மழை பொய்த்ததால் கடல்நீரை குடிநீராக மாற்றிய இஸ்ரேல்
உலகின் மத்திய கிழக்கு பகுதியின் மையத்தில் அமைந்துள்ள இஸ்ரேல் பூமியின் வறண்ட பகுதியில் ஒன்றாக உள்ளது. குளிர்காலத்தில் அங்கு பெய்யும் சொற்ப மழையை நம்பியே அந்த நாட்டு மக்களின் நீர்த்தேவைகள் இருந்தன. இஸ்ரேலின் தண்ணீர்த் தேவையில் பாதியை மட்டுமே தீர்க்கும் இந்த மழையும் இந்த முறை மிகவும் சொற்பமாகவே பெய்தது.
இருப்பினும் இதுகாலம் வரை நீரை சிக்கனமாக செலவழிக்க உணர்ச்சிமிக்க விளம்பரங்களை மட்டுமே பார்த்துள்ள இஸ்ரேல் இந்த முறை மக்களுக்குத் தேவையான தண்ணீரை அளிக்க முடிந்தது என்று இஸ்ரேல் நீர் ஆணையத்தின் கடல்நீரைக் குடிநீராக்கும் பிரிவின் தலைவரான அவ்ரஹாம் டென்னி தெரிவித்துள்ளார்.
கடல்நீரைக் குடிநீராக்கும் இத்திட்டத்தின் முதற்கட்டப் பணி கடந்த 2005-ம் ஆண்டு அங்கு தொடங்கியது. இதுவரை அங்கு நான்கு கடல்நீர் சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐந்தாவது நிலையமும் செயல்படத் தொடங்கும் வண்ணம் இதன் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மக்களின் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய புரட்சி இதுவாகும் என்று டென்னி குறிப்பிட்டார். இந்த ஆண்டு அதிக மழைபொழிவைப் பெறும் வடக்கு இஸ்ரேல் கூட 50 முதல் 60 சதவிகித மழையை மட்டுமே பெற்றது, இந்த நிலையிலும் தங்களது சுத்திகரிப்பு முறைகளால் 90 சதவிகித கழிவுநீரை மறுசுழற்சிமூலம் விவசாயத்திற்குப் பயன்படுத்தி மக்களின் தண்ணீர்த் தேவைகள் நிறைவேற்றப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
தற்போது 35 சதவிகித குடிநீர் தேவைகள் இந்த சுத்திகரிப்பு நிலையங்காளால் பெறப்படுகின்றன என்றும் அடுத்த வருடம் இது 40 சதவிகிதமாக உயரும் என்றும் வரும் 2050-ம் ஆண்டில் 70 சதவிகித தேவைகள் இந்த நிலையங்கள் மூலம் நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தைப் பெரிதும் சார்ந்திருப்பது இந்நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு தாக்கப்படக்கூடும் என்ற அபாய உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளது என்று கூறப்படுகின்றது.
Post a Comment