Header Ads



சவூதி அரேபியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் சம்பளம் வழங்க தவறும் தொழில் வழங்குனர்களுக்கு 5000 சவூதி ரியால்களுக்கு மேல் (1,73. 000 ரூபாய்) அபராதம் விதிக்க அந்நாட்டு தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. தொழிலாளர் உரிமை மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டம் 60 தினங்களுக்குள் அமுலுக்கு வரும் என்று சவூதி தொழில் அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

சவூதி அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கட்டுப்பாடுகளில் வீட்டுப் பணியாளர்களுக்கு நாளாந்தம் குறைந்த ஒன்பது மணிநேரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் வாரத்தில் குறைந்தது ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் தொழில் வழங்குனர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறான ஏற்பாட்டை கொண்டு வரத் தவறும் தொழில் வழங்குனர்கள் பணியாளர்களுடன் மாற்று ஏற்பாட்டுக்கான இரு தரப்பு உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. சவூதி நிர்வாகத்திற்கு தாம் கொடுத்த தொடர்ச்சியான அழுத்தத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சவூதி மனித உரிமை ஆணைக் குழுவைச் சேர்ந்த இப்ராஹிம் அல் ஷெட்டி சவூதியின் ‘அல் அரபியா’ தளத்திற்கு குறிப் பிட்டுள்ளார். இந்த புதிய சட்டங்கள் மூலம் தொழில் வழங்குனர் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய இரு தரப்பினரினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட் டிருப்பதாக அவர் விபரித்துள்ளார். ‘தொழிலாளர்களுக்கு (தெளிவான) தேசிய ஒழுங்கு முறை ஒன்று இல்லாமல் இருந்தது. 

இது தொடர்பில் தொழில் வழங்கு னர்களுக்கு இடையில் ஒப்பந்தங்கள் வேறுபட்டிருந்தன. தற்போது அனைத்து ஒப்பந்தங்களும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் புதிய சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். இதற்குள் அனைத்து வீட்டு பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்’ என்று அல் ஷெட்டி குறிப்பிட்டார். இதனிடையே, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு முறையை எளிதாக்கும் இலத்திரனியல் முறையொன்றை சவூதி தொழில் அமைச்சு ஒருசில வாரங்களில் அமுல்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த இலத்திரனியல் முறை மூலம் தொழிலாளர் சந்தையில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று சவூதி நிர்வாகம் நம்புகிறது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை 15 ஆம் திகதி சவூதி அமைச்சரவை கவுன்ஸிலால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அந்நாட்டு தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் தொழிலாளருக்கம் தொழில் வழங்குனருக்கும் இடையிலான அனைத்து அம்சங்களும் வரையறுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பணியாளர்களுக்கு எதிராக எந்த வகையான வன்முறையில் ஈடுபடும் தொழில் வழங்குனர் தொழிலாளரை பெறுவதற்கான உரிமைக்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்படும் அல்லது 2000 சவூதி ரியால் (70.000 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும். இதே குற்றத்தை மீண்டும் ஒருமுறை செய்தால் அபராதத் தொகை 5000 சவூதி ரியாலாக (1. 73. 000 ரூபாய்) அதிகரிக்கப்படும் என்பதோடு தொழிலாளரை அமர்த்துவதற்கு மூன்று ஆண்டு தடை விதிக்கப்படும். தொடர்ந்தும் மூன்றாவது தடவை பணியாளருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் தொழிலாளர் ஒருவரை அமர்த்த வாழ்நாள் தடை விதிக்கப்படும். 

இதுவே தொழிலாளர் ஒருவர் தொழில் வழங்குனருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் அவருக்கு 2000 சவூதி ரியால் (70,000 ரூபாய்) அபராதம் விதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது சவூதியில் பணிபுரியவும் தடைவிதிக்கப் படுவார். 

இதில் பணியாளரின் ஒப்பந்தக்காலம் முடிந்து சவூதியில் இருந்து வெளியேறு வதற்கான செலவை பணியாளரே பொறுப்பேற்க வேண்டும். பணியாளரிடம் அதற்கான பணம் இல்லாவிட்டால் அரசு பயணச் செலவை பொறுப்பேற்கும் என்று தொழிலாளர்களுக்கான புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டுப் பணியாளர்களின் தகுதிகாண் காலம் மூன்று மாதங்களுக்கு அதிகம் இருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் வீட்டுப் பணியாளர் பணிக்கு தகுதியில்லை என் கருதினால் தொழில் வழங்குனருக்கு பணி நீக்கம் செய்ய அதிகாரம் உள்ளது. 

இதில் தொழிலாளர் ஒப்பந்தத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட்ட வீட்டுப் பணியாளரிடம் தொழில் வழங்குனர் ஒப்பந்தத்திற்கு மாறான வேலைகளை வாங்க கட்டாயப்படுத்த உரிமை இல்லை. இந்த சட்டத்தின்படி வீட்டுப் பணியாளர் இஸ்லாத்தையும் அதன் வழிகாட்டலையும் மதித்து நடக்க வேண்டும் என்பதோடு தொழில் வழங்குனர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உத்தரவுகளை ஏற்று நடக்கவேண்டும். வீட்டுப் பணியாளர் தமது பணியை செய்வதை மறுக்க உரிமை இல்லை என்பதோடு நியாயமான காரணமின்றி பணியை விட்டு வெளியேறவும் உரிமை இல்லை. 

இதில் தொழில் வழங்குனர் உடன்பட்ட மாதச் சம்பளத்தை தாமதமின்றி வழங்க வேண்டும். வீட்டுப் பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்பதோடு வருடத்திற்கு குறைந்தது ஒரு மாதம் சுகவீன விடுப்பு வழங்க வேண்டும். நாளாந்தம் வீட்டுப் பணியாளருக்கு குறைந்தது ஒன்பது மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும் என்பதோடு இரண்டு ஆண்டு பணிக்காலம் முடிந்ததும் சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை வழங்க வேண்டும். நான்கு ஆண்டு பணிக்காலம் முடிந்ததும் ஒரு மாத சம்பளத்திற்கு நிகரான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். 

No comments

Powered by Blogger.