Header Ads



'எனது தந்தை புதைக்கப்பட்ட இடத்தினை கண்டுபிடித்து, உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுங்கள்'

எனது தந்தை கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் இடத்தினை கண்டுபிடித்து அதைத் தோண்டி எனது தந்தையின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுங்களென காத்தான்குடியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதாகக்  கூறப்படும் தனது தந்தையின் தொடர்பாக காணால் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த மகன் அப்துல் லத்தீப் அம்ஜத் தெரிவித்தார். காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்; 

எனது தந்தை அப்துல் லத்தீப் 20.05.1985 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எனது தந்தைக்கு எந்தவிதமான ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. அவர் கொக்கட்டிச்சோலையில் ஒரு வேலை விடயமாகச் சென்றிருந்தார். நாங்கள் அப்போது மண்முனையில் வசித்துவந்தோம். எனது தந்தை கொக்கட்டிச்சோலைக்குச் சென்று வீடு திரும்பாததால் நாங்கள் அவரைத் தேடினோம். பின்னர் ஓரிரு தினங்களில் ஒரு குழு எங்களது வீட்டுக்கு வந்து அவரைக் கொலை செய்து விட்டதாக கூறி அவருக்கான கடமைகளைச் செய்யுமாறு தெரிவித்து விட்டுச் சென்றது. இதையடுத்து எனது தாய் எனது தந்தைக்கான இஸ்லாமிய இத்தாக் கடமையை மேற்கொண்டார். 

நாங்கள் மூன்று பிள்ளைகள், தந்தை கடத்தப்படும் போது நாங்கள் மூவருமே சிறுவர்கள். எங்களை மிகவும் கஷ்டப்பட்டு எனது தாய் வளர்த்துள்ளார். இந்நிலையில் எனது தந்தை கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் இடத்தினை கண்டு பிடித்து அதை தோண்டி எனது தந்தையின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுங்கள் என்றார். இங்கு சாட்சியமளித்த எம்.சாலிஹா உம்மா என்வர் தெரிவிக்கையில்;  30.12.1987 அன்று எனது கணவர் முகமமது தம்பி அகமது லெவ்வை கடத்தப்பட்டார். அவர்  கடத்தப்படும் போது அவருக்கு 59 வயதாகும். மேற்படி தினத்தன்று எனது கணவருடன் சேர்ந்து முப்பது பேர் வரையில் ஒரே நாளில் கடத்தப்பட்டனர். அன்றைய தினம் காத்தான்குடிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எனது கணவர் காத்தான்குடி பிரதான வீதியில் நின்றபோதே ஒரு வாகனத்தில் கடத்தப்பட்டார். எனது கணவர் உட்பட அந்த முப்பது பேரையும் விடுதலைப் புலிகளே கடத்திச் சென்றதாக அறிந்தேன். அன்று கடத்தப்பட்ட எவருமே இதுவரை வீடு திரும்பவில்லை என்றார். இங்கு சாட்சியமளித்த காத்தான்குடியைச் சேர்ந்த அகமது லெவ்வை சித்தி சரீனா என்பவர் தனது சாட்சியத்தில்; எனது கணவர் முகம்மது சித்தீக் என்பவர் 22.12.1985 அன்று வீட்டிலிருந்து பாலையடி வெட்டைக்கு வியாபாரத்திற்குச் சென்றார். வியாபாரத்திற்காகச் சென்ற எனது கணவர் வீடு வந்து சேரவில்லை. 

கணவர் கடத்தப்பட்டு விட்டார் என்ற தகவல் கிடைத்தது. அவருடன் கூட வியாபாரத்திற்கு சென்ற ஐவரில் மூன்று பேர் கடத்தப்பட்டனர். ஏனைய இருவரும் திரும்பி வந்தனர். திரும்பி வந்தவர்களின் மூலம் எனது கணவர் கடத்தப்பட்டுவிட்டார் என்ற தகவல் கிடைத்தது. எனது கணவர் உடு துணிகள் வியாபாரம் செய்யும் ஒருவர். அவர் உடு துணிகளை வான் ஒன்றில் ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு சென்ற போதே கடத்தப்பட்டார். இன்று அவர் உயிரோடு இல்லை. எனது கணவர் இல்லாததால் நானும் எனது பிள்ளைகளும் மிகவும் கஷ்டப்படுகின்றோம். எனக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. அன்று காணாமல் போன எனது கணவர் இதுவரை வீடு வந்து சேரவில்லை எனக் கண்ணீருடன் கூறினார். 

இங்கு சாட்சியளித்த காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது கலீல்; எனது சகோதரர் அப்துல் அஸீஸ் முகம்மது சம்சுதீன் என்பவர் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில்  ஊழியராக கடமையாற்றி வந்தார். அவருக்கு வயது 35. அவர் திருமணம் செய்திருந்தார். 19.11.1990 ஆம் அண்டு அவர் கடமையாற்றிய மாந்தீவு வைத்தியசாலையில் வைத்துக் கடத்தப்பட்டார். இவர் கடத்தப்பட்டார் என்ற செய்தி எமக்கு கிடைத்தவுடன் நாங்கள் பல இடங்களிலும் சென்று அவரைத் தேடினோம். ஆனால்  அவரைக் கடத்தியவர்கள் விடுவிக்கவில்லை. எனது சகோதரர் கடத்தப்பட்டது அந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் மற்றும் ஊழியர்களுக்கு நன்கு தெரியும். எனது சகோதரர் அந்த வைத்தியசாலையில் தங்கியிருக்கும் போது அங்கு வந்த ஆயுதம் தரித்த சிலர் எனது சகோதரனின் பெயரைக் கூறி அவரை கடத்திச் சென்றுள்ளனர். இதுவரை எனது சகோதரர் வீடு திரும்பவில்லை என்றார். 

No comments

Powered by Blogger.