Header Ads



கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது இனவாத தாக்குதல்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து இனவாத ஆட்சி நடாத்திவரும் கிழக்கு முதலமைச்சரின் பச்சை துவேசத்தனத்திற்கு முடிவு கட்டவிருக்கிறோம். இதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் சூளுரைத்தார்.

சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அறநெறி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு சீற்றத்துடன் சூளுரைத்தார்.

கோரக்கர் ஆலய பிரதிநிதி கே.சசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் கே.ஜெயசிறில், பாடசாலை அதிபர் எம்.விஜயகுமாரன் ஆலய தலைவர் சின்னவன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமிழ்மக்கள் அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி இனறு இராஜதந்திரப் போரை நடாத்தி வருகிறார்கள். இப்போருக்கு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுவடிவம் கொடுத்துள்ளது.

இவ் இராஜதந்திரப் போரால் இன்று மாகாணசபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது பொலிஸ் அதிகாரம் வழங்க அரசு முன்வந்திருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் த.தே.கூட்டமைப்பின் இராஜதந்திர காய்நகர்த்தலே.

தமிழ் மக்களின் காணி உள்ளிட்ட உரிமைப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து பெறக்கூடிய ஒரே தகுதி எமது கட்சிக்கே உண்டு. அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ்க் குழுக்ளாலோ ஒட்டுண்ணிகளாலோ இது முடியாது.

கிழக்கு மாகாணசபை தமிழ் மக்களையும் தமிழர் பிரதேசங்களையும் திட்டமிட்டு புறக்கணித்து இனரீதியாகச் செயற்படுகிறது. இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள 10 கிராமிய அபிவிருத்தித் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கிராமம் கூட தெரிவு செய்யப்படவில்லை.

மட்டு.மாவட்டத்தில் இனவிகிதாசாரம் பேணப்படவில்லை. கடந்தாண்டும் இதே நிலை.

கிழக்கு மாகாணசபை இவ்வாண்டு தெரிவு செய்யப்பட்ட 10 கிராமங்களை 50  மில்லியன் ருபா செலவில் அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் நஜீப் எ மஜீத் தெரிவித்திருந்தார்.

கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 76 மில்லியன் ருபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்தாண்டு 20 மில்லியன் ருபாவும் இவ்வாண்டு 50 மில்லியன் ருபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவு செய்யப்பட்ட 10 கிராமங்களும் தலா 50 லட்சருபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகவும் மஜீத் மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, றகுமானியா பாத், சம்மாந்துறை மஜீட்புரம் மற்றும் நாகேஸ்பவ எனும் 04 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 03 முஸ்லிம் கிராமங்களும் ஒரு சிங்கள கிராமமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இத்ததெரிவில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கிராமம் கூட தெரிவு செய்யப்படவில்லை. கடந்தாண்டும் இத்திட்டத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கிராமம் கூட தெரிவு செய்யபடவில்லை.

அம்பாறையில் தமிழர்கள் இல்லையா? ஏனிந்த அநீதி? பாராபட்சம்? மஹிந்த அரசுகூட கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின்கீழ் இன மத பேதம் பாராட்டாமல் 10லட்சருபா ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்தாண்டு இப்பாரபட்சம் இடம்பெற்றபோது நான் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி சபைக் கூட்டத்திலும் கிழக்கு மாகாணசபை அமர்விலும் எனது கடும் ஆட்சேபனையை எதிர்ப்பை பகிரங்கமாகவே எழுத்துமூலம் தெரியப்படுத்தினேன். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை.

ஆனால் இவ்வாண்டும் அதே பச்சைப் பாரபட்சம் அநீதி அரங்கேறியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் சதாம்ஹூசைன் மாதிரிக்கிராமம், வாழைச்சேனை காவத்தைமுனை, முனைக்காடு மற்றும் கருங்காலிச்சோலை ஆகிய கிராமங்கள் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 2 தமிழ்க் கிராமங்களும் 2 முஸ்லிம் கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அதாவது இங்கு தெரிவில் இனவிகிதாசாரம் பேணப்படவில்லை. இனவிகிதாசாரப் படிபார்த்தால் 3 தமிழ்க் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் கிழக்கு மாகாணசபை பாராபட்சத்தை இனவாதத்தை கக்கிவருகிறது. மேடையில் மட்டும் இன ஜக்கியத்தை பேசுவாhர்கள். செயற்பாடுகளிலும் நிதி ஒதுக்கீடுகளிலும் முஸ்லிம்களை மையமாகவைத்தே இனரீதியாக செயற்பட்டுவருகிறார்கள்.

உண்மையில் யுத்தத்தாலும் சுனாமியாலும் கிழக்கு மாகாணத்தில் அதிகூடுதலாகப் பாதிக்கப்பட்டவை தமிழர் பிரதேசங்களாகும். எனவே அவர்களுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணசபை என்பது மூவினங்களுக்கும் சொந்தமானது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டையும் உள்ளடக்கியதே. இதனை முதலமைச்சரும ஏனையோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறே எதிர்வரும் சமச்சீரான பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் நிதியொதுக்கீடும் குறித்தவொரு இனத்திற்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுவிடுமோ என்ற நியாயமான அச்சமும் எழுந்துள்ளது.

இனியும் இதனை அனுமதிக்க முடியாது. சர்வாதிகார ஆட்சி செய்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் என்றார்.

No comments

Powered by Blogger.