இந்தியாவில் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டவர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு..!
நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரியளவில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன.
மகிந்த ராஜபக்சவுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கர்சாய், ஆகியோருக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
எட்டு நாடுகளின் உயர் மட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து புதுடெல்லி காவல்துறை இந்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதேவேளை, பதவியேற்பு நிகழ்வைக் குழப்பும் முயற்சியில் தீவிரவாதிகள் ஈடபடலாம் என்பதால், புதுடெல்லி காவல்துறை, துணை இராணுவம், தேசிய பாதுகாப்பு படை ஆகியவற்றைச் சேர்ந்த 6000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றியுள்ள 2 கி.மீ பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக கண்காணிக்கப்படவுள்ளதுடன், இந்தப் பகுதிக்கு மேலாக விமானங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வான் பாதுகாப்பு கருவிகளும் இந்தப் பகுதியில் பொருத்தப்படவுள்ளன.
துணை இராணுவம், சிறப்பு கொமாண்டோ பிரிவுகள், நடமாடும் துரித பதிலடிக் குழுக்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள், தேசிய பாதுகாப்பு படை கொமாண்டோக்கள் கேந்திர நிலைகளில் நிறுத்தப்படவுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்படவுள்ளன.
மேலும், வெளிநாட்டு அதிதிகள் உள்ளிட்ட, பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் 3000 பேரும் மயூரா ஷெரட்டன், தாஜ் மன்சிங், தாஜ் பலஸ், லீலா பலஸ், ஒப்ரோய் ஆகிய ஐந்து விடுதிகளிலும் தங்க வைக்கப்ப்டவுள்ளனர். இவை தினமும் நான்கு, ஐந்து தடவைகள் சோதனையிடப்பட்டு வருகின்றன.
////////////////
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, புதுடெல்லியில் கறுப்புக்கொடி ஏந்திய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தலைமையில் இந்தப் போராட்டம் புதுடெல்லியில் உள்ள ஜன்தர் மந்தரில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ளார்.
வரும் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில், பதவியேற்பு விழா நடக்கவுள்ள நிலையில், அன்று காலை 11 மணியளவில், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான இந்தப் போராட்டம் நடத்தப்பட்வுள்ளது.
அதேவேளை, இந்தப் போராட்டம், நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு எதிரானது என்ற தோற்றம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள மதிமுக முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
பெரும்பாலான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், சிறிலங்கா அதிபர் அழைக்கப்பட்டுள்ளதற்கு, எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும், நரேந்திர மோடிக்கு எதிரான பரப்புரையாக தாம் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, சிறிலங்கா அதிபரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டில் போராட்டங்களை நடத்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment