உலகளவில் தொப்பை அதிகரிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
உலக அளவில் வேகமாக உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.உடல் பருமன் உலகின் தலையாய பிரச்னையாக உள்ளது. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காண பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றாலும், உடனடி தீர்வு கேள்விக்குறியாகவே உள்ளது.
உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 1980ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 188 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உடல் பருமன் முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்திய அமெரிக்கா, பசிபிக் மற்றும் கரீபியன் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. பெண்களின் உடல் பருமன் பிரச்னை எகிப்து, சவுதி அரேபியா, ஓமன், ஹோண்டுராஸ், பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிகம். நியூசிலாந்து, பக்ரைன், குவைத், சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் தொப்பை போடும் ஆண்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் உடல் பருமன் பிரச்னை 13 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு குழு உறுப்பினர் மேரி கூறுகையில்,
சுகாதாரமற்ற உணவு முறை, அதிக கொழுப்புள்ள உணவுகள், ஜங்க் புட் வகைகள் உடல் பருமனுக்கு முக்கிய காரணம். இதனால் இதய நோய்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆர்த்தரிடீஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னை 28 சதவீதம் பெரியவர்களிடமும் 47 சதவீதம் சிறுவர்களிடமும் காணப்படுகிறது. உடனடியாக இதை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றார்.
Post a Comment