Header Ads



கல்முனை முஸ்லிம்களுக்கு அரசு வழங்கிய கைமாறு..!

(நவாஸ் சௌபி)

கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் மொகான் விக்ரம ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளமை பல வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவிக்க கூடிய ஒரு அதிரடித் திருப்பமாக பார்க்கப்படுகிறது. முழுமையான முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கும் இந்நிகழ்வு நடைமுறையில் மிகவும் அரிதானதும் புறநடையானதுமாகும். 

சட்டரீதியாக இதனை ஏற்றுக்கொள்ளும் அவசியமிருந்தாலும் நியாயபூர்வமாக இதனை ஏற்க முடியாது என்ற அடிப்படையில் இதுதொடர்பான மாற்றுக்கருத்துக்கள் எழுகின்றன. ஏனெனில் இலங்கையின் பிரதேச செயலகங்கள் பல நிலத்தொடர்பு கொண்ட பல்லினச் சமூகங்களை உள்ளடக்கி இருந்தாலும் அவை யாவும் இனத்துவ அடிப்படையில் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளமையை யாரும் மறுக்க முடியாது. 

அதாவது குறிப்பிட்ட பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு அந்ததந்த சமூகங்களுக்கான பிரதேச செயலகங்கள் செயற்படுவதனை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் இது வழமைக்கு மாற்றமான ஒரு தோற்றத்தையும் கொடுத்திருக்கிறது.

தேசிய மட்டத்திலிருந்து பிரதேச மட்டம்வரை வழங்கப்படும் உயர் பதவிகள்  அவ்வவ் சமூகத்தை மையப்படுத்தி வழங்கப்படாவிட்டால் அங்கு வாதப் பிரதிவாதங்கள் எழுவது இயல்பான ஒன்றாக அமைந்துவிடுகிறது.   

அதிலும் குறிப்பாக தற்கால நடைமுறையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிரதேச நியமனங்கள் எதுவும் மாற்றுச் சமூகத்திலிருந்து நியமிக்கப்படாமல், குறிப்பிட்ட பதவிக்கு எங்கிருந்தேனும் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அழைத்துவரப்பட்டு பதவி வழங்கும் நிலை  இன்றும் நியாயபூர்வமாக இருந்து வருகிறது. 

இத்தகைய யதார்த்த நிலைமைகள் இருக்கத்தக்கதாக கல்முனை பிரதேச செயலகத்திற்கு பெரும்பான்மைச் சமூக பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டமை பின்வரும் கருத்து நிலைகளை செவிகளுக்கு கொண்டுவருகின்றன.

1. பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதிக்க நுழைவுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதாக ஒரு சாராரின் கருத்தும்,

2. கல்முனை பிரதேச செயலகத்தின் உப அலுவலகமாக இயங்கும் தமிழ் பிரிவு மீண்டும் கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைந்து செயற்படப் போவதாகவும் அதற்கு முன் ஏற்பாடாக இரண்டு இனமும் இல்லாத ஒரு பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டதாக மற்றொரு சாராரின் கருத்தும்,

3. கடமையிலிருந்த எமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்து வெற்றிடத்தை நாங்கள் உருவாக்கியமையால்தான் இந்த இடத்திற்கு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருக்கிறார். இடமாற்றம் செய்ய முன்நின்றவர்கள் அதற்கு மாற்று வழியான ஒருவரையும் கொண்டுவந்திருக்க வேண்டும் ஆனால் இன்று நிலைமை பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்றாகியிருக்கிறது என்று மற்றொரு தரப்பினரின் கருத்தும் இதில் பரிமாறப்படுகின்றன.

மேற்படி கருத்துக்கள் யாவும் சரியாக இருப்பது போன்றும் அந்தந்த தரப்பினரால் வாதாடப்படுகின்றது. ஆனால் இது விடயத்தில் அர்த்தமற்ற வாதாட்டங்களைவிட அடக்காமான செயற்பாடுகளே அவசியமானதாகும். 

குறிப்பாக கல்முனை பிரதேச செயலகத்திற்கு ஒரு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதில் பெரும்பான்மை ஆதிக்கம் உள்நுழைவதாக நாம் புரிந்து கொண்டால் அது புதிதான ஒன்றாக இருக்க முடியாது. ஏனெனில் ஏற்கனவே கிழக்கு மாகாணத்தையும், அம்பாறை மாவட்டத்தையும் அரசியல்ரீதியாக நாம் பறிகொடுத்த நிலையில் இப்போது தொகுதியையும் பறிகொடுத்திருக்கின்றோம் என்றுதான் இதனை கடந்த கால அனுகுமுறைகளோடு பார்க்க வேண்டும். 

கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணம் இங்கு ஒரு மாகாண ஆட்சி இருக்கிறது, இதில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்கிறார் நான்கு அமைச்சர்களைக் கொண்ட ஒரு அமைச்சரவை இருக்கிறது. இருந்தும் என்ன பயன் அதிகாரம் யாருடைய கைகளில் இருக்கிறது? இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களில் உள்ள முதலமைச்சர் அதிகாரங்கள் போன்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுகிறதா? எல்லாவற்றிலும் ஆளுனரின்  ஆதிக்கமும் தலையீடும் மேலோங்கி இருப்பதாக எமது அரசியல் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டும் அதற்கு எதுவித பயனுமில்லாமல் கிழக்கு மாகாணத்தை நாம் பறிகொடுத்திருக்கவில்லையா?

அடுத்து அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் இதிலும் தமிழ் முஸ்லிம் மக்களே பெரும்பான்மை சமூகமாக இருந்தும் இதுவரை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்படுபவர்கள் யார்? இன்று மாவட்ட செயலகத்தில் பட்டதாரி நியமனங்கள் தொடர்பாக முஸ்லிம் தமிழ் சமூத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் எத்தகைய சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள் என்பதை நாம் அறியாமல் இருக்கின்றோமா? இன்று தமிழ் முஸ்லிம் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பபடும் அலுவலகக் கடிதங்கள் சிங்கள மொழியில் இருப்பதை தெரியாமல் போகின்றோமா? இந்த மாவாட்ட அதிகாரத்திற்கு மேலாக எமது அரசியலை எம்மால் பயன்படுத்த முடிகிறதா? அதற்கும் முடியாமல் நாம் அரசியல்ரீதியாக மாவட்டத்தை பறிகொடுத்திருக்கவில்லையா?

இப்படி மாகாணம், மாவட்டம் என்பவற்றை இழந்து அவற்றின் கீழ் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இருக்கும் எங்களால் தொகுதியையும் பறிகொடுத்து இருக்க முடியும் என்று நினைத்தார்களோ! ஏனெனில் இதற்காக நாம் எந்த அரசியலையும் மாற்றி அமைக்கப் போவதில்லையே! 

அடுத்த கருத்தாக கூறப்படுவது கல்முனை பிரதேச செயலகத்திலின் உப பிரிவாக இயங்கும் தமிழ் பிரிவு மீண்டும் கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கேட்கும் போது வேலியால் போகும் ஓணானை சட்டைக்குள் பிடித்து விடும் கதையாகவே தெரிகிறது. தற்காலிகமாக இயங்கும் ஒன்றை நிரந்தரமாக்கி விடும் ஒரு ஏற்பாட்டுக்கு இது வழிவகுத்துவிடும் என்ற வெளிப்பாட்டையும் இதனுள் ஆளமாகப் பார்க்க வேண்டும். 

ஆனால் கல்முனை பிரதேச தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தமிழ் முஸ்லிம் பிரிவினைகளுக்கிடையில் ஏற்படும் இடைவெளியில் யார் வந்து அமர்கிறார் என்பது கண்முன்னே காட்டப்பட்டிருக்கிறது. எமது பிரிவினையில் யார் குளிர்காய்கிறார்? யாருக்கு இது நன்மையாகிறது? இந்நிலை தொடர்ந்தால் நாம் திண்பாருக்குத் தேன் எடுத்துக் கொடுக்கும் சமூகமாகவே இருந்துவிடுவோம்.

அடுத்து கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையிலிருந்த எமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இடமாற்றப் செய்யப்பட்டது புதிய பிரதேச செயலாளர் வருகைக்கு முக்கிய காரணம் என்ற கருத்துக் கூறப்படுகிறது. 

இக்கருத்தின் படி நோக்கின் கடமையிலிருந்தவர் 5 வருட முடிவின் போது இடமாற்றம் பெற வேண்டிய கட்டாயத்திலிருந்தார் அதனூடாக இடமாற்றம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ற வெளிப்படையான காரணம் இருந்தாலும். இது தவிர அவர் மீது வேறு எதுவும் ஒவ்வாமைகள் காணப்பட்டாலும் இருப்பவரை அனுப்புகின்ற போது எமக்கு மாற்று வழி என்ன இருக்கிறது என்ற தேவை உணரப்பட்டிருக்க வேண்டும். அது உணரப்படாமல்  இருந்துள்ளமை இதன் மூலம் தெளிவாக விளங்குகிறது.

5 வருடம் பூர்த்தியான நிலையில் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என்ற அவசியமிருந்திருந்தால் அதே 5 வருடம் பூர்த்தியான சாய்ந்தமருது பிரதேச செயலாளரை கல்முனைக்கும் கல்முனையில் கடமையிலிருந்தவரை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கும் மாற்றம் செய்ய முற்பட்டிருக்கலாம். இந்த விடயத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளரைக் கல்முனைக்கு நியமிப்பதில் விருப்பமில்லாத ஒரு மனநிலை செயற்பட்டிருப்பது நன்கு தெரிகிறது. ஏனெனில் கல்முனை பிரதேச செயலாளராக பதில் கடமை புரிய அட்டாளைச் சேனைப் பிரதேச செயலாளர்தான் நியமிக்கப்பட்டிருந்தார்  அருகிலிருந்த சாய்ந்தமருது பிரதேச செயலாளரை கடந்து அவ்வாறான ஒரு கடமைப் பொறுப்பு வழங்கப்பட்டதன் பின்னால் உள்ள அரசியல் என்ன? இதே காலத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு பதில் கடமைக்காகச் சென்று கொண்டிருந்தார். 

எனவே எங்களுக்குள் இருக்கும் அரசியல் ஆதிக்கங்களும் பிரதேச வாதங்களும் எங்களுக்கான இடங்களை பெரும்பான்மைச் சமூகத்தைக் கொண்டு நிரப்ப வைத்திருக்கிறது. அதற்கு வழிவகுப்பவர்கள் நாங்கள்தான். நாங்களே வாய்க்காலை வெட்டி விட்டு ஊரானின் தண்ணி பாய்கிறது என்று புலம்புவது எந்தவகையில் நியாயமானது? 

கல்முனையின் புதிய பிரதேச செயலாளர் நியமனத்திற்கு முஸ்லிம் சமூத்தைச் சேர்ந்த பொருத்தமானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அது மறுக்கப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறதா? அவ்வாறு பரிந்துரைக்கு பொருத்தமானவர்களை இவர்கள் இதுவரை வழங்காது இருந்தமையால் வேறு வழியில்லாமல் இந்நியமனம் பெரும்பான்மைச் சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்விகளும் இதில் உள்ளடங்குகின்றன.

எது எவ்வாறு இருப்பினும் இறுதியாக ஒரு கேள்வி எழுகிறது ஜெனிவா விசாரணைக்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆதரவாக கல்முனை முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் சென்றமைக்கு கைமாறுதான் இந்த நியமனமா? 

No comments

Powered by Blogger.