ராமழானைக் குழப்பியடிப்பதற்கு சதிவலை...?
(Ash Sheikh M Z M Shafeek)
நாட்டில் முன்பு இருந்ததை விட கடந்த சில வாரங்களாக இனவாதம் தனது ரூபத்தை சற்று அதிகமாகவே வெளிக் காட்ட ஆரம்பித்திருப்பதானது வரக் கூடிய புனித ரமழானை நிம்மதியாக உயிர்பிக்க விடாமல் முஸ்லிம்களை குழப்பியடிப்பதற்கு இனவாதிகள் தயாராகி வருகிறார்கள் என்பதற்கான சமிக்ஞையாக இருக்கக் கூடுமோ என்ற பலத்த சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த சில வருட ராமழாங்களின் இரவுகளை அழகாக உயிர்ப்பிக்க விடாது கிரீஸ் பூதங்களாலும், இனவாதத்தாலும் நாசம் பண்ணிய அனுபவம் பல பலசேனாக்களுக்கும் திரை மறைவில் இருந்து கொண்டு இனவாதிகளை இயக்குகின்ற சில மேல்மட்ட சூழ்சிக் காரர்களுக்கும் இருந்துள்ளது என்பதை நாம் யாரும் இச் சந்தர்ப்பத்தில் மறந்து விடக் கூடாது.
அல்லாஹ் பாது காக வேண்டும். இச் சதி காரர்கள் ராமழானிலோ ரமழானுக்கு முந்திய சில தினங்களிலோ ஏதாவது அசம்பாவிதங்களை ஏற்படுத்தி விடுவார்களானால் அதனை சாட்டாக வைத்தே இரவில் யாரும் நடமாடக் கூடாது என ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து எதிர்வரும் ரமழானின் இரவு வணக்கங்களில் மண்ணைத் தூவி விடவும் கூடும். ஆகவே நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் ( குறிப்பாக தற்போது இரண்டு வார காலமாக கடும் அழுத்தத்திற்கும் பதட்டத்திற்கும் முகம் கொடுத்து வரும் தர்கா நகர் முஸ்லிம் உறவுகளும் ) மிகவும் கவனமாகவும் தூர நோக்குடனும் வரும் நாற்களை நகர்த்த வேண்டிய கடப்பாட்டிலே இருக்கின்றோம். ஏனெனில் இன்றும் கூட அளுத்கம, தர்கா நகர் பகுதிகளில் பொதுபல சேனாவும் ராவண பலயவும் இனைந்து கூட்டம் நடாத்திவிட்டு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையுடன் சம்பந்தப் பட்டிருந்த குறித்த பிக்குவையும் அழைத்துக் கொண்டு எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடாத்தி முடித்துள்ளது உறுதி செய்யப் பட்டுள்ளது.
பொறுமையை கற்றுத் தர வருகின்ற மாதத்தில் இனவாத பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் உச்ச கட்டப் பொறுமையுடன் நடந்து கொண்டு ரமழானை (ரமழானின் இரவுகளை) பூரண சுதந்திரத்துடன் உயிர்பிக்க நாமனைவரும் ஒன்று பட வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் ஸூரா லுக்மானில்
وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأُمُور
"உனக்கேற்படும் கஷ்டங்களை நீ பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக. நிச்சியமாக இது காரியங்களில் உறுதி மிக்கதாகும்" என்றும்
நல்லோர்களின் பண்புகளை ஒவ்வொன்றாக ஸூரா அல் பகரஹ்வின் 177 ஆம் வசனத்தில் கூறிக் கொண்டு வரும் பொழுது
وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَـٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَـٰئِكَ هُمُ الْمُتَّقُونَ
"அவர்கள் துன்பத்திலும் கஷ்டத்திலும் யுத்த நேரத்திலும் பொறுமையுடன் இருப்பவர்களாவர். அத்தகையோர் உண்மை உரைத்து விட்டனர். அவர்கள் தான் பயபக்தியுள்ளோருமாவர்" என்றும்
சூறத்துஸ் ஸுமரில்
أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ ۖ وَيُخَوِّفُونَكَ بِالَّذِينَ مِنْ دُونِهِ
"தன் அடியாருக்கு அல்லாஹ் ( ஒருவனே சகலவற்றிற்கும் ) போதுமானவனாக இல்லையா ? இன்னும் நபியே அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைக் கொண்டு உம்மைப் பயமுறுத்துகின்றனர்"
என்று அருளி தனது நபியிடம் வினவுவதானது அல்லாஹ்வை நம்பிய எம் எல்லோரையும் பார்த்தே வினவுகிறான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஆகவே புனித ராமழானைக் கருத்திற் கொண்டு இனி வரும் நாற்களை மிகவும் சகிப்புடனும் கவனமாகவும் நகர்த்த வேண்டிய நாம் மிக முக்கிய இன்னுமொன்றையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது கடந்த பல ராமழாங்களின் போது தராவீஹ் தொழுகையின் ரகஅத்தின் எண்ணிக்கைகாகவும் பிறைப் பிரச்சினைக்காகவும் சண்டை சச்சரவுகளிலும் கைக்கலப்பிலும் ஈடு பட்டு நீதிமன்றம், வழக்கு என அசிங்கப் பட்டு எமக்குள் விரிசல்களை அதிகமாக்கிக் கொண்டதுடன் மாற்று மதத்தினரின் மீடியாக்களாலும் அவர்களின் மட்டமான விமர்சனங்களாலும் அவமானப் பட்டுப் போய் இருக்கிறோம்.
ஆகவே இனவாதிகள் எம்மைக் குழப்பிவிடுவதற்கு சந்தர்ப்பம் பார்த்து துடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாமாகவே எமக்குள் மேலே குறிப்பிட்ட சர்ச்சைகளால் மீண்டும் கண்ணியம் பொருந்திய ராமழானையோ தொடந்து வரும் பெருநாற் தினத்தையோ அசிங்கப் படுத்தி விடாமல் இருப்பதில் சகல ஊர் ஜமாஅத்தினரும் இயக்கங்களும் கவனமாக செயற் பட வேண்டும்.குறிப்பாக மார்க்க விடையங்களில் கருத்து முரண்பாடு உள்ளவர்களும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு முடியுமான அளவு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொண்டு வரக்கூடிய ரமழானை உயிர்பிக்க முன் வர வேண்டும்.
யா அல்லாஹ் எம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கும் புனித ரமழானை உயிரோட்டமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்ள எம்மனைவருக்கும் அருள் புரிவாயாக. ஆமீன்.
Post a Comment