Header Ads



முஸ்லிம்களுடன் பேச நேரம் ஒதுக்காத மஹிந்த ராஜபக்ஸ, பயந்து நடுங்குகிறார்..!

ஊழல் மோசடிமிக்க காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவை தாக்கிய அரசியல் சூறாவளி இலங்கையை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை விடவும் அமைச்சரான விமல் வீரவன்ஸவிற்கே அதிகம் பயந்து நடுங்குகிறார். முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்காத ராஜபக்ஷ அமைச்சர் விமலுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குகின்றமையிலிருந்தே அவருடைய பயம் வெளி உலகுக்கு காட்டப்படுகிறது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

இந்தியாவினை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த காந்தி குடும்ப ஆட்சி ஊழல், மோசடி உள்ளிட்ட ஏனைய குற்றச்சாட்டுகளை மையப்படுத்தி கவிழ்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் செயற்பாடுகள் பகிரங்கப்படுத்தப்பட்டது.

இதற்கமைய இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பீடமேறியுள்ளது. நரேந்திரமோடி இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் காணப்பட்ட ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் இலங்கையிலும் காணப்படுகிறது. ஆகவே, இந்தியாவினை தாக்கிய அரசியல் சூறாவளி இலங்கையை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் எமது நாட்டிலும் தென்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அரசின் பங்காளிகளான அமைச்சர் விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். அதேபோன்று நாட்டில் போராட்டங்களும் குறைந்தபாடில்லை. எனவே ராஜபக்ஷ குடும்ப ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிற்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அச்சமடைய தொடங்கியுள்ளார். இந்த அச்சத்தின் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சி.வி. விக்னேஸ்வரனை அழைத்துச் சென்று இந்தியாவினை ஏமாற்றுவதே அரசின் திட்டமாக இருந்தது.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பார்க்கிலும் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கே ஜனாதிபதி அதிகமாக பயப்படுகிறார்.

பாராளுமன்றத்தில் இரண்டு ஆசனங்களை தன்வசம் வைத்து கொண்டுள்ள விமல் வீரவன்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி, முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடிதம் எழுதி 3 வாரங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் இதுவரையில் ஜனாதிபதி எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றார்.

1 comment:

  1. ஊழல் மிகைத்த ஆட்சி என்று எல்லோருக்கும் தெரிந்த பின்பும். இன்னும் ஏன் உம்மாலும், மாற்றுக்கட்சி ஒன்றினாலும் நல்லதொரு தேர்வை முன்வைத்து. ஊழலுக்கும், மோசடிக்கும் முற்றுப்புள்ளி வைக்க இதுவரை முடியவில்லை. எதிர்வரும் தேர்தல்களிலாவது செய்வதற்கு எத்தனியுங்கள். பெளத்தர்களே சொல்லுகின்றார்களே. தற்போதைய ஆட்சியின் அசிங்கத்தை.

    ReplyDelete

Powered by Blogger.