மரத்துக்கு மக்கள் வேராக இருக்கின்றார்கள், மக்களுக்கு மரம் நிழலாக நிற்கவில்லை..!
(நவாஸ் சௌபி)
இன்று ஞாயிற்றுக்கிழமை (15.06.2014) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25வது பேராளர் மாநாடு முக்கிய பல செய்திகளை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பிலிருக்கும் பலரின் அரசியல் அவதானங்களுக்கு மத்தியில், எனது தலைப்பினை அதற்கு அடிக் குறிப்பாக இடுகிறேன்.
மேலும் நடைபெறும் பேராளர் மாநாட்டில் நடக்க வேண்டியது என்ன என்பதைக் குறிவைத்து அதற்கு முன்னுரையாக அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம் அவர்கள் ஆற்றிய உரைக்கான பின்னிணைப்பாக இதனை எழுதுகின்றேன்.
உரை :
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தில் பதவிகளையும் சுகபோகங்களையும் அனுபவித்தவாறு கட்சிக்கும் தலைமைத்துவத்துக்கும் எதிராக சிலர் செயல்படுகின்றனர். இவ்வாறானவர்களை எதிர்வரும் பேராளர் மாநாட்டின் போது கட்சிப் பதவிகளில் அமரவிடாமல் தடுக்க வேண்டிய தேவை உள்ளது.
பின்னிணைப்பு :
மேற்படி உரையில் அரசாங்கத்தின் பதவிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பவர்கள் என்று தவம் யாரைக் குறிப்பிடுகிறார்? கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் எதிர் கட்சியிலா இருக்கின்றார்? தலைவரே அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியுடனும் சுகபோகங்களுடனும்தான் இருக்கின்றார். இன்று முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் ஒரு கட்சியாகத்தான் பாராளுமன்றத்தில் செயற்படுகிறது.
மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் அரசுடன் கூட்டுச் சேர்ந்த ஒரு ஆட்சியை அமைத்து அங்கும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருப்பது எந்தக் கட்சி? இது தலைவருக்கும் கட்சிக்கும் எதிராக நடந்த விடயமா? அவ்வாறான ஒரு மாகாணசபையின் உறுப்பினராகத்தான் தவமும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் தன்னையும் சேர்த்துத்தான் இதனைப் பேசியிருக்கிறார் என்றுதான் எடுக்க வேண்டும்.
எனவே அரசின் பதவிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பவர்கள் என்று கட்சிக்குள் ஒரு சாராரே மாத்திரம் தலைவரிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. தலைவரும் கட்சியும் அரசுடன் இணைந்திருக்கும் நிலையில் கட்சியிலிருப்பவர்கள் அரச நலன்களுக்காக கட்சிக்கும் தலைமைக்கும் எதிராகச் செயற்படுகிறார்கள் என்று விமர்சிக்கப்படுவது எந்தவகையிலும் நியாயமற்றதாகும்.
மாத்திரமல்லாமல் 'கட்சியையும் கட்சியில் மீதமிருப்பவர்களையும் காப்பாற்றுவதற்கே நான் அரசுடன் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது' என்று ரஊப் ஹக்கீம் பல சந்தர்ப்பங்களில் மேடைகளில் அங்கலாய்த்துமிருக்கின்றார் என்றால் அரசுடன் இணைந்தது பதவிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பதற்கு அல்ல என்பது தலைவரின் தெளிவான முடிவு. எனவே அரசுக்கான ஆதரவை கட்சியிலிருக்கும் யார் வழங்கினாலும் தலைவரின் நியாயப்படி அது கட்சியைக் காட்டிக் கொடுப்பதாக இல்லாமல் காப்பாற்றுவதாகவே பார்க்கப்படல் வேண்டும் என்பதில் தலைவரின் முடிவை ஆதாரமாகக் கொண்டு தவம் இதில் தெளிவு பெற வேண்டும்.
உரை :
எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை மட்டுமே நாம் குறைகண்டு கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மட்டுமே கட்சியின் பாரங்களைச் சுமக்க வேண்டுமென நாம் நினைக்கின்றோம்... ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்குள் நடக்கும் காட்டிக் கொடுப்புகளையும் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளையும் நாம் கண்டும் காணாமல் இருந்துவிட்டு கடைசியில் தலைவரையும் செயலாளரையும் குறைகாண்பதென்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பின்னிணைப்பு :
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரைக் குறை கூறுவதும், அவர் மட்டும் கட்சியின் பாரங்களைச் சுமக்க வேண்டி ஏற்படுவதும் எதற்காக? கட்சியின் யாப்பு அனைத்து முடிவுகளும் இறுதியாக தலைவரினால் எடுக்கப்படும் என்று குறிப்பிடுகிறது என்றால், கட்சியின் பாரத்தை யார் சுமக்க வேண்டும்? அவ்வாறு எடுக்கும் முடிவுகள் தவறானதாக மக்களால் அறியப்படும் போது அதன் விமர்சனங்களையும் குறைகளையும் யார் தாங்க வேண்டும்?
முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் கட்சியிலிருந்து விலகி, முன்னாள் பிரதி அமைச்சர் நிஜாமுத்தீன் கட்சியில் சேர்ந்த நிலையில் சாய்ந்தமருது மத்திய குழுவினர் கூடித் தீர்மானித்தபடி தலைவருக்கு எழுத்து மூல அறிக்கை ஒன்றை அனுப்புகையில்,
சாய்ந்தமருதுவில் யாரைக் கட்சியில் சேர்ப்பதென்றாலும் யாரைத் தேர்தலில் போட்டியிட செய்வதானாலும் அதுபற்றி மத்திய குழுவின் சிபாரிசு பெற வேண்டும் என்று தலைவருக்குப் பணிக்கப்படுகிறது என்றால் இவை யாவும் தலைவரின் தனித்துவ முடிவினால் நடந்தது என்றும் அதற்கான குறைகளையும் பாராத்தையும் அவர்தான் சுமக்க வேண்டும் என்றும் சாய்ந்தமருது மத்திய குழு சுட்டிக்காட்டுவது தெளிவாகத் தெரிகிறது அல்லவா?
எனவே இதுபோன்று கட்சிக்குள் தலைவர் சுமக்கும் பாரங்கள்; பல நூறு இருக்கின்றன. வாகனம் விபத்துக்குள்ளானால் தண்டனை பயணிகளுக்கு அல்ல சாரதிக்குத்தான். கட்சி வகுத்த பாதையிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற வாகனம் விலகிச் செல்லுமானால் அதன் குறைகளும் பாரமும் ரஊப் ஹக்கீம் என்ற சாரதி மீதுதான் சுமத்தப்படும். முடிவு தலைவருடையது என்றால் சுமையும் அவருக்கானதுதான்.
அடுத்து முஸ்லிம் காங்கிரஸூக்குள் நடக்கும் காட்டிக்கொடுப்புகளையும் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளையும் கண்டும் காணாமல் இருப்பது என்ற கருத்தில் காட்டிக் கொடுப்பு என்பது என்ன அர்த்தத்தில் இங்கு சொல்லப்படுகிறது? அரசின் பதவிகளுக்கும் சௌகரியங்களுக்குமாக கட்சியை பலவீனப்படுத்தி கட்சியிலிருப்பவர்களை விலைக்கு வாங்கமுடியும் என்பதை வெளிப்படுத்துவது காட்டிக் கொடுப்பின் அர்த்தமானால் இதைச் செய்தவர் யார்? இதன் வழிகாட்டி கட்சியின் தலைவர்தானே! 2002 ஆம் ஆண்டிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருக்கையில்தான் நாம் பல அவலங்களைக் கண்டோம். அதனால்தான் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் பிரகடணம் செய்தோம்.
பொதுவாகக் கூறினால் கட்சியின் தலைவர் உட்பட கட்சியிலிருக்கும் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காட்டிக்கொடுப்பினைச் செய்திருக்கின்றார்கள் என்று விமர்சிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எனவே கட்சியின் தலைவர் செயலாளர்களினால் மட்டும் இந்தக் கட்சி வளரவும் இல்லை, வாழவும் இல்லை கட்சி அழிந்துவிடக் கூடாது என்ற மக்கள் எண்ணம்தான் இன்றும் இந்தக் கட்சியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் என்ற வேர் அறுந்து போனால் மரம் என்ற இந்தக் கட்சி என்றோ விழுந்திருக்கும். ஆனாலும் இன்னும் மரத்துக்கு மக்கள் வேராக இருக்கின்றார்கள் ஆனால் மக்களுக்கு மரம் நிழலாக நிற்கவில்லை என்பதும் எமது இன்றைய அரசியலில் நன்கு புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
உரை :
முஸ்லிம்காங்கிரஸூக்கு தற்போது பேரம் பேசும் தருணமொன்று வாய்த்திருக்கிறது. இதை மிக லாவகமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து நீங்கள் ஒரு முடிவை எடுங்கள் என்று தலைமைத்துவத்தின் தலையில் எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு நமது கடமையை நாம் முடித்துக் கொள்ள முடியாது.
பின்னிணைப்பு :
முஸ்லிம் காங்கிரஸூக்கு தற்போது மட்டுமல்ல எப்போதும் பேரம் பேசும் தருணம் வருவதுண்டு. அதனை மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் முறையாக நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் இன்றுள்ள தலைமையின் காலங்களில் வந்த பேரம் பேசும் தருணங்கள் யாவும் என்ன பயனைத் தந்தது?
இப்போதுள்ள இப்பாராளுமன்றக் காலத்தை எடுத்துக்கொண்டால் அரசின் 18 வது திருத்தத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்ததில் என்ன பேரம் பேசும் பலம் இருந்தது. 18வது திருத்தத்திற்கு வாக்களித்தது வரலாற்றுத் தவறு என்று இன்;றும் தலைவர் அதற்காக வருத்தப்படும் வேதனைதான் மிஞ்சியிருக்கிறது. கடந்த மாகாண சபைத் தேர்தல் பிரச்சார மேடைகளில் இதனை அவர் வெளிப்படையாகப் பேசியுமிருக்கிறார்.
அதேபோன்று கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசின் ஆட்சிக்கு கூட்டாகச் சேர்ந்ததும் நல்லதொரு பேரம் பேசும் தருணம்தான் இதற்காக பேசிப் பெற்ற சமூக விடிவு என்ன? அல்லது உரிமை என்ன? அதுவுமில்லையேல் அபிவிருத்தியேனும் என்ன? இறுதியாக ஒரு முதலமைச்சரையாவது பெறமுடிந்ததா?
இத்தகைய பேரம் பேசும் தருணங்கள் எதுவும் சாதிக்காத நிலையில் இப்போது தவம் கூறும் பேரம் பேசும் தருணம் எதைச் சாதிக்கப் போகிறது? தவத்தின் பேரம் பேசும் கதை, திருமணம் முடித்து பிள்ளைகள் பல பெற்றவனிடம் திருமணம் முடிப்பது எப்படி? என்று சொல்வது போன்றிருக்கிறது. இனி அவனுக்குத் தேவை திருமணம் முடிப்பது எப்படி என்பது அல்ல பிள்ளைகள் வளர்ப்பது எப்படி என்பதுதான்.
உரை :
தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலொன்று அறிவிக்கப்படுமானால் முஸ்லிம் காங்கிரஸ் தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்ளும் வேறு எந்தக் கட்சிக்கும் பிரச்சினை இல்லை.
பின்னிணைப்பு :
இதில் முஸ்லிம் காங்கிரஸூக்குள்ள ஒரேஒரு தர்மசங்கடம் நாம் ஆதரிக்கும் கட்சி தோற்றால் நமது நிலை என்ன என்பதுதான். ஆனால் அதைவிடவும் பெரிதான தர்மசங்கடம் மக்களுக்கு இருக்கிறது. அது நாம் இன்னும் முஸ்லிம் காங்கிரஸை நம்பி பின்னால் போகலாமா? என்பதுதான்.
எல்லாத்தேர்தல்களிலும் தனித்து நின்று போட்டியிட்டால் தெரியும் ...........!!! எந்த மரத்துக்கு யார் வேராக இருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் நிழலாக இருக்கிறார்களா என்று....???
ReplyDeleteமுதலாவது உரையில் தாக்கி இருப்பது பசீர் சேகு தாவுத் அவர்களை என்று தெள்ளத்தெளிவாக விளங்கவில்லையா..!
ReplyDeleteஇரண்டாவது உரை அரசியல் அவதானிகளுக்கு விந்தையாக இராது குதிரை வீரனாக இருந்த போது அவரும் அதைத்தானே செய்தார்..!
மூன்றவது உரை ஸ்ரீ.மு. கா எனும் கூடாரத்திற்குள் ஒட்டகம் நுளைய முயற்சிக்கிறது..!
நான்காவது உரையின் பின்னிணைப்பில் கேட்கக்கூடாத கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது..! தலைவரின் மறைவிற்கு பின் இருந்து 2014வரை ஸ்ரீ.மு.கா என்ன செய்திருக்கிறது மக்களுக்கு/ சமூகத்திற்கு / உணர்ச்சிகரமான தேர்தல் கால பேச்சினால் எம் வாக்குகளை சுவீகரித்து அமைச்சுப்பதவிக்காக தாரை வார்த்திருக்கிறது..