Header Ads



'ஆட்சியாளர்களின் குறைகளைத் திருத்துவதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிகளை பாதுகாக்கலாம்'

'இனவாதிகளுக்கு இலஞ்சமாக அமைச்சர் பதவி வழங்கும் யாப்பை ஜே.ஆர்.ஜயவர்தனாவே அறிமுகப் படுத்தினார். ஜனாதிபதியாக ஆட்சியில் இருப்பவர் பெரும்பான்மையை தக்கவைக்க என்ன விலை கொடுத்ததாவது அங்கத்தவர்களை வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகுகின்றனர்' என  வீடமைப்புத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

'வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்றெல்லாம் வேலை திட்டங்களை அமுல்படுத்திய போதும் அங்குள்ள மக்களின் வாக்குகள் அரசுக்கு கிடைக்கவில்லை. மக்களின் வாக்குகள் அரசுக்கு கிடைக்க வேண்டுமென்றால் முதலில் அரசு மக்களின் மனதை வெற்றிகொள்ள வேண்டும்'  என்றும் அவர் தெரிவித்தார்.    

கண்டி தபால் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை(10) மாலை   'செய்யவேண்டியது என்ன' என்ற தலைப்பில் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'தற்போதைய அரசு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்துள்ளது. துறைமுகங்களை அபிவிருத்தி செய்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது. ஆனால் கிராமத்து உற்பத்திகள் நகருக்கு வந்து சேர்வதாக இல்லை. வடமாகாணத்திற்கு வடக்கின் வசந்தமும் கிழக்கு மாகாணத்திற்கு கிழக்கின் உதயமும் வழங்கப்பட்டாலும் அங்குள்ள வாக்குகள் அரசுக்குக் கிடைக்கப் போவதில்லை. பொதுமக்கள் மனதை வெல்லும் விடயங்களைச் செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

நவீன இலங்கையின் அரசியல் தந்தையான ஜே.ஆர்.ஜயவர்தன திட்டமிட்ட யாப்பு இன்றைய அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாக உள்ளது.

எனவே அவர்தான் இன்றைய அரசியலில் தந்தையாக உள்ளார்.

அவரது யாப்பின்படி அமைச்சரவை ஒவ்வொரு நாளும் விரிந்து கொண்டே போகிறது. அவ்வாறு விரிந்து கொண்டு போவதைத் தடுக்க முடியாது. ஏனெனில் பலரைத் திருப்திப்படுத்த வேண்டும்.

ஐ.தே.க.வில் ஒழுங்கான திறமையான  கடைசி அங்கத்தவரையும் வாங்கிவிட்டனர். இனிவாங்குவதற்கு யாரும் இல்லை. ஆனால் இனி அரசில் உள்ளவர்களை எதிரணிக்கு வாங்கும் காலம் வரும்.

இவை அனைத்தும் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேச ரீதியில் மேற்குலகு கொண்டு வந்துள்ள திட்டங்களாகும். எனவே எமது யுத்த வீரர்கள் செய்த தியாகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் ஆட்சி மாற்றம்  ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்கும் மேற்குலகின் சதிக்கு இடமளிக்க முடியாது.

ஆனால் ஆட்சியாளர்களின் குறைகளைத் திருத்துவதன் மூலம் எமது இறைமையும் நாட்டையும் எதிர்காலச் சந்ததிகளையும் பாதுகாகக்லாம்.

இதற்காக அரசை நல்வழிப்படுத்தும் போராட்டம் ஒன்றே தேவை. ஆனால், இதை வைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டை தாரை வார்க்க முடியாது என்று' அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இவங்க எப்போ குறை திருத்தி,எப்போ சந்ததிய பாதுகாத்து?

    ReplyDelete

Powered by Blogger.