கிழக்கு மாகாணத்தில் இன ரீதியாக, காணிகள் கபளீகரம் - ஏ.எம்.ஜெமீல்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்கு மாகாண காணி ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா.குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வில் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய உறுப்பினருமான எஸ்.சந்திரகாந்தனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனி நபர் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2200 ஏக்கர் காணியை மாவட்ட அரசாங்க அதிபர் தனியார் கம்பனி ஒன்றுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கியதை ஆட்சேபித்து உறுப்பினர் சந்திரகாந்தன் இப்பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
அங்கு உறுப்பினர் ஜெமீல் மேலும் பேசுகையில் கூறியதாவது;
"கிழக்கு மாகாணத்தில் இன்று காணிப் பிரச்சினைகள் பூதாகரமாக மாறியுள்ளன. அரச காணிகள் மாத்திரமல்லாமல் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் கூட அபகரிக்கப்பட்டு வருகின்றன. இன ரீதியாகவும் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனால் இன முரண்பாடுகள் கூட விஸ்பரூபம் எடுக்கின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2200 ஏக்கர் காணியை மாவட்ட அரசாங்க அதிபர் தனியார் கம்பனி ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கி இருப்பது தொடர்பில் உறுப்பினர் சந்திரகாந்தன் இப்பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
உண்மையில் தனியார் கம்பனிகளுக்கு காணிகள் வழங்கப்படுவதன் மூலம் பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எமது பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திக்கும் எமது இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்புகளுக்கும் பங்களிப்பு செய்யப்படுமாயின் நாம் அதனை அங்கீகரிப்பதும் ஒத்துழைப்பு வழங்குவதும் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் நமது கடமையாகும்.
ஆனால் அரச காணிகள் தனிப்பட்ட தேவைகளுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதையும் நாம கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தற்போது தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் காணி பற்றி மட்டுமல்லாமல் சந்திரகாந்தன் முதலமைச்சராக பதவி வகித்த போது வழங்கப்பட்ட காணிகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும். இதற்காக மாகாண காணி ஆணைக்குழுவை உடனடியாக நிறுவ வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் காணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் கிழக்கு மாகாண மட்டத்தில் மாத்திரம் காணிக் குழு இன்னும் நிறுவப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதனை அமைப்பதற்கு கிழக்கு மாகாண சபை உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு மாகான காணி ஆணைக்குழு நியமிக்கப்படுவதன் மூலம் கடந்த காலங்களில் எமது மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட காணி கைமாறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து அதிகாரபூர்வாக ஆராய முடியும் என்பதை இந்த சபையின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
உண்மையில் கடந்த காலங்களில் தனியாருக்கு வழங்கப்பட்ட காணிகள் எவை, எந்தெந்த கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன, அவற்றினால் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் எவை, அவற்றின் மூலம் எமது மக்கள் நன்மை பெறுகின்றனரா? போன்ற விடயங்கள் தொடர்பில் சுயாதீனமான முறையில் விரிவாக ஆராயப்பட வேண்டும்.
இதன் ஊடாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் முறைகேடாக வழங்கப்பட்ட காணிகளையும் பொது நலன் எதுவுமின்றி சுய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற காணிகளையும் இனம் கண்டு அவற்றை மீட்டெடுக்க முடியும் என நம்புகின்றேன்.
அரச காணிகள் என்றாலும் சரி, பொது மக்களின் காணிகள் என்றாலும் சரி, எவரும் முறைகேடான முறையில் அவற்றை கையகப்படுத்தவோ தவறாக பயன்படுத்தவோ ஒருபோதும் இடமளிக்க முடியாது. கிழக்கு மாகாண சபை இது விடயத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டியுள்ளது.
ஆகையினால் கிழக்கு மாகாணத்திற்கான காணி ஆணைக்குழுவை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த சபையை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்" என்று ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்தார்.
அதேவேளை உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனி நபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்திற்கான காணி ஆணைக்குழுவை உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment