யாழ்ப்பாணத்தில் மிதக்கும் அரங்குடன் கலாசார நிலையம்
யாழ்ப்பாணத்தில், 1.2 பில்லியன் ரூபா செலவில், கலாசார நிலையம் ஒன்றை இந்தியா அமைத்துக் கொடுக்கவுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்னிலையில்- இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவுக்கும், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ஜெயதிலகவுக்கும் இடையில் நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
அடுத்த 36 மாதங்களுக்குள் இந்த கலாசார நிலையம் கட்டி முடிக்கப்படவுள்ளது.
யாழ். பொதுநூலகத்துக்கு அருகே, யாழ்.மாநகரசபைக்குச் சொந்தமான இடத்தில் இந்த கலாசார நிலையம் அமையவுள்ளது.
புல்லுக்குளத்துக்கு அருகாக அமையவுள்ள இந்த கலாசார நிலையத்தின் திறந்தவெளி அரங்கு, புல்லுக்குளத்தின் நடுவே மிதக்கும் அரங்கை கொண்டதாகவும், அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் 600 பார்வையாளர்கள் அமரத்தக்க - திரையரங்குப் பாணியிலான- உள்ளரங்கு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
பல் ஊடக நூலகம், இணைய ஆய்வு வசதிகள், கண்காட்சி மற்றும் காட்சி அரங்குகள், அருங்காட்சியகம், ஆகியனவும் இந்தக் கலாசார நிலையத்தில் அமைக்கப்படவுள்ளன.
வாய்ப்பாட்டு, நடனம், ஏனைய இசைக்கருவிகள் பயிற்சி வகுப்புகளை நடத்தும் வசதிகளும், மொழி ஆய்வகமும், இங்கு அமைக்கப்படவுள்ளன.
இந்தக் கலாசார நிலையம் மதுரா பிறேமதிலக என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
29 போட்டியாளர்கள் மத்தியில் இருந்து கிடைத்த மாதிரிகளில் இருந்து இது தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment