'புற்றுக்குள்ளிருந்து படமெடுத்தாடும் விஷப்பாம்பு போலுள்ள பொதுபலசேனா' - மாவை சேனாதிராஜா
புற்றுக்குள்ளிருந்து படமெடுத்தாடும் விஷப்பாம்பு போலுள்ள பொதுபலசேனா அமைப்பு பல சூழ்ச்சிகளை சிறுபான்மை சமூகங்களுக்கெதிராகச் செய்து கொண்டிருக்கின்றன னஎன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் ஜெனீவா தீர்மானமும் எனும் தலைப்பிலான மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்
குறிப்பாக பொதுபலசேனா இராவண சேனா போன்ற இனவாதம் கக்கும் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்ய வேண்டும் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டுமென்றெல்லாம் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் கல்முனைப் பிராந்தியத்தில் புத்திஜீவிகளென நாமம் சூட்டிக்கொண்டுள்ள சுயநலமிகளான சில தமிழர்கள் விஷம் கக்கும் பலசேனாவின் அடிவருடிகளாக செயற்படுவது வருந்தத்தக்க விடயமாகும்.
இத்தகைய அடிவருடிகள் ஒருபோதும் புத்திஜீவிகளாக இருக்கவே முடியாது. ஜெனீவா மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் நிறைவேற்றப்படவிருந்த சந்தர்ப்பத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற நாதத்தை முன்வைத்து பொதுபலசேனா எம் மத்தியிலேயே படமெடுத்தாட இந்த புத்திஜீவிகள் வழிவகுத்துக் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு இனத்தைக் காட்டிக்கொடுத்து இனவாதக் கும்பலுக்குத் துணை போகும் நபர்களா புத்திஜீவிகள் என நாமம் சூட்டிக்கொள்வது? இனியும் இவர்கள் நினைத்தவாறு தமிழ் மக்களை ஏய்க்க முடியாது.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் கல்முனை கலாசார மண்டபம் போன்றவை உருவான வரலாறுகளையும் இவற்றுக்காக அன்று தொட்டு இன்று வரை தமிழ்க் கூட்டமைப்பு ஆற்றிவரும் பங்களிப்புகள் இங்குள்ள தமிழ் மக்களுக்கு நன்கு புரியும்.
அதைவிட்டு கூட்டமைப்பு என்ன செய்தது? என மொட்டைப் பிரசுரங்கள் வெளியிடும் புத்திசாலித்தனம் எம் மக்களிடையே ஒரு போதும் எடுபடாது. எம் மக்களை சிறிதும் திசை திருப்பாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ReplyDeleteஒற்றுமை நீங்கிடில் தாழ்வு..!
இது நம் இலங்கை சிறுபான்மை இனத்தவருக்கு நன்றாகவே பொருந்தும்..! தமிழ் பேசும் மக்கள் ஆனைவரும் ஒன்று திரண்டால் எந்த இனவாத சக்தியும் நமக்கு ஜுஜுபி. ஆனால் சொந்த அரசியல் இலாபத்தை மறந்து ஐக்கியப்பட இங்கு யாரும் தயாரில்லை.!
ஆகவே நாம் குட்டுப்பட்டே சாவதை தடுக்க முடியாது..!