சகல அரசியல் கட்சிகளையும் அழைத்து கொள்கை பிரகடனம் வெளியிடவுள்ள ஜாதிக்க ஹெல உறுமய
நாட்டின் அனைத்து கட்சிகளையும் ஒரே மேடைக்கு அழைத்து கொள்கை பிரகடனம் ஒன்றை வெளியிடுவதற்கு ஜாதிக்க ஹெல உறுமய கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, அரசியலமைப்பு திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், சமகால அரசியல் செயற்பாடுகள், சக்திவலு, விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான மாநாடு ஒன்றுக்கு ஜாதிக்க ஹெல உறுமய அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
தமது கொள்கை பிரகடன வெளியீட்டின் ஊடாக இதற்கான அழைப்பினை விடுத்துள்ளதாக கட்சியின் தலைவர் அத்துரலீய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கட்சி பேதமின்றி அனைவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் அனைத்திற்கும் திறந்த அழைப்பினை விடுத்துள்ளதாக ரத்தன தேரர் குறிப்பிட்டார்.
இதுதவிர, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜனநாயக கட்சி ஆகியவற்றிற்கும் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு தாம் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கலந்துகொள்வது தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணி நிலைப்பாடு குறித்து hfm செய்திச் சேவை அதன் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மிலிடம் வினவியது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலீயே ரத்தன தேரரின் நிகழ்வு தொடர்பில் தமது கட்சிக்கு அழைப்பு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்வது தொடர்பாகவும், கருத்துகளை வெளிப்படுத்துவது தொடர்பாக கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்படி, சந்திப்பில் கலந்து கொள்வது மற்றும் கலந்து கொள்வது யார் என்பது பற்றி தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், குறித்த கொள்கை பிரகடன மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சி கலந்து கொள்வது தொடர்பில் அதன் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து வெளியிட்டார்.
அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்;டிய தருணம் வந்துள்ளது என்ற கொள்கை அனைவரிடமும் உள்ளது.
ஜாதிக்க ஹெல உறுமய அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாயின் அதனை பிழையான கோணத்தில் நோக்கப் போவதில்லை.
எனினும், இந்த மாநாடு குறித்து உத்தியோகபூர்வ அழைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ளதா என்பது குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜாதிக்க ஹெல உறுமயவிடமிருந்து ஜே.வி.பிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்துள்ள போதும், அதில் கலந்து கொள்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளும் அமைப்புகள் மற்றும் கட்சிகள் தொடர்பாக கவனம் செலுத்திய பின்னரே தமது பங்களிப்பு குறித்து அறிவிக்கவுள்ளதாக ஜே.வி.பியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
சிறுபான்மையினருக்கு "சங்கு" ஊத தயாராகின்றது..!
ReplyDeleteஜாதிக ஹெல உறுமய அப்படி என்ன தீர்மானம் எடுக்கப்போகின்றது என்பது சொல்லவே தேவையில்லை. நாடு முன்னேற இனங்களுக்குள் சமாதானம் நிலவ இதுபோன்ற இன முறண்பாடுகளைத்தீண்டும் கட்சிகளையும் தலைவர்களையும் இனங்கண்டு ஒதுக்கி வைத்தால் ஒழிய வேறு வழிகளால் நாட்டுக்கு நிம்மதி கிடைக்கப்போவதில்லை.
ReplyDelete