ஈராக்கின் நகரங்கள் முஸ்லிம் போராளிகளிடம் வீழ்ந்தன - சதாம் ஹுசைன் பிறந்த ஊரையும் கைப்பற்றினர்
சிரியாவில் நடைபெறும் ஷன்னி- ஷியா பிரிவினர்களுக்கிடையேயான யுத்தம் அண்டை நாடான ஈராக்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியதை முன்னிட்டு அங்கும் வன்முறைக் கலவரங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன.
சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை இணைத்து புதிய இஸ்லாமிய தேசத்தை அமைக்க விரும்பும் ஐ.எஸ்.ஐ.எல். என்ற தீவிரவாத அமைப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நேற்று சதாம் ஹுசைன் பிறந்த ஊரான திக்ரித்தும் அவர்கள் வசம் வீழ்ந்தது.
தலைநகர் பாக்தாதை நோக்கி முன்னேறும் இவர்களின் வசம் இன்று சாடியா மற்றும் ஜலவ்லா நகரங்களும் அவற்றைச் சுற்றியுள்ள ஹிம்ரீன் மலைப்பகுதி கிராமங்களும் வந்தன. இந்தப் பகுதிகள் நீண்ட காலமாக போராளிகளுக்கான பதுங்கிடங்களாகச் செயல்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே சமயத்தில் ஈராக்கின் வடக்குப் பகுதியில் சுயாட்சி நடத்தி வரும் குர்திஷ் அரசு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எண்ணெய் வளம் மிக்க கிர்குக் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
மேலும், போராளிகள் ஜலவ்லா நகரத்தை முற்றுகையிடும் முன்னரே அங்குள்ள தங்கள் அலுவலகங்களுக்கு இவர்கள் பாதுகாப்பினை ஏற்படுத்தினர். இந்த இரு குழுவினருக்கும் இடையே அதிகாரம் குறித்த மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை. போராளிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட உதவுமாறு ஈராக் பிரதமர் நூரிகி- அல்- மாலிகி அமெரிக்காவிடம் முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தங்கள் நாடு வான்வழித் தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தரைப்படைகள் அங்கு அனுப்பப்படமாட்டாது என்று அரசு அதிகாரிகள் பின்னர் வலியுறுத்தினர்.
கடந்த 2003-ம் ஆண்டில் சதாம் ஹுசைனை பதவியிறக்கியபோதே அங்கிருந்த ஷன்னி மைனாரிட்டி சமூகத்தினரின் குறைகளைக் களைந்து குழுவாத பிரிவினை ஏற்படா வண்ணம் செய்ய வேண்டிய சாத்தியங்களை ஈராக் அரசு செய்யத் தவறிவிட்டதாக ஒபாமா குறிப்பிட்டார்.
ஈராக் அரசிற்கான விழிப்புணர்வு எச்சரிக்கை அழைப்பு இதுவாக இருக்கக்கூடும், இதற்கான அரசியல் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்தார்.
Post a Comment