Header Ads



ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாமா..?

இன்று பலரையும் தாக்கும் நோய்களில் ஆஸ்துமா முக்கிய பங்கு வகிக்கிறது. லேசான தூசு பட்டாலே தோல்களில் தடித்தல், பத்தியின் புகையை  நுகர்ந்தாலோ குளிர்ந்த நீரை குடித்தாலோ காச், மூச் என இருமலுடன், மேல் கீழ் மூச்சு வாங்குவரைத பார்க்கிறோம். சர்க்கரை மற்றும் கொலஸ்ரால்  ரத்த அழுத்தம் போன்றே ஆஸ்துமா நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும் கட்டுபாட்டில் வைக்க முடியும். ஆஸ்துமா பற்றி ஆசாரிப்பள்ளம்  மருத்துவ கல்லூரி நுரையீரல் சிறப்பு சிகிச்சை பிரிவு மருத்துவ பேராசிரியர் டாக்டர் முத்துக்குமார் கூறியதாவது,

ஆஸ்துமா என்றால் என்ன?

டிரிக்கர் எனப்படும் சிறு தூண்டுதல் களால், சுவாச குழாய்களின் உட்புறச் சுவர்களின் தசை இறுக்கமடைந்து உட்புற பாதையின் அளவு சுருங்கி  விடுகிறது. அதனால் குறைந்த அளவு காற்றே சுவாசிக்க முடியும். இதனால் ஏற்படும் மூச்சுத் திணறலே ஆஸ்துமா ஆகும்.

சிறு தூண்டுதல் என்பவை எவை?

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூண்டுதல்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை தூசி, சிகரெட், அடுப்பு புகை, பட்டாசு புகை, மகரந்த தூள், குளிர்ந்த  காற்று வீட்டில் உள்ள ஒட்டடை, வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள், குளிர்ச்சியான உணவு பதார்த்தங்கள், தட்ப வெட்ப மாறுதல் போன்றவை  ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள்.

யாருக்கெல்லாம் வரலாம்?

இது மரபணுக்கள் சம்மந்தப்பட்ட விஷயம். பரம்பரையில் யாருக்காவது அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை இருந்தால், அது ஜீன் எனப்படும் மரபணுக்கள்  மூலம் சந்ததியினருக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் சுற்றுப்புற சூழல் மற்றும் மாசுக்களின் தாக்கத்திற்கு உட்படும் போது இந்த ஒவ்வாமை  நோய் தூண்டப்படுகிறது.

அறிகுறிகள் எவை?

சிறிது தூரம் நடந்தவுடன் ஏற்படும் மூச்சுத்திணறல், விசில் சத்தத்துடன் சுவாசித்தல், தொடர் இருமல், இனம்புரியாத நெஞ்சு அழுத்தம், நெஞ்சுவலி,  அடிக்கடி மூக்கு வடிதல் ஆகியவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள்.

ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?

கண்டிப்பாக ஆஸ்துமாவை பக்கவிளைவுகள் இல்லாத நவீன மருந்துகள் மூலம் நன்கு கட்டுப்படுத்தி நாம் நல்ல சுவாசத்தை அடைய முடியும்.  ஆனால் முற்றிலும் குணப்படுத்த முடியாது.

நவீன மருத்துவ வசதி உள்ளதா?

ஆம். நாம் பயன்படுத்தும் இன்ஹேலர் எனப்படும் நவீன மருத்துவத்திற்கு நம்மை உட்படுத்துவதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுபாட்டிற்குள் கொண்டு  வரலாம்.

இன்ஹேலர் என்றால் என்ன?

மருந்துகளை மற்ற உறுப்புகளான குடல், ரத்தம், இருதயம், கல்லீரல், சிறுநீரகம், போன்றவற்றிற்கு செல்லாமல் நேரிடையாக நுரையீரலுக்கு செலுத்தும்  நவீன கண்டுபிடிப்பு. இதனால் மற்ற உறுப்புகள் மருந்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதுடன், உடனடி நிவாரணமும் கிடைக்கிறது.

இன்ஹேலரால் பக்கவிளைவு உண்டா?

கண்டிப்பாக கிடையாது. மருந்தை நேரிடையாக செலுத்துவதால் குறைந்த அளவு (மாத்திரைகளை விட ஆயிரத்தில் ஒரு பங்கு) மருந்துகளே  தேவைப்படுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்?

குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், தயிர், மோர், பழரசம் மற்றும் ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை, தர்பூசணி போன்ற குளிர்ச்சியான பழங்களை  தவிர்க்க வேண்டும்.

No comments

Powered by Blogger.