கட்சியின் தனித்துவம் பாராளுமன்ற அங்கீகாரம் பெறுவதா..? அதிக ஆசனங்கள் பெறுவதா..??
(நவாஸ் சௌபி)
கடந்த 03.06.2014 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர் என்றவகையில் நிலையியற் கட்டளை 23(2) க்கு அமைய பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என கூறி தம்புள்ளை பள்ளிவாசல் பற்றி ஓர் அறிக்கையை விடுக்க ரஊப் ஹக்கீம் அனுமதி கோரிய போது, அதற்கு பிரதி சாபாநாயகர் மறுப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில் நான்கு கட்சித் தலைவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காரணம் கூறினார்.
இந்நிகழ்வின் மூலம் அறிய வேண்டியவைகளும் உணர வேண்டியவைகளுமாக கருதப்படும் விடயங்களை ஆராய்வது முக்கியமான ஒன்றாகும். இதன்படி கட்சித் தலைவர் என்ற வகையில் பொது விடயம் ஒன்று தொடர்பாக கேள்வி எழுப்புவதில் கூறப்பட்ட நிலையியற் கட்டளை 23(2) எதனைக் குறிப்பிடுகிறது என நோக்குவோம்.
முன்னறிவித்தல்கள் என்ற தலைப்பின் கீழ் எடுத்துரைக்கப்படும் நிலையியற் கட்டளைகளின் 23 ஆம் பிரிவானது பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பாக விளக்குகிறது. இதில் 23(1) உறுப்பினர் ஒருவரினால் கேட்கப்படும் கேள்வி குறித்த விடயத்தை முன்வைக்கிறது அதாவது
· முன்னறிவித்தல் கொடுக்கப்படும் உறுப்பினரால் கைபொயப்பமிடப்பட்ட கேள்விகள் அல்லது பிரேரணைகள் பற்றிய முன்னறிவித்தல்கள் எழுத்து மூலம் செயலாளர் நாயகத்திற்கு முகவரியிட்டுக் கொடுக்கப்படல் வேண்டும். பாராளுமன்றம் அமரும் நாட்களில் எந்நேரத்திலும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அனுப்பலாம் அல்லது அங்கு கொடுக்கலாம் என்று இது விளக்குகிறது.
அடுத்து இதன் 23(2) ஆம் பிரிவு இவ்வாறு முன்வைக்கப்படும் முன்னறிவித்தல்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக கூறுகிறது அதாவது.
· சபாநாயகர் ஒழுங்கற்றதெனத் தீர்ப்பளித்தாலன்றிச் செயலாளர் நாயகத்துக்கு முன்னறிவித்தல் கொடுக்கப்பட்ட எல்லாக் கேள்விகளும் அத்தகைய அறிவித்தல் கொடுத்த தினத்திலிருந்து ஏழு முழு நாட்களுக்கு முற்படாத ஒரு தினத்திற்கு விடையளிக்கப்படுதற் பொருட்டு ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படுதல் வேண்டும்.
எனினும், பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றுடன் தொடர்புள்ள கேள்வியொன்று கேள்விகள் முடிவடையும் போது சம்பந்தப்பட்ட அமைச்சருக்குப் போதுமான முன்னறிவித்தல் கொடுக்கப்பட்ட பின்னர் எதிர்கட்சித் தலைவரினாலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவரினாலோ கேட்கப்படலாம்.
மேற்படி இரண்டாவது பந்தியில் கூறப்பட்டுள்ள விஷேட ஏற்பாட்டுக்கு அமையவே ரஊப் ஹக்கீம் தனது பொது விடயம் குறித்த கேள்வியை கேட்க இந்த நிலையியற் கட்டளையை குறிப்பிட்டார்.
இங்கு தனிப்பட்ட உறுப்பினர் ஒருவரின் கேள்விகள் செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டு சபாநாயகர் மூலம் அனுமதிக்கப்படுவதை இந்நிலையியற்கட்டளை வலியுறுத்தினாலும் விஷேடமாக எதிர்கட்சித் தலைவருக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவர்களுக்கும் பொதுவிடயம் குறித்த கேள்விகள் பிரேரணைகளை குறிபிட்ட அமைச்சருக்கு போதுமான முன்னறிவித்தல் கொடுத்துவிட்டு கேட்கலாம் என்ற சிறப்பினை வழங்கி இருக்கிறது.
எனவே மேற்படி நிலையியற்கட்டளையின் படி பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கபட்ட கட்சிகளின் தலைவராக ரஊப் ஹக்கீம்; இல்லை என்ற காரணம் கூறப்பட்டே அவரது வேண்டுகோள் பிரதி சபாநாயகரால் மறுக்கப்பட்டிருக்கிறது. நிலையியற் கட்டளை 23(2) இன் படி பிரதி சபாநாயகரின் மறுப்புச் சரியானதே.
ஏனெனில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளானவை இணங்கப்பட்ட விதிகளாகும். இவற்றின் கீழ் நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன சீரமைக்கப்பட்டுள்ளன. நிலையியற் கட்டளைகளின் பிரதான நோக்கமானது பாராளுமன்றத்தில் ஒழுங்கமைதியுடைய காத்திரபூர்வமான செயற்பாடுகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை வகுத்துரைப்பதாகும். நிலையியற் கட்டளைகள் பாராளுமன்ற நடவடிக்கைகளின் மிக முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரீசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குவனவாகவும் உள்ளன. இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் கீழ் நிலையியற் கட்டளைகளுக்கு விதிகளுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
எனவே இங்கு கட்சிக்கு கட்சி தலைவர்களுக்குத் தலைவர் என்ற அடிப்படையில் இந்த நிலையியற் கட்டளைகளை மாறுபட்ட விதத்தில் பிரயோகிக்க முடியாது. அது எல்லோருக்கும் ஒன்றானதுதான்.
மேற்படி நிகழ்வு எமக்கு உணர்த்துவது என்ன? பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதன் முக்கியத்துவம் எத்தகையது? ஒரு கட்சியின் தனித்துவம் பாராளுமன்றத்தில் தனக்கான ஒரு குரலையாவது சுதந்திரமாகக் கொண்டிருப்பதன் அவசியம் இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
பாராளுமன்றத்தில் தலைமைத்துவ அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக நேரடியான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட கட்சிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்ற கட்சிகள் பாராளுமன்றத்தில் தனிக் கட்சி அந்தஸ்த்தைப் பெறுவதில்லை என்பது இதனால் நன்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.
பாராளுமன்ற ஆசனங்களை அதிகரித்துக்கொள்வதற்கும் பிரதான கட்சிகளின் ஆட்சிப் பங்காளர்களாகுவதற்கும் தமது கட்சியின் சின்னத்தையும் தனித்துவத்தையும் விட்டுக்கொடுத்து மற்றுமொரு கட்சியின்; சின்னத்தில் பாராளுமன்றம் செல்வது நமது சமூகம் குறித்த அவசியமான ஒரு கேள்வியை எழுப்புவதற்கு கூட அங்கீகாரம் இல்லாத ஒரு அந்தஸ்த்தை நமக்கு அளிக்கிறது என்றால் எமது தேர்தல் வியூகங்கள் எதனை நோக்கி இருக்கின்றன.
தனித்துவமாக நமது கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் இன்னுமொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் பாராளுமன்றத்தில் வௌ;வேறான கட்சி அந்தஸ்த்தினையும் பலாபலன்களையும் அளிக்கிறது என்றால்? தனித்துவமான கட்சி பிரதிநிதித்துவங்களை தேர்தல் மூலம் பெற்று பின்னர் வேண்டிய கட்சிகளுடன் கூட்டிணைவது பற்றியும் நாம் சிந்திக்கலாம். அல்லது வெற்றி உறுதியான பிரதேசங்களில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு ஏனைய பிரதேசங்களில் தேவையான கட்சியுடன் இணைந்து போட்டியிட்டும் எமது தேர்தல் வியூகங்களை இடத்துக்கு இடம் மாற்றியமைக்கலாம். இந்த நடைமுறைகள் இதற்கு முன் பல தேர்தல்களில் பின்பற்றப்பட்ட அனுபவங்களும் எம்முன் இருக்கின்றன. இது இவ்வாறு இருக்க ஒரு கட்சியின் தனித்துவம் முழுமையாகப் பறிபோவது இறுதியில் எங்கு பாதிப்பினை அல்லது தடையினை ஏற்படுத்துகிறது என்பது இன்று மிகக் காரமாக தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றமாக 2010 இல் அமையப் பெற்ற நடப்பு பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டுக் கட்சியாகவே பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றது. இதனை அன்று ரஊப் ஹக்கீம் பொது விடயம் குறித்த கேள்வியை எழுப்ப வாதாடியபோது ரணிலும் அவருக்கு நினைவுபடுத்தியிருந்தார்.
இதில் இன்னுமொரு விடயம் பாராளுமன்ற நேர ஒதுக்கீட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் நேர ஓதுக்கீட்டினைத்தான் முஸ்லிம் காங்கிரஸூம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே இதன்படி நோக்கின் பாராளுமன்றத்தில் உரையாற்றும் நேரம் இன்னுமொரு கட்சியின் அங்கீகாரத்திற்கு உட்பட்டிருப்பது அபத்தமானதே. இது உடன்படிக்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மறுக்கப்படக் கூடியதாகவும் அமையலாம். இது நிலையியற்கட்டளை 23(2) ஐ விட ஆபத்தானது.
மேலும் பிரதி சாபாநாயகர் இப்பாராளுமன்றத்தில்; அங்கீகரிக்கப்பட்;ட தலைமைகளையுடையதாகக் கூறிய நான்கு தனிக் கட்சிகளும் இவையே.
1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 144
2. ஐக்கிய தேசிய கட்சி 60
3. இலங்கை தமிழ் அரசு கட்சி 14
4. ஜனநாயக தேசிய முன்னணி 07
இவ்வாறு மொத்தமாக 225 ஆசனங்களுக்குமாக மேற்படி நான்கு கட்சிகளும் இப்பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதில் இன்னுமொரு விடயம் 2014 ஜனவரி 29 ஆம் திகதி தேர்தல் ஆணையாளரினால் உறுதிப்படுத்தப்பட்டதற்கமைய இன்று இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக 64 கட்சிகள் காணப்படுகின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரவேசமான 1989 லிருந்து இவ்வாறு பாராளுமன்றத்தில் தனிக் கட்சி அங்கீகாரத்தைப் பெறாத நிலை இப்போது இரண்டாவது தடைவையாக நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றமான 2000 ஆம் ஆண்டில் உருவான பாராளுமன்றத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சின்னத்தில் போட்டியிட்டு அக்கட்சியின் அங்கமாகவே பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தது.
இதுதவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது பாராளுமன்றப் பிரவேசமாக அமைந்த 1989 லிருந்து அதன் பின்னரான 1994, 2001, 2004 ஆகிய நான்கு பாராளுமன்றக் காலங்களிலும் தனித்துவமான பாராளுமன்ற அங்கீகாரம் பெற்ற கட்சியாகவே அது செயற்பட்டிருக்கிறது.
மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் 1989 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தொடக்க நாளில் உரையாற்றுகையில் 'முதல் முதலாக முஸ்லிம் தனிக் கட்சி ஒன்றின் தலைவராக இப்பாராளுமன்றில் உரையாற்றுவதில் பெருமையடைகிறேன்' என்ற கருத்தில் தனது உரையைத் தொடங்கி இருக்கிறார். என்றால் பாராளுமன்றத்தில் தனிக்கட்சி அங்கீகாரம் என்பது எவ்வாறு உணரப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு மிகவும் ஆழமாக வலியுறுத்தப்படுகிறது அல்லவா?
Post a Comment