Header Ads



'சர்வதேச விசாரணையென்பது, எமது நாட்டை தாரை வார்த்துக் கொடுக்கும் செயல்'

இலங்கை மிகப்பெரிய அபாயமொன்றினை சந்தித்துள்ளது. தாய் நாடா அல்லது சர்வதேசமா என்பதை அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க வேண்டும் என அரசாங்க பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்பன தெரிவித்துள்ளன.

சர்வதேச விசாரணை தேவையா இல்லையா என்பது தொடர்பில் பாராளுமன்றில் அவசர பிரேரணையொன்றினை சமர்ப்பித்து வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் எனவும் இவ் இருதரப்பும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் இருந்தே நாம் கூறி வந்தது இன்று உண்மையாகிவிட்டது. சர்வதேச விசாரணையென்பது கட்டுக் கதை எனக் கூறியவர்கள் தற்போது என்ன பதில் கூறப்போகின்றனர். எமது நாட்டின் எம்மால் உருவாக்கப்பட்ட அமைதியினையும் சுதந்திரத்தினையும் சீரழிக்கவே நவநீதம்பிள்ளை முயற்சிக்கின்றார். இதற்கு ஒரு போதும் தாம் இடமளிக்கக் கூடாது. இன்று பிரிவினை வாதிகளின் தேவை நிறைவேறி வருகின்றது. சர்வதேச விசாரணையினை ஏற்படுத்தி அதன் மூலம் தனி ஈழத்தினை உருவாக்கும் தமது கனவினை நனவாக்க முயற்சிக்கின்றனர். நாட்டில் இராணுவ குற்றங்களை விசாரிக்கும் உரிமை இந்த அரசாங்கத்திடம் உள்ளது. அதை விடுத்து சர்வதேசம் இங்கு வந்து விசாரணைகளை நடாத்த வேண்டிய தேவை எமக்கு இல்லை. 

உடனடியாக மக்கள் தீர்ப்பொன்றை நோக்கி அரசாங்கம் செல்ல வேண்டும். இந்த நாட்டிற்கு எது தேவை என்பதை தீர்மானிக்க வேண்டியது இந்நாட்டு மக்களே. எனவே அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் உடனடியாக அவசர பிரேரனையொன்றினை சமர்ப்பித்து வாக்கெடுப்பினை நடத்த வேண்டும். இதில் எதிர்க் கட்சிகள் தமது நிலைப்பாடு என்னவென்பதை உறுதியாக தெளிவுபடுத்த வேண்டும். தாய் நாட்டிற்கு முக்கியத்துவமா அல்லது சர்வதேசத்திற்கு துனை போகப் போகின்றீர்களா என்பதை அனைத்து எதிர் தரப்புகளும் தீர்மானிக்க வேண்டும். அதேபோல் எதிர்க் கட்சிகள் இத்தனை காலமாக நாட்டிற்கு செய்து வந்த தேசத் துரோக செயற்பாட்டினை சரி செய்யக் கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை கொண்டு வரப்பட்டதையடுத்து ஜாதிக ஹெல உறுமய கட்சியிடம் வினிவய போது அக்கட்சியின் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்ததாவது. 

இலங்கை மிகப் பெரியதொரு அபாயத்தினை சந்தித்துள்ளது. வெறுமனே பேச்சுவார்த்தைகள் மூலம் சென்று கொண்டிருந்த இலங்கை பிரச்சினை தற்போது சர்வதேசத்தின் தலையீட்டினை உள் கொண்டு வரும் நிலைக்கு வந்து விட்டது. இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் இராணுவ குற்றங்களை விசாரிக்க தற்போது இக் குழுவினர் வரவில்லை. வடக்கில் உள்ள பிரிவினைவாதக் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தனித் தமிழ் ஈழத்தினை உருவாக்கவே இவ் ஐ.நா. விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக மக்கள் தீர்வொன்றினை நோக்கி செல்ல வேண்டும். இப்போதே எமது பதிலடியினை பலமாக கொடுக்காவிடின் எமது நாடு எமக்கே இல்லாது போய் விடும்.

நாட்டில் இணக்கப்பாட்டினை உடனடியாக ஏற்படுத்த முடியாது. மக்களின் மூலமாகவே நாட்டில் புரிந்துணர்வு செயற்பாடுகளை கொண்டு வர முடியும். இதற்கு கால அவகாசம் கொடுத்து  அதற்குள் சரிசெய்யக் கூடிய விடயமில்லை. தீவிரவாதிகளை அடியோடு அழிக்கவே மூன்று தசாப்தம் எடுத்தது. அவ்வாறான நிலையில் இணக்கப்பாட்டினை மாத்திரம் எவ்வாறு ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்துவது. யுத்தத்தில் ஏற்பட்ட காயம் இன்னமும் ஆரவில்லை என்பது உண்மையே. ஆயினும் அந்த காயத்தினை ஆறவிடக்கூடாது. மேலும் வேதனைப்படுத்தும் செயலை சர்வதேசம் செய்கின்றமையே உண்மை.

சர்வதேச விசாரணையென்பது எமது நாட்டை நாமே தாரை வார்த்துக் கொடுக்கும் செயல். இதற்கு ஆளும் தரப்பு மட்டுமல்ல எதிர்த்தரப்பும் இணங்கக்கூடாது. ஆளும் கட்சியோ அல்லது எதிர்க் கட்சியோ தமிழர்களோ சிங்களவர்களோ அனைவரும் வாழ்வது இந்த நாட்டிலேயே. எனவே, எமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்க்க வேண்டும். இவ்வாறு சர்வதேசத்தை உள்நுழைய விடுவது மிகவும் மோசமான விளைவினை ஏற்படுத்தி விடும்.

அரசாங்கத்திற்கு எவ்விடயத்திலும் நாம் துணை நிற்போம். அதே போல் தேசிய சுதந்திர முன்னணியின் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. சர்வதேச விசாரணை தேவை என்று நாங்களும் சொல்ல வில்லை, நவநீதம் பிள்ளையும் சொல்ல வில்லை அரசாங்கம் சர்வ தேசத்திற்கு சமர்ப்பித்த "கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் " என்னவாயிற்று என்பதை ஆவலுடன் கேட்கிறோம்..!
    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியும் காற்றில் பறந்தது, சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியும் காற்றில் பறந்தது என்றால் விடுவார்கள்ளா?

    ReplyDelete
  2. Sarwathesa pada wanthaththan iwerkalukku puriyum srilanka arasukku aliwu pidiththu wittathu

    ReplyDelete

Powered by Blogger.