Header Ads



ரவூப் ஹக்கீமின் வாக்குறுதி காற்றில் பறக்குமா..? நிலைக்குமா..??

(தந்திமகன்)

இன்றைய அரசியலில் நாளை எதுவும் நடக்கலாம் என்பதை நன்குணர்ந்து கொண்ட இன்றைய நாடாளும் கட்சியில் கட்டுண்டு சகல சுகானுபவங்களையும் சுகித்துவிட்டு இனி வெளியேறுகின்ற நிலையில் மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும் என்பதற்காக அரங்கேற்றப்படுகின்ற ஒருவிடயம்தான் தேசியப் பட்டியல் விவகாரம். இன்னும் சில மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கின்ற முக்கிய தேர்தல் ஒன்றுக்காக மக்களை மன்னர்களாக சித்தரிக்க முயல்கின்ற தேர்தல் காலம் ஓடிவரப்போகின்றது. அப்போது சென்றால் மக்கள் நம்பமாட்டார்கள் முன்னராகவே சென்று சில வித்தைகளை காட்டிவித்தால் மக்கள் நம்புவார்கள் என்பதை நன்குணர்ந்து கொண்ட முஸ்லிம்களின் முக்கிய கட்சியின் தலைமைப்பீடம் அத்தனைபேரும் ஒன்று சேர்ந்து கிழக்கில் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தை வட்டமிடத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் கல்முனையில் கூட்டணியினரோடு பேச்சுவார்த்தை, சம்மாந்துறைக்கு கட்டாயம் பாராளுமன்ற ஆசனம், அட்டாளைச்சேனையில் தேசிய பட்டியல் எம்பி, என அனல்தெறிக்கும் வாக்குறுதிகள். தேர்தல் முடிந்துவிட்டால் இந்த வாக்குறுதிகள் அனைத்துமே மங்கி மறைந்துவிடுமா? நிலைத்து நிற்குமா?

அண்மைக்காலமாக இலங்கையின் ஆளும் அரசுடன் தாமரை இலையில் நீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதாகக் முகாவினர் கூறிக் கொண்டாலும் சில கட்டங்களில் முஸ்லிம்களுக்கு விரோதமான பிரேரணைகளின்போது ஆதரவு தெரிவித்தும் கொண்டனர். இந்நிலையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்று வருகின்றபோது ஜனாதிபதியுடன் பேசுவதற்கும், ஜனாதிபக்கு கடிதம் எழுதுவதற்கும் அழைப்பாணைவிடுப்பதும் ஏன் என மக்கள் கேட்கின்றனர். ஒன்றாக இருந்து ஒரு அமைச்சரவையில் உள்ளவர்கள் கடிதம் மூலம் பேசுவதற்கு நமது ஜனாதிபதி என்ன அமெரிக்காவிலா வாழ்கிறார். மக்களை ஏமாற்ற இந்த இந்த கபட நாடகம் எத்தனை நாளைக்குத்தான் என்கிற விபரம் புரியாமல் இப்போது புதிய வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் வீசி வருகின்றனர் இவர்கள்.

சில வாரத்திற்கு முன்னர் கல்குடா தொகுதி மக்களுக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படுவதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. இப்போது அட்டாளைச்சேனைக்கும் தேசியப் பட்டியில் பற்றி பேசப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் பொத்துவிலுக்கும் தேசியப் பட்டியல் வழங்குவதற்கு இக்கட்சி வாக்குறுதி வழங்கலாம். அப்படியானால் தேசியப் பட்டியல் எம்பி என்ன கொழும்பில் விற்கும் கடைச்சரக்கா? என்று மக்கள் கேட்கிறார்கள். இது ஒருபுறமிருக்க கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவி இரண்டாண்டுகளின் பின்னர் முகாவினருக்கு வழங்கப்பட வேண்டுமென கொள்கையளவில் ஒப்பந்தம் பேசப்பட்டிருந்தாலும் அதனை இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கின்றது அரசு என்கிற குற்றச்சாட்டுக்களையும் இவர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ள தமிழர் கூட்டணியினரோடு சங்கமித்துவிட்டால் ஆளும் அரசிலிருந்து முகாவினர் சிலவேளை விலகினால் தமிழர்களின் ஒத்துழைப்போடு முதலமைச்சர் பதவியை தம்பக்கம் இழுத்துக் கொள்வதற்கான ஆதரவை வழங்குவதற்காக கல்முனையில் பேச்சுவார்த்தை. ஏனெனில் தமிழர் முஸ்லிம்களுக்குள் ஏற்பட்டுள்ள தரவைக் கோயில் விவகாரம் போன்றவற்றை சமாளித்து தமிழர்களோடு ஐக்கியப்படுகின்ற பேச்சுக்கள் ஊடாக இதனை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவே இப்பேச்சுவார்த்தைகள் பேசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதில் உண்மைகள் இருக்கலாம் என்பதையும் தாண்டி கிழக்கில் வாழும் ஒரேமொழி பேசுகின்ற மக்களிடையே இயல்பான புரிந்துணர்வுகள் மூலமாக முக்கிய இரண்டு கட்சிகளும் மனமிட்டுப் பேசியதன் மூலம் இன ஐக்கியத்திற்குள் இருதரப்பாரும் உள்வாங்கப்பட்டுள்ளமை சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும் என்கின்றனர் சமாதானத்தை விரும்புகின்ற மக்கள்.

ஆனால் இப்பேச்சுவார்த்தை இன்னும் தொடரும் என்கிற கதைகள் கூறப்பட்டாலும் அரசியல்வாதிகள் சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது மாறிவிடுவார்கள் என்பதையும் உணர்ந்து மக்களின் நலனில் அக்கரையாக இருக்க வேண்டும் என்பதே சமாதான சகவாழ்வாளர்களின் நம்பிக்கை. இருந்தாலும் எதிர்காலத்தில் நடைபெறப் போகும் தேர்தல் ஒன்றுக்கான நாடிபிடிக்கும் செயலாகவே மக்கள் இந்தக் கட்சிகளின் நடமாட்டத்தை காண்பதாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ நல்லது நடைபெற்றால் அதுவே நலமளிக்கும். ஆனால் வெறும் மேடைப் பேச்சுக்கள் ஊடாக மக்கள் மத்தியில் அவநம்பிக்கைகளை ஏற்படுத்தாமல் பேச்சும் செயலும் ஒன்றாக இருப்பதுதான் முஸ்லிம்களின் சமயரீதியான சித்தாந்தமாகும் என்பதை முக்கிய முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களும், அதன் தலைமைப்பீடமும் அறிந்து கொள்ளவேண்டும்.

அதேவேளை கிழக்கின் முதலமைச்சசர் பதவி முஸ்லிம் காங்கிரஸிக்கு உடனடியாக வழங்கப்படுதல் வேண்டுமென கிழக்கு மாகாண அமைச்சரான ஹாபீஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அதாவது, கிழக்கு மாகாணத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கே வழங்கப்படவேண்டும் என அண்மையில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதேவேளை அப்பதவி யாருக்கு வழங்கவேண்டும் என்பதை முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடமும்- முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார். மேலும், நாம் கிழக்கு மாகாணசபையில் பங்காளிக் கட்சியாகவும் அதன் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ளோம். எனவே வேறு எந்தக் கட்சிகளும் இப்பதவிக்கு உரிமை கோரமுடியாது. கிழக்கு மாகணசபைத் தேர்தலின்போது ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்களின் சார்பில் ஏற்கனவே முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் பதவி வகித்துவருகின்றார். அடுத்து மரச்சின்னத்தில் தனித்து போட்டியிட்ட முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு இப்பதவி வழங்கப்படும். இப் பதவி சம்பந்தமாக வேறு கட்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் சமூக நலனை மையமாகக் கொண்டு தொழிற்படுகின்றது. எனவே எந்த முடிவுகளும் முஸ்லிம் சமூகத்தின் நலனைக் கருத்திற் கொண்டே எடுக்கப்படும். தனிப்பட்டவர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இயங்காது'  என்கிற தொனியில் மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசிர் அஹமட் தெரிவித்திருக்கின்றார். இது எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்பதை எதிர்வரும் காலங்களில் அவதானிக்க முடியும். அதேநேரம் ஆளும் கட்சியுடன் உறவு கொள்ளும் வரையில்தான் இந்த நிலைமைகள். அரசிலிருந்து வெளியேறும் நிலைக்குள் முகாவினர் தள்ளப்பட்டால் கிழக்கில் தமிழர் தரப்பினருடன் ஒன்று சேர்ந்து ஆட்சியை அமைப்பதற்கும் கல்முனையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மேலும் பல பேச்சுவார்;த்தைகள் பேசப்படலாம். அப்போது கிழக்கின் சபையை அரசு கலைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதேநேரம் அம்பாரை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்டத்தின் பிரச்சார செயலரான அப்துஸ் ஸலாம் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையொன்றில் 'கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தை ஆளும் அரசு செய்கின்றது' என்றும், 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் முஸ்லிம்களை ஏமாற்றி எதிர்வருகின்றது. தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கபட நாடகத்தை  அரங்கேறுகிறது' எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 'இது விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.  எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக ஜனாதிபதியவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதன் மூலம் மீண்டும் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் திருப்திப்படுத்த முனைந்துள்ளார்.

அதற்கான ஆதவை ஜனாதிபதித் தேர்தலில் பெற்றெடுக்க முற்படுவதையும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த முதலமைச்சர் விடயத்தை வைத்து முஸ்லிம்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி அவர்களையும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் பலப்படுத்திக் கொள்ள கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் நாடகமொன்றை அரங்கேற்ற முற்படுகின்றமை தொடர்பாக  முஸ்லிம் வாக்காளர்கள் மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்' எனவும் ஸலாம் தெரிவித்துள்ளார்.

முகாவின் பாராளுமன்ற உறுப்பினரும், அதன் செயலாளருமான எம்ரீ. ஹஸன் அலி அண்மையில் கருத்துரை ஒன்றினை வழங்கும்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிiடேய ஏற்பட்டுள்ள ஒற்றுமையீனத்தை பற்றி விசனம் தெரிவித்திருந்தார். அதாவது முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயற்படுகிறார்களா? அல்லது ஒளித்து விளையாடுகிறார்களா? என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக தானும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்ற வகையில் வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் உண்மையான மனதுடன் ஐக்கியப்பட்டு செயற்பட்டால் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மை அழைத்துப் பேசியிருப்பார். ஆனால், எமது பலவீனம், எம்மிடையே காணப்படும் ஒற்றுமை இன்மை போன்றனவற்றை ஜனாதிபதி உட்பட சிங்கள அரசியல் தலைமைகளும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இவ்வாறான எமது பலவீனங்கள் காரணமாகவே எமது வேண்டுகோள்களையும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும் இப்போது எவரும் பெரிதாகக் கண்டு கொள்கிறார்கள் இல்லை. எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம்களுக்கு எதிராக இன்று எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் எமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து ஒரு மாதத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள் விலகியிருப்பது தொடர்பில் நான் ஆலோசனையை முன்வைத்திருந்தேன். இந்த ஆலோசனைக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இப்போது ஒரு சாதாரண மாமூலாகி விட்டது. ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் ஒரு சம்பவம் இடம்பெற்றுக் கொண்டே உள்ளது. இது இப்போது பழகிப் போன ஒரு விடயமாகப் போய் விட்டது. இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவும் நாமே காரணமாக இருந்து கொண்டிருக்கிறோம். என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இந்த விடயம் தொடர்பாக இவர் வெளிப்படையாக கூறியிருப்பது அரசுடன் ஒட்டிக் கொண்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை திகைப்படையச் செய்திருக்கும். ஆனால் சுகபோகங்களை அனுபவிக்கும் இவர்களால் ஆளும் அரசிலிருந்து விலகத்தான் முடியுமா? அப்படி விலகுவதாக இருந்தால் தங்களுடைய கட்சிக்காரர்களையும், தமது தலைவரையும் விலகிச் செல்ல ஏன் கூறமுடியாதுள்ளது. எல்லாமே அரசியல் விநோத விளையாட்டுக்களே என்பதுதான் உண்மையாகும்.

இந்த கருத்துக்கு ஒப்பான விடயமாகத் தோன்றும் தேசிய பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தருவதாகக் கூறப்படுகின்ற விடம் அட்டாளைச்சேனை பிரதேசத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸிற்காக தன்னை உருக்கி மரணித்துப்போன மசூர் சின்னலெவ்வைக்கு வழங்கப்படுவதாக இக்கட்சியினால் முன்னர் கூறப்பட்டது. அதுமட்டுமன்றி இந்தப் பிரதேசத்தில் முகாவினை நீரூற்றி வளர்த்த கட்சியின் முதல் செயலாளர் நாயகமாகவும், அடிப்படையான போராளியாகவும், கட்சியில் இன்றும் இரண்டாவது இலக்க அங்கத்துவத்தைக் கொண்டவருமான சிரேஷ்ட சட்டத்தரணியும், கட்சிமாறாத தொண்டனுமான எஸ்.எம்.ஏ. கபூருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அது இன்னும் நடைபெறவில்லை. மட்டுமன்றி இன்னும் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற பலர் இருக்கின்ற இந்தப் பிரதேசத்தில் அப்படி வழங்கப்படுவதாக இருந்தால் அவரின் பெயரை முகாவின் தலைமைப்பீடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

அப்படியில்லாமல் வெறும் பேச்சளவில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் நாளடைவில் மறந்தேவிடும். அதுபோன்று கடந்தகாலங்களில் நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டங்களின்போது அட்டாளைச்சேனையை சொர்க்கபுரியாக்கி தருவதாக வாக்களித்த அரசியல்வாதிகளால் எதுவுமே நடைபெறவில்லை. போனது போகட்டும் இனிமேலாவது இந்த உறுதிமொழி மட்டும் காற்றில் பறக்காமல் இருக்குமாக இருந்தால் முழுமையாக இக்கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி நட்டாட்டில் விட்டுவிடுவதையும், நம்பிக்கைக்கு துரோகம் செய்வது கடுமையான பாவம் என்பதையும் முஸ்லிம்களின் சன்மார்க்கம் போதிக்கின்றது. இதில் மண்போடாமல் பாதுகாக்க வேண்டியது முகாவினரின் கடமையாகும். நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments

Powered by Blogger.