புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் அவசரத் தேவைகள்..!
(எம்.எஸ்.எம்.ஜான்ஸின்)
1990 ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்று வவுனியா, மதவாச்சி, இக்கிரகொல்லாவ, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை, சம்மாந்துறை, கண்டி, மாத்தறை, மாவனல்ல போன்ற பிரதேசங்களில் வாழ்கின்றனர்.
அதிகமான பிரதேசங்களில் மக்கள் சிறிய குழுவினராக வாழ்வதனால் அவர்கள் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படவில்லை. ஆனால் புத்தளம் போன்ற பிரதேசங்களில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். புத்தளத்தின் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் மக்களின் தேவைகளை நாம் சற்று நோக்குவோம்.
ரத்மல்யாய, வை.எம்.எம்.ஏ. நகர், சாபி நகர், அல்ஜித்தா குடியிருப்புகள்:
இப்பிரதேசங்களில் 850 இக்கும் மேற்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன. இவற்றை விட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களும் இப்பிரதேசங்களில் வாழ்கின்றனர். ஆண்டு ஐந்துக்கு கீழ்பட்ட வகுப்புகளில் கல்வி கற்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பிரதேசங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு அண்மையான பிரதேசத்தில் பாடசாலைகள் இல்லை. அரபா நகர் மற்றும் அல் காசிமி நகர் பாடசாலைகள் ஒரு கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தொலைவிலும் தில்லையடி முஸ்லிம் வித்தியாலயம் ஒன்றறை கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தூரத்திலும் அமைந்துள்ளது.
இப்பிரதேசங்களிலுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் அண்மையிலில்லாத காரணத்தால் வீணான போக்குவரத்துச் செலவுகள், காலதாமதங்கள் போன்ற பல்வேறு சிக்கல்களை இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்றனர். எனவே இப்பிரதேசத்தில் ஆண்டு ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களை உள்வாங்கக் கூடிய வகையில் பாடசாலை ஒன்று அமைய வேண்டும்.
சோல்டன் 1 மற்றும் சோல்டன் 2 மதீனாபுரம் முகாம்கள்
புத்தளம் மன்னார் வீதியிலுள்ள சோல்டன் மற்றும் மதீனா நகர் பிரதேசங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இப்பிரதேசங்களிலும் ஆண்டு ஐந்துக்கு கீழ் கல்வி கற்கும் 600இக்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களுக்கும் அண்மையான பிரதேசத்தில் பாடசாலைகள் இல்லை. இம்மூன்று பிரதேசங்களையும் சேர்ந்த பிள்ளைகள் மணல்குன்று பாடசாலை (ஒரு கிலோ மீற்றர் தூரம்) , ஸாஹிறா பாடசாலை (ஒன்றறை கிலோ மீற்றர் தூரம்) மற்றும் பாத்திமா கல்லூரி (இரண்டு கிலோ மீற்றர் தூரம்), சைனப் கல்லூரி (இரண்டு கிலோ மீற்றர் தூரம்) போன்ற பாடசாலைகளுக்கே செல்கின்றனர்.
2014 ஆம் ஆண்டு முதலாம் வகுப்புக்கு மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட போது, பாடசாலைகளில் இடமின்மை காரணமாக முதலாம் வகுப்பில் சேர முடியாமல் இப்பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கும் வாய்;ப்பை இழந்துள்ளனர்.
மேற்படி ரத்மல்யாய பிரதேசத்திலும் சோல்டன் பிரதேசத்திலும் புதிதாக இரண்டு பாடசாலைகள் அமைய வேண்டியது அவசரமும் அவசியமுமாகும். ஆண்டு ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களை உள்வாங்கக் கூடிய வகையில் பாடசாலைகள் தற்போதைக்கு அமைந்தால் போதுமானதாகும். அவ்வாறு அமையும் பட்சத்தில் மாணவர்கள் பாதுகாப்பாகவும் போக்குவரத்துச் சிரமமின்றியும் அதனால் ஏற்படும் அசதியினால் ஏற்படக் கூடிய மனச் சோர்வு போன்றவற்றிலிருந்து விடுபட்டு கல்வியில் முழுக் கவனம் செலுத்த முடியும்.
உதவி வழங்கும் நிறுவனங்களின் பொறுப்புகள் என்ன?
இன்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு உதவி வழங்கும் நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க முடியாமல் உள்ளனர். ஒரே பிரதேசத்தில் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் புலமைப்பரிசில் என்ற பெயரில் உதவிகளை வழங்குகின்றனர். அமைப்புகளுக்கிடையில் கூட்டுறவு தகவல் பறிமாற்றம் என்பன இருந்தால் இவ்வாறான திட்டமிடப்படாத செயற்பாடுகளைத் தவிர்க்கலாம். மறுமலர்ச்சி உண்டாக்குவது என்பது அறைத்த மாவையே திரும்ப திரும்ப அறைத்துக் கொண்டிருப்பதல்ல. இயக்கங்கள் மக்களின் தேவைகளை புத்தி சாதுரியமாக அனுகி அவற்றை சரியாக அறிந்து கொள்ளவேண்டும். ஏட்டிக்கி போட்டி மனப்பாண்மையை விட்டு சமுதாயத்தின் அத்தியாவசிய தேவை எது என்பதை கண்டறிந்து ஒவ்வொரு இயக்கமும் வௌ;வேறு பணிகளைப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்.
ஒரு பாடசாலையின் கட்டிடம் 30 அடி அகலத்தையும் 100 அடி நீட்டையும் கொண்டதாக கட்டினாலே போதுமானதாகும். ஐந்து வகுப்புகளையும் ஒரு அதிபர் அறை ஒரு ஆசிரியர் அறை ஆகியவற்றைக் கொண்ட பாடசாலைக் கட்டிடமொன்றை அமைக்க ஏறக்குறைய இருபத்தைந்து இலட்சம் செலவாகும். அதற்கான காணியை பத்து பதினைந்து இலட்சத்துக்குள் பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த இடம்பெயர்ந்த மக்களின் கல்வி சம்பந்தப்பட்ட துன்பங்களை நீக்க சமூக சேவை அமைப்புக்கள் இனியாவது திட்டமிட்டு செயற்படுவார்களா? இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க தகவல்கள் ஆலோசனைகள் என்பன தேவையாயின் அவற்றை நாம் இலவசமாக வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Post a Comment