Header Ads



பொன்விழாக் கண்ட ஒஸ்மானியாவின் சாதனைகள் (பாகம் -1)

(எம்.எஸ்.எம்.ஜான்ஸின்)

சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் யாழ்ப்பாணத்தின் வரலாறு முக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது. அரசியல், வியாபாரம், கொடுக்கல் வாங்கல், விளையாட்டு, கலாச்சாரம் என்பவற்றில் யாழ்ப்பாணத்தவர்கள் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளனர். ஈழப் போராட்டத்திலே வாய்ப்பேச்சிலே ஆரம்பித்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை ஆரம்பத்தில் தூக்கி இறுதியில் பல்குழல் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், யுத்த விமானங்கள் என்று போரின் பரிணாமத்தை மாற்றி அமைத்த செயற்பாட்டுக்கு சொந்தக்காரர்களும் இந்த யாழ்ப்பாணத்தவர்கள்.  1990இல் வடக்கிலிருந்து 84000 முஸ்லிம்களை உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்ட போது இறுதியாக வெளியேற்றப்பட்ட 20000 முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த ஊரும்  யாழ்ப்பாணம் தான். 

1990 இல் வெளியேறிய முஸ்லிம்கள் வெறும் கைகளுடன் வேறு பிரதேசங்களுக்கு சென்று குடியிருந்தாலும் யாழ்ப்பாணத்தில் அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காலத்தில் பல்வேறு துறைகளில் பல சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றில் ஒரு முத்திரையை பதித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பதினாறு துறைகளில் யாழ்ப்பாணத்தவர் முதல் நிலை வகித்துள்ளனர்.  'துருக்கித் தொப்பி புகழ்' அட்வகேட் மர்ஹும் எம்.சி.அப்துல் காதர், கொழும்பு ஸாஹிராவின் முதல் தலைமை ஆசிரியர் மர்ஹும் ஏ.எஸ்.அப்துல் காதர், சுப்ரீம் நீதிமன்ற நீதியரசர் மர்ஹும் எம்.எம். அப்துல் காதர்,  இலங்கை அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கத்தவர் செனட்டர் மர்ஹும் ஏ.எம்.ஏ.அஸீஸ், அரசாங்க அதிபர் மர்ஹும் எம்.எம். மக்பூல், வடகிழக்கு கல்வியமைச்சின் செயலாளர் எம்.எம். மன்சூர், முதல் முஸ்லிம் பெண் எம்.பி.பி.எஸ். வைத்தியர் என்றவாறு ஏராளமான வரலாற்றுச் சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள் இந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள்.இன்றும் நம்மத்தியில்  பல சாதனைகளின் சொந்தக்காரர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பது சிலருக்கு கசப்பான ஒரு உண்மையாகும். 

இன்று செல்வந்தர்களில் ஒரு சிலர் மற்றவர்களை வீழ்த்துவதற்கு அவர்களின் கௌரவத்தை வீழ்த்த தமது செல்வத்தை பயன்படுத்துகின்றனர்.  ஆனால் இதற்கு மாற்றமாக தமது பணத்தை சமூகத்தின் முக்கிய தேவைகளை இனம்கண்டு அவற்றைச் செய்யவும் அதற்காக தம்மை அர்ப்பணித்தும் செயற்பட்டுள்ளனர் எமது மூதாதையரில் சிலர்.  கொடை வள்ளல்களான வி.எம்.எம். எஸ். அப்துல்காதர், யு.எம்.ஐதுறூஸ், எம்.எஸ்.மதார் போன்றவர்கள் பல சேவைகளை சமூகத்துக்காக செய்துவிட்டு எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளனர்.   கல்வித்துறையில் ஆழ்ந்த அக்கறை கொண்ட வீ.எம்.எம்.எஸ். அப்துல்காதர் ஹாஜியார் போன்ற அக்கால முஸ்லிம் பெரியார்களின் தளராத முயற்சியினால் 1963 ஆம் ஆண்டு ஒஸ்மானியா உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் எவ்வாறான சாதனைகளை அது படைத்துள்ளது என்பதை  இனி நோக்குவோம். 

கல்வித்துறையில் ஒஸ்மானியா

ஒஸ்மானியா கல்லூரியின் 50 ஆண்டு காலத்தில் பிந்திய அரைவாசிப்பகுதி பூரணமாகவும் பகுதியாகவும் போரின் அழிவுகளையும், அதன் வடுக்களையும், இடம் பெயர்வுகளையும் சுமந்த காலப்பகுதியாகும். சமுதாயக் கட்டமைப்பு குழம்பிப் போயிருந்த ஒரு காலகட்டமே இது. முந்திய அரைவாசிப்பகுதி ஒஸ்மானியாவின் தவழும் காலமும், நடைபயிலும் காலமுமாகும். எவ்வாறாயினும் முந்திய இவ் அரைவாசிப்பகுதியில் கணிசமான அளவு சாதனைகளை ஒஸ்மானியா புரிந்துள்ளது. பல பட்டதாரிகள் உருவாகினர். பலர் தொழில்துறைகளில் மேலோங்கினர். தொடர்ச்சியான வளர்ச்சியின் பெறுபேறுகளை பயங்கரவாதத்தின் கொடுங்கரங்கள் வேரறுத்துவிட்டன. 
ஒஸ்மானியாவின் ஆரம்ப காலத்தில் அக்கால கல்வி முறையின் பிரகாரம் எட்டாம் வகுப்பிலிருந்தே, கலைப் பிரிவுக்கும், விஞ்ஞான பிரிவுக்கும் மாணவர்கள் வேறுபடுத்தப்பட்டனர்.கலைப்பிரிவினர் பொதுவான பாடங்களுடன் புவியியல், குடியியல், சரித்திரம் போன்ற பாடங்களையும் கற்றனர். விஞ்ஞான பிரிவினர் பொதுவான பாடங்களுடன் பௌதீகவியல், உயிரியல், இரசாயனவியல் போன்ற பாடங்களையும் மூன்று ஆண்டுகள் கற்று சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றினர்.அக்காலத்தில் வர்த்தகப் பிரிவு என்ற ஒன்று தனியாக இருக்கவில்லை. 1966 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் ஒரு சில மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்கு முதல் முதலாக தோற்றினர். இவர்களில் காக்கையன்குளத்தைச் சேர்ந்த காசிம் என்ற  மாணவர் மட்டுமே கலைத்துறையில் சித்தியடைந்திருந்தார். 1968 ஆம் ஆண்டு கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்கள் சாதாரண தர பரீட்சை எழுதினர்.விஞ்ஞான பிரிவில் முதன் முதலாக சிறந்த பெறுபேற்றுடன் சித்தியடைந்து உயர்தரத்தில் விஞ்ஞானம் கற்க தெரிவான மாணவர் ஏ.சி.நஜுமுதீன் ஆவார். ஒஸ்மானியா மாணவர்களுள் இவர் விஷேட பயிற்சி பெற்ற முதல் விஞ்ஞான ஆசிரியராக விளங்கி பின்னர் கலைத்துறைப் பட்டதாரியுமானார். 

1988 ஆம் ஆண்டு ஒஸ்மானியாவின் 25 வது வருட வெள்ளிவிழாவின் போது வெளியிடப்பட்ட 'அல்ஹிக்மா' நூலுக்காக ஒஸ்மானியாவின் வரலாற்றை தொகுத்தளித்தவரும் இவரேயாவார். இந் நூலில் எமது சமூகத்தின் கல்வி வரலாறு மாத்திரமின்றி சில வாழ்வியல் அம்சங்களும்  இடம்பெற்றிருந்தன. இந் நூல் யாழ்ப்பாணத்தின் முதன்மைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ள பிரமுகர்கள் சிலரிடமும் கையளிக்கப்பட்டது. 1990 ஒக்ரோபர் முப்பதாம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்களின் பணம், நகை, உடை, சொத்துக்கள் போன்றவை கொள்ளையிடப்பட்டதுடன் அவர்களின் வரலாற்று அம்சங்களை அழிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. நாம் மற்றவர்களுக்கு துரோகம் இளைக்க கனவில் கூட எண்ணுவதில்லையென்பதால் உண்மைத்  தகவல்களை வெளியிடுவதற்கு எனது மனம் ஒரு போதும் தடைசொன்னதில்லை.  அந்த வகையில்  ஏ.சி நஜுமுதீன் ஆசிரியரின் முயற்சியால் அன்று தொகுக்கப்பட்ட அந்த நூலினூடாகவே இன்று நாம் ஒஸ்மானியாவினது வரலாற்றை அறிய முடிகின்றது. இவரை விட மர்ஹும் எம்.யு.அப்துல் கையூம் பணிப்பாளர் அவர்களும்  யாழ்ப்பாண முஸ்லிம்களின் கல்வி சம்பந்தமான வரலாற்றுப் பின்னணியை எழுதியுள்ளதுடன் சகல பாடசாலைகளைப் பற்றிய விபரங்களையும் தொகுத்;தளித்து பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.  

ஒஸ்மானியா தந்த பட்டதாரிகளுள் யு.ரி. தமீம் (கலைத்துறை பட்டதாரி)-1969, எம்.எம். ஜமால் (வர்த்தக துறை பட்டதாரி)-1970, யு.ரி.தஸ்லீம் (வர்த்தக துறை பட்டதாரி)-1970, எஸ்.ஏ.சி.எம்.புவாத் மாஸ்டர்;, இஸ்மத் மாஸ்டர், என்.எம்.தாஜ் மாஸ்டர், மக்பூல் மாஸ்டர் (மர்ஹூம்) என்றவாறு பட்டியல் நீளுகின்றது. இவர்களில் யு.ரி.தமீம் நாடறிந்த அரசியல் துறை விரிவுரையாளராக உள்ளார். எம்.எம்.ஜமால் மற்றும் யு.ரி. தஸ்லீம் ஆகியோர் இலங்கைச் சுங்க திணைக்களத்தில் உயர் பதவிகளை வகித்துள்ளனர். எம்.எம்.ஜமால் இறுதியாக சுங்க அத்தியட்சகராக  கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.  

பின்நாளில் ஒஸ்மானியாவிலே ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களில் எம்.எஸ்.கியாரத், எஸ்.ஏ.சி.எம்.புவாத், ஏ.சி.நஜுமுதீன், எம்.எம். ஜமீல், எம்.எம்.முஸாதீக் ஆகியோர் ஒஸ்மானியாவின் தயாரிப்புக்களே.  

பட்டதாரியான  ஏ.சி.ஜலீல் ஆசிரியர் அதிபர் பரீட்சை தரம் ஒன்றில் சித்தியடைந்துள்ளார். அதே போன்று எஸ்.ஏ.சி.எம்.புவாத் ஆசிரியர் அவர்கள், ஆசிரியர் தொழிலை செய்துகொண்டு பல்கலைக்கழக படிப்பை மேற்கொண்டு பட்டதாரியாக மாறி இக்கிரிகொல்லாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் விளங்கினார். என்.எம்.தாஜ் ஆசிரியர், பட்டதாரியாக விளங்கி பின்னர் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக விளங்கினார். 

இடையே பல்கலைக் கழகத்துக்கு தெரிவான மாணவர் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஒஸ்மானியா கல்வித்துறையில் மிகவும் பின்தங்கிக் காணப்பட்டது. பட்டதாரிகளின் வருமானத்தை விட சாதாரண வியாபாரிகளின் வருமானம் அதிகமாக காணப்பட்டதால் சாதாரண தர பரீட்சையுடன் அதிகமான மாணவர்கள் வியாபாரத்தை நோக்கி படையெடுத்திருந்தனர். அதேவேளை 1972 ஆம் ஆண்டு எம்.எம்.சகீர், கலீல், எஸ்.எம்.சாஹுல் ஹமீத், அலி அக்பர் (சுவிஸ்), ஏ.பி.எம்.அளீம்  ஆகியோர் சாதாரணதரப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றிருந்தனர். எம்.எம்.சகீர் 4 விசேட சித்திகளையும் 4 திறமைச் சித்திகளையும் பெற்றிருந்தார். ஜனாப் கலீல் தற்போது வவுனியா கல்வி திணைக்களத்தில் பணிபுரிகின்றார். எஸ்.எம்.சாஹுல் ஹமீத் கொழும்பு கல்வி திணைக்களத்தில் எழுதுவினைஞராகப் பணிபுரிகின்றார். அலிஅக்பர் சிறிலங்கன் விமானசேவைகள் நிறுவனத்தில் பணிபுரிந்து தற்போது சுவிஸில் வசிக்கின்றார்.

யாழ் தின்னவேலியைச் சேர்ந்த சிவாஜி என்பவரும் தற்போது கனடாவில் வசிக்கும் நயீம் ஆகியோர் 1975 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் புகுந்தனர். இவர்களில் சிவாஜி யாழ் பல்கலைக்கழகத்தில் முதல் நிலை பட்டதாரி மாணவனாக சித்தியடைந்து அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றினார்.  1975 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதிய முஹம்மது சுல்தான் ஜவுபர் என்பவர் பின்னர் கிராம அதிகாரியாக பதவி வகித்த்தார். 1986 ஜுன் மாதம் இடம்பெற்ற குண்டு வெடிப்பொன்றில் இவர் அகால மரணமானார். இவருடைய சகோதரரும் ஒஸ்மானியாவின் பழைய மாணவருமான ஜினூஸும் கிராம அதிகாரியாகவுள்ளார்.    இதன் பிறகு 1978- 1979 காலப்பகுதியில் நன்கு திறமையுள்ள மாணவர்கள் வைத்தியராக வரும் ஆசையுடன் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றனர். இவ்வாறு கல்வி கற்றவர்களில் பலர் நல்ல பெறுபேறுகளை பெற்றிருந்த போதிலும் பல்கலைக்கழகத்தில்   வைத்தியத் துறைக்கு தெரிவாகும் அளவுக்கு வெட்டுப் புள்ளிகளை பெறவில்லை.  இவர்கள் எல்லோரும்  சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

1978 ஆம் ஆண்டு பாஷையூரைச் சேர்ந்த கசியாமஸ் என்பவர் ஒஸ்மானியாவிலிருந்து என்ஜினியரிங் கல்விக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அப்துல் அஸீஸ் ஜஸுர் மற்றும் சம்சுதீன் அக்ரம் ஆகியோர்  கலைத்துறைக்கு தெரிவாகி இன்று பட்டதாரியாகியுள்ளனர். ஏ.ஏ. ஜஸுர்  தற்போது விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணி புரிகின்றார். அப்துல் கையும் சைரக் என்பவர் தொழில்நுட்ப கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் கற்று பிறகு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாகியுள்ளார் அவர் தற்போது கொழும்பு மாநகர சபையில் சிவில் என்ஜினியாராக கடமையாற்றுகின்றார். இவர்களைத் தொடர்ந்து சன்சைன் என்பவர் தொழிற்நுட்ப கல்லூரியில் கற்றார். மீரான் சாஹிப் சம்சீன் என்பவர் தேசிய தொழில் நுட்ப டிப்ளோமா படிப்பை முடித்து இன்று புத்தளத்தில் சிவில் என்ஜினியராகவுள்ளார். எஸ்.சி. அனஸ் என்பவர் ஆசிரியராகவுள்ளார். அப்துல் அஸீஸ் நவாஸுக்கு கலைத்துறையில் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது. இடையில் சவுதி அரேபியா சென்ற இவர் 1990களில் மீண்டும் தனது கற்கைநெறிகளை தொடர்ந்தார். யாழ் முஸ்லிம் அணியின் சிறந்த உதைப் பந்தாட்ட வீரரான அவர் தற்போது  பிரான்ஸில் வசிக்கின்றார்.

அடுத்த கட்டுரையில் 1980இக்குப் பின்னரான ஒஸ்மானியாவின் கல்வி நிலை பற்றி ஆராய்வோம். 

3 comments:

  1. I like to make a correction. M.M. Jamal (Customs) and Ali Akbar (Swiss) were students at Jaffna Central Collage,

    ReplyDelete
  2. வழமையாகவே சகோதரர் ஜான்சீனின் யாழ்ப்பாண வரலாற்றுக் கட்டுரைகள் என்றால், அதில் அவர் பட்டதாரியாக தெரிவு செய்யப்பட்டது பற்றியும், உதைப்பந்தாட்டம் விளையாடியது பற்றியும் குரிப்ப்டயுவதை மட்டும் நோக்காக கொண்டே எழுதப்படும் என்கின்ற பொதுவான பார்வையே காணப்படுகின்றது.

    இதுவரை இந்தக் கட்டுரையில் மேலே சொன்ன இரண்டு அம்சங்களும் தலை காட்டவில்லை, தொடர்ந்தும் இதே போன்று எழுதினால், எழுத முடிந்தால் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. There is an addition to this posting: Mr.M.M.A.Kuthoos ( Old principal ) is the first Deputy Director General of Education, in the all island muslims, at the Ministry of Education-Isurupaya.
    Mr M.M.Jaleel (Brother of M.M.Jamal )has got highest result in the commerce stream at the 1972 GCE O/L exam while A.C.Ali Akbar has got highest result in science stream in the same year.

    ReplyDelete

Powered by Blogger.