வாறு தொழில் புரிகிறார்கள். உதாணமாக, மிலிடரி ரோடில் முற்றாக எரிந்து போன ஆடை தொழிற்சாலையில் சுமார் 36 யுவதிகள் தொழில் புரிந்தார்கள். அவர்களில் 8 பேர் மட்டுமே முஸ்லிம் யுவதிகளாவர். மதுகம இத்தபானவில் தாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான கேட்வே காமன்ட்ஸ் தொழிற்சாலையில் 375 க்கும் அதிகமான சிங்கள யுவதிகள் பணிபுரிந்துள்ளனர். மேசன் வேலை, பொதுச்சந்தையில் பொருட்களை விற்பது, தெருவோர வியாபாரம் போன்ற பல வகையான உழைப்பு முயற்சிகளுக்காக 300 க்கு அதிகமான சிங்களவர்கள் தர்கா நகருக்குள் நாளாந்தம் வந்து செல்வதாக ஒரு சகோதரர் தெரிவித்தார.; இதிலிருந்து முஸ்லிம்களில் சிங்களப் பொதுமக்கள் தங்கி இருந்து ஜீவியத்தை நகர்த்துகிறார்கள் என்பதை புரிய முடிகிறது. இரு சமூகங்களுக்குமிடையிலான உறவுகள் பலவீனப்படும் பட்சத்தில் இந்த சாதாரண ஏழை தொழிலாளர்கள் எவ்வளவு அதிகமாகப் பாதிக்கப்படுவர் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

தர்காநகர், பேருவலை போன்ற முஸ்லிம் பிரதேசங்களுக்கு பலபிடியவில் இருந்து மீன்களை மொத்தமாகக் கொண்டுவந்து விற்பனை செய்யும் சிங்கள ஒருவரது மனக்குறையை செவிமெடுத்தேன.; ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த வேளையில் விற்பனை செய்ய முடியாது போன தனது மூன்று இலட்சம் பெறுமதியான மீன்கள் பழுதுபட்டுப் போனதாகக் கூறினார். அளுத்கமை, பெந்தோட்டை பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களுக்கான உல்லாசப் பயணிகளது வருகை கூட குறைவடைந்கதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

மேற் கூறப்பட்டவை செவி வழியாக கிடைக்கப் பெற்ற தகவல்களாகும்.துல்லியமாக ஆய்வின் பின்னர் இவை பெறப்படாவிட்டாலும் பல உண்மைகளை உணர்த்துகின்றன. 

சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு மிகவுமே இறுக்கமானது. அது பழுதுபட்டால் அல்லது பலவீனப்பட்டால் இரு சமூகங்களும் பாதிக்கப்படும். பொருளாதாரம், சுகாதாரம், மனநிலை, பாதுகாப்பு போன்ற அனைத்திலும் அது தாக்கத்தை விளைவிக்கும். எனவே, சமாதான, சகவாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவும் மீள்இணக்கப்பாட்டை எய்தவும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இலட்சக்கணக்கில் தொழில் புரிகிறார்கள். சிங்களவர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு நெருக்குதல்களை தருகிறார்கள் என்பதைக் காரணம்காட்டி அரபு நாடுகள் வீசா வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதிப்பதாக வைத்துக் கொண்டாலும் அதனால் பாதிக்கப்படுவது நாட்டின் பொருளாதாரமாகும். அது சிங்களவர்களில் மட்டுமன்றி முஸ்லிம்களிலும் பாதிப்பை உண்டுபண்ணும் என்பது தெளிவு.

அவசரமான தேவைகள் 

இப்படியான சூழ்நிலையில் நீடித்து நிலைக்கும், நல்ல விளைவுகளைத் தரும் பின்வரும்  நடவடிக்கைகளில் நாம் உடனடியாக இறங்க வேண்டும் :- 
இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம், ஹிந்து ஆகிய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் உயர்மட்டக் குழுவினர் ஓர் ஆய்வு முயற்சியில் ஈடுபட வேண்டும். அதாவது, மூன்று நாள் ஆய்வரங்கொன்று (றழசமளாழி) ஏற்பாடுசெய்யப்பட்டு அதில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கிப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த தீவிரவாதிகளது நடவடிக்கைகளுக்கான பின்புலன்கள் எவ்வித பக்க சார்பின்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது ஆய்வாளர்களது பொறுப்பாகும். பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன கூறுவது போல், சமூகவியலாளரது கருத்தின் படி சமாதான சகவாழ்வானது(Pநயஉநகரட ஊழநஒளைவநnஉந) சாத்தியப்பட வேண்டுமாயின் சகிப்புத்தன்மை, தவறு செய்தவர்களை கண்டுபிடிப்பது - அதாவது நீதி வழங்குவது, உண்மையைக் கண்டுபிடிப்பது, பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கும் பட்சத்தில் பாதித்தவர்கள் நஷ;டயீட்டை வழங்குவது, தவறிழைத்தவர்கள் தம் தவறை ஏற்பதுடன் மன்னிப்புக் கேட்பது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

வுழடநசயnஉந எனப்படும் சகிப்புத்தன்மை இலகுவாக ஏற்பட மாட்டாது. தப்பெண்ணங்கள், பிழையான மனப்பதிவுகள், பிழையான நடத்தைகள் இருக்கும் வரை அது சாத்தியப்படாது என்பதால் இவற்றை சீர்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். 

மேற்படி ஆய்வரங்கு நியாயயமான சிந்தனை மாற்றத்தை சிங்கள சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தலாம். இலங்கை முஸ்லிம்களுக்கும் சர்வதேச முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்போருக்கு தக்க பதிலடி கிடைக்கும். இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு, அரபு இஸ்லாமிய நாடுகளுக்கும் இலங்கைக்குமான உறவுகளும் உதவிகளும், பௌத்த தீவிரவாதத்தின் ஆணிவேரும் பின்புலனும், முஸ்லிம்களது தனித்துவங்களும் இனத்துவ அடையாளங்களும் போன்ற பல்வேறு ஆய்வு தலைப்புக்கள் தெரிவுசெய்யப்படலாம். வதந்திகளும் ஊகங்களும் பக்க சார்பான ஊடகங்களது துவேசங்களும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கால கட்டத்தில் ஆய்வினதும் ஆராய்ச்சியினதும் அடியாகப் புலப்படும் தகவல்கள் சக்தி மிக்கவையாக அமையும். இந்த கருத்தரங்கை தேசிய ஷ_ரா சபை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் போன்ற அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து ஏற்பாடுசெய்யலாம். நுணுக்கமாக, திட்டமிடப்பட்டு அது அமுலாகும் பட்சத்தில் நல்ல பல விளைவுகளை அடையப் பெறலாம்.

அத்துடன் பிராந்திய மட்டத்தில் சிங்கள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை தெளிவுபடுத்தும் ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வேண்டும். இளைஞர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், கடை வியாபாரிகள், பெண்கள் ஆகியோருக்கான விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளும் தேவை. குத்பா பிரசங்கங்களையும் பௌத்த உபன்னியாசங்களையும் சகவாழ்வை ஏற்படுத்துபவையாக அமைத்துக்கொள்ளும் வகையில் மதத்தலைவர்களுக்கான விNஷட செயளமர்வுகளும் தேவைப்படலாம். 

  மொத்தத்தில் இரு சமூகங்களும் ஒன்றில் ஒன்று தங்கி வாழ்வதால் பகைமையைத் தொடரவிடாமல் இனிமேலும் இனக்கலவரங்கள் ஏற்படாது இருக்க காத்திரமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 'சமாதான சகவாழ்வே – சுபீட்சத்தின் வழியாகும்'.

No comments

Powered by Blogger.