என் உதிரத்தின் உயிரே...!
மகளே
ஒவ்வொரு விடியல்களும்
உன் முகம் காட்டியே
விடிகிறது.
இராப்பொழுதெல்லாம்
உன் மொழி கலந்து
என் செவிகளிலே
தேன் பாய்கிறது.
கண்மணியே
கற்கண்டே
கல்பெல்லாம்
உன் நினைவுகள்
நிறைந்து நிறைந்து
என் விழிவழியே
கண்நீர்
சிற்றோடையாய்
ஓடுகிறது.
என் செல்வமே
உன் பிஞ்சு மனசு
தந்தையயை தேடி
வாடும் படி
நான் செய்துவிட்டேனே
இப்பொல்லாப்பை
நினைத்து நினைத்து
ஓவ்வொரு
பொழுதுகளிலும்
நான் கரைந்து கரைந்து
துடிக்கிறேனே.
மகளே
என் கனவுகள்
முழுதும்
நீயேதான்
நிறம்பி நிறம்பி
பூக்கிறாய்.
தொலைபேசியில்
வாப்பா
என்று
நீ அழைக்கும் கணப்பொழுதில்
என் விழிகள்
கண்ணீர் மழையில்
நனைகிறது.
உன் மழலை
மொழிக்கு
அத்தனை ஈர்ப்பு சக்தி
கண்ணாடி உடைவதைப்போல்
என் இதயமும் உடைகிறது
அத்தனை துண்டுகளிலும்
உன் முகம் மட்டும்
ழுழு நிலவாய் முகம் காட்டும்.
மகளே
உன் ஞாபகங்களுக்குள்
என்னை மறப்பதால்
இப் பாலை வனச் சூரியன்
சுடுவதில்லை.
செல்ல மகளே.
எத்தனை சுகங்கள்
இங்கு மொத்தமாய்
கிடைத்தாலும்
உன்னருகே
நானிருந்து
உன் கரம் பிடித்து
ஓடி விளையாடுவது
போல வருமா.
பொறுமையாய்
பொறுத்திரு மகளே
என் வியர்வைத்
துளிகளுக்குள்
நீ ஆசைப்பட்ட
வெள்ளை வர்ண வீடு
பளிச்சிடுகிறது.
மகளே
ஒரு நாள் வரும்
அன்று
நாமெல்லாம்
ஒன்றாக
உண்ணவேண்டும்
என் தோழில்
நீ கனக்க வேண்டும்
சந்தோசம் மட்டும்
நம் வாசலில்
பூத்திருக்க
அல்லாஹ்வே
அருள் புரிவாய்.
ஆக்கம்:
கவிஞர். பாலமுனை யு.எல்.அலி அஷ்ரஃப்
கட்டாரிலிருந்து.
Post a Comment