90 க்குப் பின்னும், 2009 க்குப் பின்னும் முஸ்லிம் சமுகம் பட்ட துன்பங்கள்..!
(சத்தார் எம் ஜாவித்)
இலங்கையின் வரலாற்றுத் தொன்மையில் இலங்கையில் பல்லின சமுகங்களைக் கொண்ட ஒரு நாடாகவும் பௌத்தம், இந்து, கத்தோலிக் மற்றும் முஸ்லிம்களைக் கொண்ட நாடாகவுமே காணப்படுகின்றதே தவிர இங்கு இன நல்லிணக்கம் என்பது காணல் நீராகவே காணப்படுகின்றது.
காரணம் இனவாதம் என்ற அரக்கன் உயிர்களுக்கு சாவு மணி அடித்துக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாகும். இதன் காரணமாகவே இன்று இலங்கையின் நிலைமைகள் சர்வதேசத்தின் முன் இறுக்கமான நிலையில் தோற்றம் பெறுவதற்கு வழி வகுத்துவிட்டது எனலாம்.
கடந்த மூன்று தஸாப்பத காலமாக இலங்கையில் எந்தவொரு சமுகமும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவென்றே கூறலாம். யுத்தத்தின்போது ஒவ்வொருவரும் பயத்தின் காரணமாக நிம்மதியாகவோ அல்லது சந்தோசமாகவோ தமது வாழ்வியலைக் கொண்டிருக்கவில்லை. அந்தளவிற்கு அச்ச நிலைமைகள் காணப்பட்டன.
முஸ்லிம்களைப் பொருத்தவரையில் மத்தளத்திற்கு இரு பக்கமும் அடிபோல் கடந்த மூன்று தஸாப்த காலமும் இருபக்கத்தினாலும் அடிபட்டவர்களாகவே துன்பத்தின் துயரத்தில் தாண்டவமாடுகின்றனர்.
குறிப்பாக வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு அடுத் பெரும்பான்மையாக காணப்பட்ட முஸ்லிம் சமுகம் தமிழ் இளைஞர்களால் இனத்தைப் பாதுகாக்கும் தோரணையில் உரிமைப் போராட்டம் என்று தொடங்கி ஈற்றில் ஆயுதப் போராட்டமாக மாறியதன் விளைவு விடுதலைப் புலிகளின் உருவாக்கத்தின் பின்னர் வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் என்று இரண்டரக் கலந்து வாழ்ந்த சமுகங்களை வடகிழக்கின் இனவாதம் முஸ்லிம் சமுகத்தை 1990இல் அங்கிருந்து முற்றாக இனச் சுத்திகரிப்புச் செய்தது. இதன் காரணமாக வடகிழக்கு முஸ்லிம்கள் வரலாற்றில் கண்டிராத பாரிய துன்பத்தை அனுபவிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் வழிகோலிவிட்டது.
மேற்படி வெளியேற்றத்தின் பின்னர் குறிப்பாக 90க்குப் பின்னர் 2009 வரை ஒரு ஆயுதக் குழுவின் எதேச்சதிகாரத்தால் இனரீதியாக வடகிழக்கை விட்டு வெளி மாவட்டங்களில் முஸ்லிம் சமுகம் தமது பூர்வீகங்களை இழந்து அகதி என்ற முத்திரையுடன் பல்வேறுபட்ட துன்ப துயரங்களின் வரலாற்றுப் பின்னணியினைக் கொண்டு மாற்றாந்தாய் பிள்ளைபோல் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
90இல் இழந்த இழப்புக்கள் இன்று வரை அந்தச் சமுகத்தில் மறக்க முடியாத துயரச் சம்பவமாக வரலாற்றில் கறை கபடிந்த சம்பவங்களாக பரினாமித்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக பலர் அதிர்ச்சியில் தமது உயிர்களை விட்ட சம்பவங்களும். மேலும் பலர் மன ரீதியாக பாதிப்படைந்த நிலையிலும் இருப்பதற்கு வழி வகுத்துவிட்டது.
90இன் இழப்பினால் இன்னும் மீளாத நிலையில் இடிமேல் இடிபோல் 2009இன் மற்றுமொரு இடி இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தின் மீது விழுந்துள்ளது. இந்த இடியானது வடகிழக்கில் இன ரீதியாக மேற் கொள்ளப்பட்டதைவிட சமய ரீதியாக விழுந்துள்ளது. அதுதான் இனவாதம் என்ற வகையில் சமயத்தை குறிப்பாக இஸ்லாத்தை தாக்கும் பெரும்பான்மை பௌத்த இனவாதிகளின் செயற்பாடுகளாகும்.
2009 யுத்த வெற்றிக்குப் பின்னரான துன்பங்கள் யுத்தத்தால் பட்ட துன்ப துயரங்களை விடவும் மோசமானதாகும் குறிப்பாக யுத்தம் காரணமாக ஒருபகுதி முஸ்லிம்களே பாதிக்கப்பட்டனர் ஆனால் சமய ரீதியான துன்பத்தால் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுமே துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். காரணம் இனவாதிகளின் பிரசன்னம் முஸ்லிம்களை நேரடியாகத் தாக்கியமையேயாகும்.
சிறுபான்மையினர் என்ற வகையில் முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக் குழுவினாலும், யுத்த வெற்றியின் பின்னர் பௌத்த இனவாதிகளாலும் தாராளமாகவே துன்பங்களை அனுபவித்த வன்னமுள்ளனர். குறிப்பாக சமய விழுமியங்களையும், சமயப் போதனைகளையும் கொச்சைப்படுத்தியமையானது முழு முஸ்லிம்களையும் உள, உணர்வு ரீதியாக பாதிப்படைய வைத்துள்ளமை இலங்கையின் பிற்போக்கானதொரு நிலையை சர்வதேசத்திற்கு காட்டி நிற்கின்றமையையே புலப்படுத்துகின்றது.
இலங்கை வாழ் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் கைங்கரியங்களுக்கு இன்றைய அரசு துணைபோவதாகவே மக்கள் குறை கூறுகின்றனர். விடுதலைப் புலிகள் ஒரு சமுகத்தில் கைவைத்து ஏனைய சமுகங்களையும் பதம் பார்த்ததன் விளைவாக அதனை முடக்க வேண்டும் என்ற கோதாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009இல் அரசால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் மூலம் அந்த நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்பட்டு இன்று 5வருடங்கள் தாண்டி விட்டது மட்டுமல்லாது அதன் வெற்றி விழாவையும் அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கொலாகலமாக மே மாதத்தில் கொண்டாடி வருகின்றமையும் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றது.
மேற்படி தீவிரவாதக் குழு மக்களின் இயல்பு வாழ்க்கையையும், ஜனநாயக உரிமைகளையும் மீறியமையினால் அடக்கி ஒடுக்கப்பட்டால் அதே மாதிரியான பௌத்த பெரும்பான்மை இனவாதக் குழுக்கள் இன்று பல அரசியல் வாதிகளின் ஆசீர் வாதத்துடன் பள்ளிகளை உடைப்பதும், ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களின் மனங்கள் புண்படும் வகையில் மேற்கொண்டு மனதைக் கவலை கொள்ளச் செய்யும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதும், குறிப்பாக சிறுபான்மை மக்களின் சமய விழுமியங்களை மழுங்கடித்தும், கொச்சைப்படுத்தியும், முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்கும் நிலைமைகளிலும் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றமையானது விடுதலைப் புலிகளை கொன்றொழித்ததுபோல் இவர்கள் விடயத்திலும் அரசு தமது பார்வையை செலுத்த வேண்டியது ஜனநாயக நாடு என்ற வகையில் தலையாய கடமையாகும் என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
90இல் முஸ்லிம் சமுகம் விடுதலைப் புலிகளால் மாபெரும் அழிவை நோக்கியது போல் 2009இற்குப் பின்னர் வக்கிர புத்தி படைத்த கடும்போக்கு பௌத்த இனவாதிகளால் கடும் இன்னல்களை அடைந்ததுடன் தமது பாதுகாப்பிலும் பாரிய சவால்களை எதிர் கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பில் பாராமுகம் காட்டி வன்முறையாளர்களால் தாக்கப்படும் வரை பாதுகாப்பு வழங்குபவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையிலேயே இலங்கை முஸ்லிம் சமுகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
யாரிடம் சொல்வது, எங்கு நீதி பெறுவது? என்ற ஏக்கத்தில் முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். முஸ்லிம் சமுகத்திற்கென உறுதியான தலைமைகளோ அல்லது பிரச்சினைகளுக்கு முன்நிற்கக் கூடிய அமைப்புக்களோ இல்லாதமையும் காரணங்களாகும். இதுவரை காலமும் அவ்வப்போது பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டபோதும் அவை எதுவுமே சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்குள் சேரவுமில்லை, கண்களால் கண்டு கொள்ளவுமில்லை.
தமிழ் சமுகம் தமது பாதுகாப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபையை நாடியதுபோல் முஸ்லிம் சமுகமும் எதிர் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையை நாடிச் செல்ல வேண்டிய காலம் நெருங்கி விட்டது காரணம் அரசின் மீதான நம்பிக்கையில் முஸ்லிம் தற்போது சிறுகச் சிறுக இழந்து வருகின்றனர்.
அரசாங்கம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் விடயத்தில் இன்று வரை தட்டிக்கழிப்பிலேயே காலத்தை கழித்த வருகின்றது. இந்த நிலைமைகள் முஸ்லிம் மக்களிடத்தில் பாரியதொரு பின்னடைவையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது அரசாங்கம் மறைமுகமாக இனவாதிகளின் மூலம் இந்த நாட்டை சிங்கள மயமாக்களுக்கு இட்டுச் செல்கின்றதோ? என்ற ஐயப்பாடும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளின் ஆரம்பம் லண்டனில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இஸ்லாத்திற்காக வேண்டி அதனைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டிய தமது கண்ணிப் பயனத்தை தொடங்கியுள்ளனர்.
சிறுபான்மை மக்களின் விடயத்தில் அரசு கண்மூடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் இலங்கை மீண்டும் மீண்டும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான நிலைமைகள் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் சர்வதேசத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கவும் வழிகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளாகவே உள்ளது.
இலங்கை வாழ் சமகத்தில் 98 வீதமானவர்கள் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும், சமாதானம் மலர வேண்டும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இருக்கும்போது இரண்டு வீதமானவர்களின் ஆட்டத்திற்கு அரசாங்கம் தலை சாய்க்குமானால் அது இலங்கையின் சாபக் கேட்டிற்கான ஆரம்பம் என்றே சொல்லலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமய, சமுக அமைப்புக்களும், மனித உரிமை அமைப்புக்களும் இலங்கையில் சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் சமய விழுமியங்கள் மீதும் இனவாதிகளால் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித் தனங்களுக்கு தமது கண்டனங்களைத் தெரிவித்து வரும் இவ்வேளையில் இலங்கை அரசாங்கம் இனவாதிகள் விடயத்தில் மௌனமாக இருப்பதும் அவர்களின் தொடரான எதிர்ப்புக்களுக்கு அனுமதி வழங்குவதும் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தின்படியே ஒரு அரசாங்கம் தமத ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இலங்கையில் அதற்கு மாற்றமாக ஓரிரு இனவாதக் குழுக்கள் பௌத்த பிக்குகளை வைத்துக் கொண்டு சிறுபான்மை மற்றும் சமய நம்பிக்கை கொண்டவர்கள் மீது தமது தீய செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை கட்டுப்படுத்த முடியாதளவு அரசியல் நம்பிக்கையற்ற நிலைமைகள் தொடர்ந்தும் இலங்கையில் பிரச்சினைகளும், முரண்பாடுகளும், தாக்குதல்களும் இடம்பெறுவதற்கு வழி சமைத்த வன்னமேயுள்ளன.
இவ்வாறான நிலைமைகளில் சமாதானத்தை விரும்பும் சாராரிற்கு அரசாங்கம் தமது ஒத்துழைப்புக்களை வழங்கினால் அதன் மூலம் ஏதோ ஒரு அளவில் இயல்பு நிலைமைகளை கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் இனவாத்திற்கு முடிவு கட்ட வேண்டுமானால் அரசியல் ரீதியான முழு ஆதரவும் தேவையாகவுள்ளது. அரசியல் நிலமைகளே இன்று இலங்கையின் அமைதியற்ற நிலைக்கு வழி கோலுகின்றது. காரணம் ஒரு சில அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மறைமுகமாக தமது பூரண ஆதரவைக் கொடுத்து இனவாதத்தை வளர்க்கின்றனர். இவ்வாறான நிலையில் இலங்கையின் சமாதானம் என்பது காணல் நீராகவே தோற்றம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
அரசாங்கம் ஒரு சமுகம் என்று பாராது அனைவரும் இலங்கையர் என்ற கண்ணோட்டத்தில் அனைவரதும் செயற்பாடுகளில் அவதானமாக இருந்து யாரும் யாராலும் பாதிக்கப்படாது இந்த நாட்டில் வாழும் உரிமையையும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது தலையாய கடமையாகும்.
எனவே மேற்படி நிலைகைளில் இருந்து அரசாங்கம் விலகாது ஜனநாய விழுமியங்களை இலங்கையில் நிலை நாட்டுவதுடன் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து எந்தவொரு கட்டத்திலும் எந்தவொரு சமுகமும் மற்றய சமுகத்தால் பாதிக்கப்படாது அவற்றின் உரிமைகளையும், சலகைகளையும் தங்குதடையின்றி அனுபவிக்க வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
சீண்டுதலின் உச்சத்திலேனும், சீறிப்பாய்வார்களா? இவர்களும் தீவிரவாதிகள் தான் என்று சொல்லிக்கொண்டு, iraq, afganisthan, viatnam, போன்ற நாடுகளில் அமெரிக்கா ஊடுருவியது போல் இலங்கையிலும் ஊடுருவ ஒரு முயற்சியே இது...!
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம் "எமக்கு அல்லாஹ் போதுமானவன்...!"
முஸ்லிம்கள் ஈமானை உறுதியோடு பேணிவந்தால் இந்த சோதனையும் ஒரு நாள் கடந்து போகும்..!