Header Ads



அளுத்கம பகுதியில் சிங்கள, முஸ்லிம் மோதல் - BBC

இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்து, அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி அளித்ததை அடுத்தே இந்த மோதல்கள் நடந்துள்ளன.

அந்தக் கூட்டத்தை அடுத்து பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் பகுதிகளை நோக்கி, முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற போதே அந்த மோதல்கள் வெடித்துள்ளன.

இதில் முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன, ஊர்வலமாகச் சென்ற சிங்களவர்களுக்கு கல் வீசப்பட்டிருக்கிறது. பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தச் சம்பவங்களில் எவை முதலிலும், எவை பின்னரும் நடந்தன என்பது தெரியவில்லை.

முஸ்லிம்களின் வீடுகளும் மசூதிகளும் கல்வீசித்தாக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

உள்ளுர் செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். தான் தனது சொந்த சிங்கள மக்களாலேயே தாக்கப்பட்டதாக உள்ளூர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வன்செயல்கள் பல பகுதிகளுக்கும் பரவியதன் காரணமாக, அபாயகரமான நிலைமை இருப்பதாகவும், குழப்பமாக இருப்பதாகவும், அளுத்கமவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடுவதில் உள்ளூர் ஊடகங்கள் சுயதணிக்கை போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட செய்தியைத் தவிர வேறு செய்திகளைக் காணமுடியவில்லை.

இன்றைய சம்பவங்கள் குறித்து எதனையும் ஒளி/ஒலிபரப்ப வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து சில ஊடகங்களுக்கு உத்தரவு வந்ததாக சில வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.