தாயே... உந்தன் பெயரை சொல்லும் போது..!
வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது,வெயிலின் கொடுமை காரணமாக வாகன நடமாட்டமின்றி ரோடானது வெறிச்சோடிக் கிடக்கிறது.
முகத்தில் ஏழ்மையையும், உடையில் எளிமையையும் கொண்ட ஐம்பது வயதைத்தாண்டிய பெண் ஒருவர் அந்த வெயிலில் சைக்கிள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார், அவரது சைக்கிளின் பின்னால் ஒரு இளம் பெண்.
அந்த இளம் பெண்ணிற்கு இரண்டு கால்கள் இருந்தாலும் நடக்கவராது, இதன் காரணமாக இந்த பெண்ணை தனது சைக்கிளில் வைத்து எங்கே போனாலும் ஓட்டிக் கொண்டு செல்கிறார் தாய் ஜெயா.
ஜெயாவிற்கு சொந்த ஊர் வேலுார் (இந்தியா) மாவட்டத்தில் உள்ள முனுார் ஆகும். ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவருக்கு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் சங்கரன் என்பவருடன் திருமணமானது. வரிசையாக மூன்று குழந்தைகள்.
இதில் இரண்டாவது குழந்தைதான் மேகலா, ஆறாவது வரை நன்றாகத்தான் படித்துக் கொண்டு இருந்தார், படித்து அரசாங்க வேலை பார்த்து அம்மாவையும்,அப்பாவையும் நல்லா பார்த்துக்குவேன் என்று சின்ன வயசிலேயே சொல்லி, சொல்லி வளர்ந்தார்.
ஆனால் பாவம் ஆறாவது படிக்கும் போது அவருக்கு காய்ச்சல் என்ற பெயரில் பேரிடி இறங்கியது. பிள்ளைக்கு என்னாச்சோ? ஏதாச்சோன்னு பதறிப்போன தாய் ஜெயா ஏறாத ஆஸ்பத்திரியில்லை பார்க்காத மருத்துவம் இல்லை கடைசியில் மேகலாவினால் நடக்க முடியாது என்பதுதான் நிஜமாகிப் போனது.
மொத்த குடும்பமும் விக்கித்து நின்றது, கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு மகள் நடக்க முடியாது என்று நிச்சயமாகி விட்டது, பராவாயில்லை இனி 'நடக்க வேண்டியதை' பார்ப்போம் என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தார் ஜெயா.
மகள் நடக்கமுடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் அவள் ஆசைப்பட்டபடி படிக்க முடியாமால் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் மகளை படிப்பதற்காக சுமக்க ஆரம்பித்தார். மேகலாவும் பத்தாம் வகுப்பில் 419 மார்க் வாங்கியும் பிளஸ் டூவில் 860 மார்க் வாங்கியவர் பின்னர் வேலுார் அரசு கல்லுாரியில் பிஏ ஆங்கிலம் படித்து 58 சதவீதத்துடன் தேர்வு பெற்றுள்ளார்.
பள்ளிக்கூடத்திற்கு மகளை இடுப்பில் சுமந்து சென்றவர் கல்லுாரிக்கு சைக்கிளில் வைத்து அழைத்து சென்றார்.வீட்டில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள கல்லுாரிக்கு ஆட்டோவில் கொண்டு போய்விட்டு கூட்டி வரலாமே என்று நினைக்கலாம் ஆனால் கொண்டு போய் விட்டு கூட்டிவருவதற்கான மாத ஆட்டோ கட்டணம்தான் ஜெயா குடும்பத்தின் மாத வருமானமே.
ஆகவே சைக்களில் காற்று அடிக்கும் செலவோடு போகட்டும் என்று காலை 8 மணிக்கு சைக்கிளில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கல்லுாரி வாசலிலேயே காத்திருந்து பிறகு திரும்ப கூட்டிக் கொண்டு வீடுவந்து சேர்வார்.
'ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புள்ளைய படிக்கவைக்கிற, பேசாம மூலையில் உட்கார்த்தி வைச்சுட்டு ஏதாவது வேலையை பார்த்தால் நிம்மதியா சாப்பிட்டு துாங்கலாமே?' என்று பார்த்தவர்கள் எல்லாம் அறிவுரை கூறும்போது 'என் நிம்மதியே என் மகளின் படிப்பிலும் சந்தோஷத்திலும்தான் இருக்கிறது' என்று பதில் சொல்வார்.
தான்தான் எழுத படிக்கதெரியாம போய்விட்டோம் தன் மகளையாவது நன்றாக படிக்கவைத்து ஏதாவது ஒரு வேலையில் சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும் ஜெயா ஒரு வெள்ளந்தியான பெண்ணும் கூட.
கல்லுாரி எவ்வளவு துாரம் என்று கேட்டால் கிலோமீட்டரில் சொல்லத்தெரியாது 'என் மகளை சைக்கிளில் இட்டுனு ஏறி மிதிச்சா அரை அவுர்ல போயிடுவேன்' என்று வேலுாருக்கே உண்டான மொழியில் பேசுகிறார்.
யாருடைய இரக்கமும் எவருடைய உதவியும் இதுவரை எட்டிப் பார்க்கவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் அதை துளியும் ஜெயா எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதன் மறுபக்கம். மகளின் பரிதாப நிலையை சொல்லி உதவி பெருவதை ஜெயா ஒரு போதும் விரும்பியது இல்லை.
என் மகள் நான் சுமக்கிறேன் என்று சொல்லி விட்டு இப்போது மகளின் விருப்பப்படி அதே கல்லுாரியில் எம்ஏ ஆங்கில படிப்பில் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
Post a Comment