Header Ads



இப்படியும் நடக்கிறது

(Vi)

அன்பாகப் பேசி பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து தங்க நகைகள் பணம் என்பவற்றைச் சூறையாடும் சம்பவங்கள் சில திட்டமிட்ட நபர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் குற்றப்பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் சிறிமல்  நேரில் வந்து கூறிய சம்பவம் ஒன்றை வாசகர்களுக்கு தருகின்றோம்.

அவர் ஒரு குடும்பப் பெண். இரண்டு பிள்ளைகளின் தாய். சொந்த ஊரிலிருந்து கொழும்புக்கு வந்த சமயம் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்தவர். இருந்த போதிலும் அவர்களின் குடும்ப வாழ்க்கை சோபிக்கவில்லை. கணவரும் சரி, பிள்ளைகளும் சரி அவரை ஒதுக்கியே வந்தனர். இந்த நிலையில் வேறு ஒருவரை மறுமணம் செய்து வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஊற்றெடுத்தது. இந்த நிலையில் பத்திரிகையில் வந்த மணமகன் தேவையென்ற விளம்பரமொன்றைப் பார்த்து ஒருவருடன் தொடர்பு கொண்டார். இந்தத் தொடர்பு காதலாக கசிந்தது. இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டார்கள். சுமார் 6 மாத காலம் வரை இவர்களிடையே தொலைபேசித் தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஒருநாள் நான் உன்னை திருமணம் செய்து பிரான்ஸிக்கு கூட்டிச்செல்கிறேன். நீ ஒருவரிடமும் சொல்லாமல் புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையத்திற்கு வந்து விடு என ஆசைவார்த்தை கூறியுள்ளான்.

குறித்த பெண்ணும் அந்த வார்த்தையை நம்பி ஒருவாறு வீட்டுக்காரரை சமாளித்து விட்டு புறக்கோட்டை பஸ்தரிப்பு நிலையத்திற்கு வந்துள்ளார். பஸ் நிலையத்தில் தொலைபேசியூடாக இருவரும் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டதுடன் ஒன்றாகச் சென்று பழச்சாறு அருந்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து தனது தம்பியாரின் வீடு ஹட்டனில் இருப்பதாகவும் அங்கு போவோம் என்றும் குறித்த நபர் அழைத்ததையடுத்து அந்தப் பெண்ணும் சம்மதித்துள்ளார். இருவரும் மிகவும் அந்நியோன்னியமாக ஹட்டன் நோக்கிச் சென்றுள்ளனர். போகும் வழியில் உணவுப் பண்டங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளான். இறுதியாக பஸ்வண்டி இரவு 7.30 மணியளவில் ஹட்டன் நகரத்தை சென்றடைந்தது.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஜேம்ஸ்பொண்ட் பாணியில் குறுந்தாடி வைத்த அந்த நபர் தன்னை நேசா என அறிமுகம் செய்து கொண்டான். அதேவேளை அந்தப் பெண்ணும் கையில் காப்புகள், மோதிரம், கைச்சங்கிலி போன்றவற்றை அணிந்து நவநாகரீகமாக காணப்பட்டாள்.

இருவரும் ஹட்டனில் இறங்கியதுடன் தம்பிக்கு ரீசேர்ட் ஒன்று வாங்கவேண்டுமெனவும் அவனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் சாராயம் ஒரு போத்தல் வாங்க வேண்டுமெனவும் கூறி அதனையும் வாங்கி வைத்துள்ளான். இறுதியாக சற்றுத்தொலைவிலேயே வீடு இருப்பதால் நடந்து சென்று விடலாம் என்று கூறி குறித்த பெண்ணையும் அழைத்துக்கொண்டு தேயிலைத் தோட்டப்பக்கமாக நடந்து சென்றுள்ளான்.

இவ்வாறு செல்லும் போது இரவு 8 மணியிருக்கும். எங்கும் கருகும்மென இருட்டு சூழ்ந்து கொண்டது. திடீரென இடுப்பில் இருந்த கத்தியை எடுத்தவனாக தகாத வார்த்தையால் பேசி அந்தப் பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளான். பின்னர் அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டாவை கழற்றி கை, கால் இரண்டையும் தேயிலை மரத்துடன் கட்டி விட்டு தான் கொண்டு வந்த சாராயத்தில் அரைவாசியை பலாத்காரமாக அந்த பெண்ணின் வாயில் ஊற்றியுள்ளான். இதனால் அந்தப் பெண் மயக்கமடைந்ததுடன் என்ன நடந்தது என்றே தெரியாது போனது. இறுதியாக அதிகாலை 2 மணியளவில் ஒருவாறு தேயிலை மரத்தை பிடுங்கிக்கொண்டு கை, கால்களில் உள்ள கட்டுகளையும் அவிழ்ந்தவாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

முதலில் அவரது தோற்றத்தைக் கண்டு அச்சம்கொண்ட அப்பிரதேச மக்கள் உடனடியாக 119க்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாருக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஹட்டன் குற்றப் பிரிவு சார்ஜன்ட் சுரநிமல் தலைமையிலான குழுவினர் அவரை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதேவேளை, இது தொடர்பில் அவரது கணவருக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெண்கள் ஏமாறும் சம்பவங்கள் அன்றாடம் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கும் பொலிஸார் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1 comment:

  1. பேராசை பெரும் நட்டம் மட்டுமல்ல, பெரும் தரித்திரியமும் கூட என்பதற்கு இதுவும் ஒரு ஒதாரணம்.

    பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சரியாக பயன்படுத்தாமையே பெண்கள் படுகுழிக்குள் செல்வதற்கான காரணங்கள்.

    பெண்களின் சொத்தில் உயிர் வாழும் முள்ளந்தண்டற்ற ஆண்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.