Header Ads



அளுத்கம முஸ்லிம்கள் அச்சத்தில் - குமுறுகிறார் அஸாத் சாலி

அளுத்கமை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை பூதாகாரமாக்கி சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொண்டு பொலிஸாருக்கே சவால் விடுக்கும் அளவுக்கு இன்று பௌத்த அடிப்படை வாத அமைப்புக்களின் கரங்கள் ஓங்கியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி. அளுத்கமை நகரில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

அளுத்கமை நகரின் ஒரு ஒதுக்குப் புறமான பகுதியில் பெரும்பான்மையின வேன் சாரதி ஒருவருக்கும் வீதியில் மோட்டார்; சைக்கிள்களை நிறுதி வைத்திருந்த சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பூதாகாரமாக்கப்பட்டுள்ளது. பிரதேச வாசிகளுடன் பேசி உண்மை நிலையை கண்டறிய மேற்கொண்ட முயற்சிகளின் போது மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விதமும் வீதியில் இளைஞர்கள் கூடி நின்ற விதமும் தவறானதென தெரியவருகின்றது. ஏனைய இனத்தவர்கள் செறிந்து வாழும் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தமக்குள் மிகச் சிறந்த ஒழுக்க விதிகளைப் பேணி நடக்க வேண்டும். இல்லையேல் இன்றைய சூழலில் சிறிய பிரச்சினைகள் கூட விஷமத்தனமான பொய் பிரசாரங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வீண் பிரச்சினைகள் உருவாக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய வேனின் சாரதி எடுத்த எடுப்பிலேயே இந்த இளைஞர்களை நோக்கி முஸ்லிம்களை கேவலமாகத் திட்டத் தொடங்கியுள்ளார். இவர் உதிர்த்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்த அந்த வேனில் உள்ள பௌத்த மதகுருமார் கூட முயற்சிக்கவில்லை. இதனை அடுத்து ஒரு முஸ்லிம் இளைஞர் இந்த வேன் சாரதியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதைத் தவிர அங்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் அந்த வேனில் இருந்த மதகுருமார் தாங்களும் தங்களது சாரதியும் தாக்கப்பட்டதாக ஊருக்குள் கதையைப் பரப்பி அவ்வாறே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினைக்கு காரணம். மதகுருமார் இவ்வாறு பொய்யாகவும் போலித்தனமாகவும் நடந்து கொண்டுள்ளமை மிகவும் வேதனைக்குரியதாகும். அது அவர்களின் தகுதிக்கும் தரத்துக்கும் பொருத்தமான செயலும் அல்ல.

அப்படியே மதகுருமார் தரப்பில் சொல்லப்படுவது உண்மையாக இருந்தாலும் கூட அவர்கள் காடையர்களோடு பொலிஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அல்லது அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என கோஷமிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். முஸ்லிம் பிரமுகர்களின் ஏற்பாட்டில் இது தொடர்பாக மூவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டும் உள்ளனர். இனி அவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்ய வழி விட வேண்டும். இதில் மற்றவர்களின் தலையீடும் வற்புறுத்துலும் வேண்டத்தகாத விடயங்களாகும்.

நேற்று இரவு வரை பொலிஸாருக்கு எதிரான கோஷங்களும் வற்புறுத்தல்களும் தொடர்ந்துள்ளன. பொலிஸ் மா அதிபர் நேரடியாக ஸ்தலத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. சட்டத்தை தமது கரங்களில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடும் இந்தப் பிரிவினர் அளுத்கமை நகரில் உள்ள பல முஸ்லிம் கடைகளைத் தாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்னமும் அளுத்கமை நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் உள்ள முஸ்லிம் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். எந்தநேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் இவர்களை ஆட்கொண்டுள்ளது. இவர்களின் அச்ச நிலை நீக்கப்பட்டு அளுத்கமை நகரில் மீண்டும் அமைதியும் சட்டமும் ஒழுங்கும் திரும்ப பொலிஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். சகல மக்களினதும் வர்த்தக நிலையங்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் அமைதியாகவும் விழிப்பாகவும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

  1. அரசாங்கத் தரப்பில் இருக்கும் எமது பங்காளிக்கட்சித் தலைவர்களும் புகழ்பாடும் சிரேச்ட உறுப்பினர்களும் அமைதியாக இருப்பதன் அர்த்தம்தான் என்ன என்று புரியவில்லை. இலங்கையை ஒரு மியன்மாராக காணத்துடிக்கும் இனவாதிகளின் அடாவடித்தனத்தை ஏன் ஜனாதிபதியிடம் முறையிடாது இருக்கிறார்களோ.....!! இப்படிப்பட்ட தலைவர்களுக்கு எமது சமூகம் நல்ல பாடம் புகட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.