Header Ads



நரேந்திர மோடியும், இலங்கை முஸ்லிம்களும்..!


(எஸ்.எல். மன்சூர்)

இந்தியாவின் புதிய பிரதமராக ஆட்சிபீடத்தை அலங்கரிக்கவுள்ள பா.ஜ கட்சியின் தலைவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் மோடியவர்கள் எதிர்வரும் மே 26ஆம் நாள் தனது புதிய அமைச்சர்களுடன் இந்தியாவின் 14வது பிரதமராக பதவியேற்கிறார். இந்நிகழ்வுகளில் இலங்கை ஜனாதிபதியவர்கள் பங்குபற்றுவதற்கான அழைப்பும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறிப்பாக 'அயல் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அயல்நாட்டுடன் எப்போதுமே சுமுக உறவை விரும்பும் இலங்கை, அந்த உறவையும் நட்பையும் பலப்படுத்துவதையே விரும்புகிறது. இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுவதன் மூலம் இந்தியாவின் புதிய ஆட்சிப் பீடத்துடன் ஒரு நெருக்கமான உறவைத் தொடர்வதற்கும், இருதரப்பு ஊடாட்டத்தைப் பலப்படுத்துவதற்கும் இது நல்லதோர் சந்தர்ப்பமாகும் என கொழும்பு கருதுதுவதாக இந்திய வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் தற்சமயம் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி, அங்கிருந்து திரும்பிய பின்னர், புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் பங்குபற்றுவதற்காகப் புதுடெல்லி செல்லாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுமாறு இலங்கை உட்பட அனைத்துத் தென்னாசிய நாடுகளின் தலைவர்களுக்கும் புதுடெல்லி அழைப்பு அனுப்பியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய பிரதமாக தெரிவு செய்யப்பட்டுள்ள மோடி அவர்கள் அரசியலில் பல்வேறு காய்நகர்த்தல்களில் கைந்தேர்ந்தவராக திகழ்ந்துள்ளார். நரேந்திர தாமோதரதாசு மோதி (நரேந்திர மோடி), (பிறப்பு செப்டம்பர் 17, 1950) பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாகத்திகழ்ந்து,. ஒக்டோபர் 7, 2001 இல் இருந்து குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். தற்போதும் அவர் முதலமைச்சராக இருந்தவர்.

முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான நரேந்திர மோடி தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத்தில்; நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றிப்பெற்று, குஜராத்தின் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதில், அதிக ஆர்வம் கொண்டவராகவும் விளங்கியவர். மின்சாரம், தண்ணீர், வீதி வசதிகள், பெண்களுக்கான கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத்துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார். இவருடைய சாதனையைப் பாராட்டி, 'இந்தியா டுடே' நாளிதழ், 'இந்தியாவின் சிறந்த முதல்வர்' என்ற விருதினை வழங்கி கௌரவித்தது. மேலும், குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக 'கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா' என்ற அமைப்பு 'இ-ரத்னா' விருதையும் வழங்கி கௌரவித்தது. அவரது வார்த்தையின் அடிநாதமாக 'நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே, எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது' எனக் கூறியது மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தியும் காட்டிய நரேந்திர மோடியின் அரசியல் உயர்ச்சிகளின் வரலாற்றுப்படிகள் யாவும் சாதனைகளாகவே இருந்து வந்துள்ளன.

மேலும் மோடி அவர்களுக்கு பல்தரப்பட்ட எதிர்ப்புகள் இருந்தபோதிலும் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகைமிக்க மாநிலமாக மாற்றிக்காட்டினார். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, 'குட்கா' என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். மேலும், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக காண்பித்துக் கொண்டார். இதனால் மக்கள் நம்பினர். வெற்றிபெற்றுள்ளார். இதற்குள் புதைந்துகிடக்கின்ற இனக்குரோதங்களையும், குஜராத்திய இனக்கலவரங்களும் மாற்றங்கண்டன. சிவசேனாவின் கட்சியும் அதன் கொள்கைகளும் மறையலாயின.  

கிராமங்களின் இராஜ்ஜியம் என்கிற இந்தியாவின் புகழை உச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக அந்நாட்டு மக்கள் இன்று நரேந்திர மோடியைத்; தேர்ந்தெடுத்து பிரதமராக அழகு பார்க்கப் போகின்றனர். இந்நிலையில் அவரது கட்சியுடன் பின்னிப்பிணைந்துள்ள சிவசேனா எனப்படுகின்ற கட்சியும் காணப்படுகின்றமையானது அங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் வௌ;வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அண்மைக்காலமாக இலங்கைவாழ் மக்களிடையே மதரீதியான பிரச்சினைகளுக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்ற பொதுபலசேனா எனப்படுகின்ற குழுவின் செயற்பாடுகளில் கலக்கம் அடைந்துள்ள இலங்கைவாழ் சிறுபான்மைச் சமுகத்தினரின் பார்வையிலும்சரி, ஆட்சியமைக்கப்போகின்ற புதிய பிஜேபிகட்சிக்குள்ளே இருக்கின்ற சிவசேனாவின் செயற்பாடுகளுக்கும் ஒற்றுமை காணப்படுமாக இருந்தால் இருநாட்டிலும் வாழ்கின்ற சிறுபான்மையினச் சமுகம் எதிர்காலத்தில் பேராபத்துக்கள் ஏற்படுவதை எதிர்பார்ப்பதில் தவறொன்றுமில்லை.

ஆனால் இதற்கிடையில் இவரது ஆட்சியில் இந்திய மக்களின் சில பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்தாகவேண்டிய சூழ்நிலைக்குள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக இன்றைய இந்தியாவில் விலைவாசி உயர்வு நாட்டின் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு விலைவாசி உயர்வும் ஒரு முக்கிய காரணமாகும். ஏழை எழிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கக் கூடிய அத்தியாவசிய உணவு பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளின் உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது மோடியின் முதல் சவாலாகும். இது தொடர்பாக, தனது தேர்தல் அறிக்கையில் கூட பாஜகட்சி உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசு பொறுப்பேற்றதும், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது புதிய நிதி அமைச்சரின் பணிச்சுமையினைக் குறைக்க வரிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை வழங்க வேண்டிய பொறுப்பு புதிய பிரதமரான மோடிக்கு ஒரு சவாலாகும். அதேவேளை அயல்நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னையானது என்றுமே தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. மேலும், நக்சல்களின் தாக்குதலும் அவ்வப்போது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினை போன்றவற்றுடன் உள்நாட்டிலும், எல்லையிலும் நிலவும் தீவிரவாத சவால்களை முறியடிக்க வேண்டிய பொறுப்பும் புதிய பிரதமருக்குள்ள இன்றைய சவால்களாகும்.

ராணுவ தளபதி, கடற்படை தளபதி போன்ற அதிகாரிகளை தெரிவு செய்கின்ற பொறுப்புடன், புதிய அமைச்சர்களை எந்தக் கட்சிகளிலிருந்து பெற்றுக் கொள்வது என்பதும் யாருக்கு எந்தத்துறை போன்றனவும், நாட்டின் பொருளாதாரத் துறையினை கட்டியnழுப்பவேண்டியதும், ஊழலை ஒழிக்க அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கவும், அதேவேளை பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்கான, கடந்த ஆட்சியில் 78 அமைச்சரவை குழுக்கள் அமைக்கப்பட்டன. அதே போல, அதிக அதிகாரம் கொண்ட 16 அமைச்சரவை குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில், 9 அமைச்சரவை குழுக்கள் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இதனால், பல பிரச்னைகளில் தீர்வு காணப்படாமலேயே உள்ளன.

இன்றைய இந்தியாவில் தற்போது 28 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஜூன் 2ம் தேதி தெலங்கானா மாநிலம், நாட்டின் 29வது மாநிலமாக உதயமாகியது. அனைத்து மாநிலங்களுக்கும் ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களை மாற்றுமா? என்பதில் மோடி அரசு கவனம் செலுத்துவதுதில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, பிரதமரின் தலைமையின் கீழ் பொருளாதார ஆலோசனை குழு, பேரிடர் மேலாண்மை குழு உள்ளிட்ட 21 குழுக்களும் அமைக்கப்படும். இத்தகைய குழுக்களை மாற்றியமைக்க வேண்டிய பாரிய பொறுப்பும் பிரதமருக்கு உள்ளது. எனவேதான் இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட 'ஆர்.எஸ்.எஸ்' என அழைக்கப்படும் 'தேசிய தொண்டர் அணியில்' உறுப்பினராக இணைந்த மோடி அவர்கள், அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கிய மோடி அவர்கள் குஜராத் பல்கலைக்கழகம் ஒன்றில் இணைந்து அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றாராக விளங்கும் மோடி இப்பாரிய சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

அதேவேளை இலங்கையின் ஆதிக்தினை இந்தியாவால் கட்டுப்படுத்தப்படுமா என்பதற்கிடையில் இலங்கையுடன் தோழமை கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறும் இந்தியாவின் புதிய பிரதமர் மோடியின் உறவால் இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் பெரும்பான்மையினருக்குள் காணப்படும் பௌத்த துறவிகளின் ஒரு குழுவினரின் மதரீதியான நிந்தனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குறிப்பாக முஸ்லிம்களின் மறுமலர்ச்சியில் மலர்ச்சி காணப்படாதபோதிலும் துன்பகரமான நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கான அறிகுறிகள் இருக்குமாக இருந்தால் அதுவே போதுமானதாக இருக்கும். இன்று இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகளினாலும் கைவிடப்பட்டுள்ளதாக கருதப்படுகின்ற ஒரு சமுகத்தின் விடியலுக்குள் மேலும் இடிமழை பெய்யாமல் இருப்பதற்குரிய ஆக்கபூர்மான மந்திராலோசனைகளை இலங்கை இந்திய கூட்டுறவுகளால் ஏற்படுமாக இருந்தால் அதுவே போதுமானதாக இருக்கும்.

எனவே, இந்தியாவின் புதிய ஆட்சியில் மதரீதியான பிளவுகளுக்கு இடமிருக்காது என்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் கடந்தகால தவறுகள் ஆட்சியில் இருக்கின்றபோது நடைபெறாதிருக்கும் என்பதையே நாமும் நம்புவோம். அதேவேளை இலங்கைவாழ் முஸ்லிம்களும் தங்களுடைய பாதுகாப்புக்களை மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆளும் அரசியலில் மந்திரிகளாக உருவெடுத்துள்ள முக்கியமான முஸ்லிம் கட்சியின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் மக்களின் இன்னல்களைத் துயர்பகிர்வதற்கான முன்னோடித்திட்டங்களை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன நமது பிரச்சினைகளை நமது தலைவர்களுடன் இணைந்து தீர்வுகாணவேண்டும். நமது பார்வைகளை இந்தியாவில் ஒப்பிவிக்கத் தேவையில்லை. சரியான வாழிகாட்டுதல்களை நமது தலைவர்கள் காட்டுகின்றபோது மாத்திரம்...!  

1 comment:

Powered by Blogger.