மலேசியா விமானத்தின் தேடுதல் செலவுகளை பகிர்ந்துகொள்வது எப்படி..?
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எம்எச்370 என்ற விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்குக் கிளம்பியது. ஆனால் பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே விமானம் ராடாரின் திரையிலிருந்து விலகியது. இன்று வரை அந்த விமானத்திற்கோ அதிலிருந்த பயணிகளுக்கோ என்னவாயிற்று என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் அருகே தெற்கு பசிபிக் கடலில் இந்த விமானம் விழுந்து மூழ்கியிருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் ஆஸ்திரேலியாவின் தலைமையில் இரண்டு மாதங்களுக்கும் மேலான தேடுதல் வேட்டை நடைபெற்றது.
பலன் எதுவும் கிட்டாத நிலையில் கைவிடப்பட்ட அந்த முயற்சியில் ஆழ்கடல் தேடுதல் பணி மீண்டும் துவங்கப்பட உள்ளது. இந்தப் பணி முடிவடைய எட்டு மாதங்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஆண்டு ஜூலை வரை எடுத்துக்கொள்ளும் இந்த முயற்சியில் அந்நாட்டு பணமதிப்பில் 90 மில்லியன் டாலர் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்த செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் பற்றி இன்னும் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை என்று ஆஸ்திரேலிய தேடுதல் குழுவின் தலைவர் இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆழ்கடல் தேடுதல் குறித்து விவாதிக்க மலேசிய அதிகாரிகள் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெர்ராவில் கூடியுள்ளனர். இதில் பயணம் செய்தவர்களில் பெரும்பான்மையானோர் சீனர்கள் என்பதால் அந்நாட்டு அரசும் இந்தத் தேடுதல் பணியில் பெரும் பங்கு வகித்து வருகின்றது.
ஆஸ்திரேலிய அரசின் பொறுப்பில் வரும் கடற்பரப்பில் இந்த விமானம் மறைந்திருப்பதால் இதனைத் தேடி கண்டுபிடிப்பதில் தங்களுடைய பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கமாட்டோம். மலேசியாவுடன் இந்த செலவுகள் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை என்றபோதிலும் தங்களுடைய பொறுப்புகளை ஏற்று தேடுதல் பணியைத் தொடருவோம் என்று ஆஸ்திரேலிய அரசின் பொருளாளர் ஜோ ஹாக்கி தெரிவித்துள்ளார்.
Post a Comment