Header Ads



றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார், ஹூனைஸ் பாருக் சண்டைபிடித்தார் - அமைச்சர் குணரத்தின வீரக்கோன்

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின்போது இனவாதத்தை தூண்ட வேண்டாம் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன், நேற்று திங்கட்கிழமை (26) பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் குணரத்தின வீரக்கோன், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். 

இந்நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'வட மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அவலங்களை நேரடியாக அவதானிக்கும் சந்தர்ப்பம் இன்றுதான் எனக்கு கிடைத்தது. இம்மக்களது மீள்குடியேற்றம் தொடர்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் பல தடவைகள் என்னிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், மேற்படி விடயமாக என்னிடம் சண்டை பிடிக்காத நாளே இல்லை. அவர்களது துன்பத்தை துயரத்தை இன்றுதான் நேரடியாக காண்கிறேன். இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீனை, சிலர் இனவாதியாகச் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இனிவரும் காலங்களில் அமைச்சர் றிசாத் பதியுதீனால் முன்னெடுக்கப்படும் வட மாகாண முஸ்லிம்களின் அபிவிருத்திக்கான நடவடிக்கைக்கும் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன். 

அதோடு, அவர் மீது கூறப்படும் இனவாத கருத்துக்களை வன்மையாகக்  கண்டிக்கின்றேன்.  வடக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கான நடடிக்கைகளை எடுப்பதற்கு எனது அமைச்சு பின்நிற்கப்போவதில்லை' எனவும் அமைச்சர் வீரக்கோன் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, மன்னார், உப்புக்குழத்தில் தற்காலிக கூடாராங்களில் வாழும் மக்களையும் அமைச்சர்கள் குழு நேரில் சென்று பார்வையிட்டது. 

No comments

Powered by Blogger.