வைஃபை கேமரா கூகுள் அறிமுகம்
இன்டர்நெட் உலகில் பலவேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, வலைதள தேடல்களில் முதலிடத்தில் உள்ளது கூகுள் நிறுவனம். வலைதளங்களை பயன்படுத்துவோரில் சுமார் 80 சதவீதம் பேருக்கு கூகுள் இணையத்தில் கணக்குகள் உள்ளது. மேலும் பிற சமூக வலைதளங்களில் நுழைவதற்கும் இந்த கூகுள் கணக்கு பயன்படுத்தும் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வலைதளங்களில் கிடைத்த வெற்றிகளை தொடர்ந்து மக்கள் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் தயாரிக்கும் பணியை தொடங்கியது.
செல்போன், டேப்லெட் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் கூகுள் கிளாசை அறிமுகப்படுத்தி, அனைவரின் பார்வையையும் தங்களது பக்கம் திருப்பியது. தற்போது டிரைவர் இல்லாமல் இயங்கும் காரை தயாரிக்கும் பணியில் அதிக கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம், மற்றொரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது.
அதாவது வைஃபை மூலம் இயங்கும் கேமரா. இந்த கேமராவை வீடு அல்லது அலுவலகத்தில் பொருத்தி, அதை வைஃபையுடன் இணைத்துவிடவேண்டும். பின்னர் நாம் தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். காரணம் வைஃபையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கேமரா குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை அது பொருத்தப்பட்டுள்ள இடத்தை புகைப்படம் எடுத்து நமது ஸ்மார்ட் போனிற்கு அனுப்பிவிடும்.
ஏற்கனவே வைபையில் இயங்கும் கேமராக்கள் சந்தையில் இருந்தாலும், கூகுள் நிறுவனம் தயாரிப்பில் பல தனித்தன்மைகளும் உள்ளது. அதாவது. வீட்டில் தீவிபத்து அல்லது மற்ற அசம்பாவிதங்கள் ஏதுவும் நேர்ந்தால் இந்த கேமராவில் உள்ள ஒரு சென்சார் கருவி புகைப்படத்துடன், அபாயத்தை தெரிவிக்கும் ஒருவித சங்கேத ஒலியையும் உங்களது ஸ்மார்ட் போனிற்கு அனுப்பும்.
இதன் மூலம் வெகு தொலைவில் இருந்தால் கூட வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை இருந்த இடத்தில் இருந்தே பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் இன்னும் வெளியிடாவிட்டாலும், இந்த தயாரிப்புக்கு சிறிய நிறுவனங்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் கால்பதிக்காத எலக்ட்ரானிக் பொருட்களே இருக்காது என்று கூறலாம்.
Post a Comment