Header Ads



85 கிலோ ஹெரோயினுடன், களனியில் இருவர் மடக்கிப்பிடிப்பு

ஹைபிரிட் ரக காரில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 85 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப்படையினர் களனியில் கைப்பற்றியுள்ளனர். பியகம களனி வீதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே இந்தப் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

போதைப் பொருட்களை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கொட்டாஞ் சேனை மற்றும் மருதானைப் பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் பியகம முதல் களனி வரையிலான பகுதியில் விசேட அதிரடிப்படையினர் இரகசிய தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.விசேட அதிரடிப்படையினர் சிவில் உடைகளில் பொதுமக்கள்போல் தொடர்ந்தும் இப்பகுதிகளில் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர். சம்பவ தினம் பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கடத்திக் கொண்டுவரப் படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பியகம முதல் களனி வரையில் சுமார் 435 விசேட அதிரடிப்படையினரும் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

இவர்களில் சிலர் சீருடையிலும் சிலர் சிவில் உடையிலும் ஆங்காங்கே கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். களனியை அண்மித்த பகுதியில் ஹைபிரிட் ரக வெள்ளைநிற காரொன்று நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து இந்தக் கார் தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

சற்று நேரத்துக்குப் பிறகு சிவப்பு நிற ஆட்டோவொன்றில் வந்த இருவர் காருக்கு அருகில் அதனை நிறுத்துவிட்டு வாகனத்தை நோட்டம் விட்டனர். பின்னர் ஆட்டோவில் வந்த நபர் ஒருவர் மட்டும் காரின் சாரதி ஆசனத்தில் அமர்ந்து காரை செலுத்தியுள்ளார். காருக்குப் பின்னாலேயே அடுத்தவர் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். காருக்குள் ஹெரோயின் போதைப்பொருள் வைக்கப்பட்டிருப்பதாக இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சீருடையிலிருந்த விசேட அதிரடிப்படையினர் களனியில் காரை மடக்கிப் பிடித்தனர். காரில் வந்தவரையும் முச்சக்கரவண்டியில் வந்தவரையும் அவர்கள் கைது செய்தனர்.

காருக்குள் மூன்று கிலோ அடங்கிய 25 ஹெரோயின் பொதிகளும் ஒரு கிலோ அடங்கிய பத்து பொதிகளும் 500 கிராம் அடங்கிய ஒரு பொதியும் உரைப்பையினுள் இட்டு காரின் பின் ஆசனத்தில் வைக்கப்பட்டிருந்தது. இவற்றைக் கைப்பற்றிய அதிரடிப்ப டையினர் கொழும்பு தும்முள்ளை சந்தியிலுள்ள விசேட அதிரடிப்படையினரின் தலைமையகத்துக்குக் கொண்டு வந்தனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லத்துரை சுந்தர்ராஜ் (வயது37) முச்சக்கர வண்டியில் வந்தவர் செல்லத்துரை ரவிக்குமார் (வயது38) மருதானையைச் சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.

காரின் இலக்கத்தகடு மற்றும் காரின் ஆவணங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் உரிமையாளர் யார் என்பது கண்டறியப்படும். ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாகனங்கள் இரண்டும் மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்களுடன் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாரிடம் கையளிக்கப்படும் என்றும் அஜித் ரோஹன தெரிவித்தார்.

விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியவருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.