Header Ads



நிலைமாறும் தலைவர்களும், தடுமாறும் சமூகமும்

(நவாஸ் சௌபி)

சமூகம் ஒரு தலைவனை அடையாளப்படுத்துகிறது ஒரு தலைவன் சமூகத்தை அடையாளப்படுத்துகிறான். 

இதனால்தான் தலைவன் எவ்வழியோ அதன் சமூகமும் அவ்வழி என்றும் அல்லது ஒரு சமூகம் எவ்வாறு உள்ளதோ அதன் தலைமையும் அவ்வாறே இருக்கிறது என்றும்  குறிப்பிடப்படுகிறது.

அல்குர்ஆன் இதனை மிகத் தெளிவாக ஆதாரப்படுத்துகிறது. அதாவது ஒரு சமூகம் தனது உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ் அந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பது அதன் தெளிவாகும்.

இதன்படி ஒரு சமூகத்தின் தலைமைகள் குறித்த முழுப் பொறுப்பும் சுமையும் சமூகத்திற்குரியதாகவே இருக்கிறது என்பதைப் புரியலாம். இன்று பள்ளிவாசல்கள் தொடக்கம் பாராளுமன்றம்வரையுள்ள எமது தலைமைகளின் வெளிப்பாடுகள் யாவும் அச்சமூகத்தின் பிரதிபலிப்புக்களே ஆகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இப்படி தலைவர்களை உருவாக்கும் மிகுந்த பொறுப்புக்கொண்ட ஒரு சமூகம் தலைவர்களைத் தெரிவுசெய்கின்ற குறிப்பிட்ட தருணத்தில் அதனை முறையாகப் பின்பற்றாது. பின்னர் சமூக நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்படுகின்ற போது தலைமைகளை விமர்சிக்கின்றவர்களாகவும் தலைவர்கள் மீது முழுக் குற்றத்தையும் சுமத்திவிடுகின்றவர்களாகவும் இருந்துவிடுகின்றோம். 

இதில் அரசியல் ரீதியாக பிரதேச சபைகள் தொடக்கம் பாராளுமன்றம் வரை சென்றுள்ள உறுப்பினர்கள், தவிசாளர்கள், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் என்பவர்களை நாங்கள்  எங்கள் பிரதிநதிகளாகவும் தலைவர்களாகவும் கருதிக்கொண்டு தெரிவு செய்கின்ற போது எங்களது எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் சமூகத் தேவைகளுக்குமாக அவர்களைத் தெரிவு செய்கின்றோமா? என்பதை எமது சமூகம் தனது முகத்திற்கு நேரே விரலை நீட்டிக் கேட்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் தலைவர்களின் கண்ணாடியைத்தான் தூக்கிப் பிடித்து விமர்சிக்கின்றவர்களாக இருக்கின்றோம். எப்போதாவது சமூகம் என்ற நமது முகக் கண்ணாடியை தூக்கிப்பிடித்து இதில் நாங்கள் என்ன தவறு விட்டிருக்கின்றோம் என்று பார்க்கின்றோமா? 

தங்களுக்கான அரசியல் அதிகாரங்களை உருவாக்குவதில் தாங்கள் தெரிவு செய்கின்ற பிரதிநிதிகளும் தலைமைகளும் குறித்து முதல் தவறுவிடுகின்றவர்களாக சமூகமே இருக்கின்றார்கள் அந்த தவறு திருத்தப்பட்டால் தலைவர்களின் தவறு திருத்தப்பட்டுவிடும். 

தேர்தலில் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கின்றபோது விடுகின்ற தவறினைப்போன்று தெரிவு செய்த பிரதிநிதிகளையும் தலைவர்களையும் வழிநடத்துவதிலும் அவர்களுக்கு கட்டுப்படுவதிலும் மேலும் பல தவறுகளை எம்மக்கள் தொடராகச் செய்கின்றார்கள்.

அதாவது தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் பிரதிநிதிகளையும் தலைவர்களையும் தெரிவு செய்வது தொடக்கம் அவர்களை வழிநடத்துதல் அவர்களுக்கு கட்டுப்படுதல் ஆகிய அனைத்திலும் பணத்தைக் குறிவைத்தே  அதிகப்படியான எமது மக்களின் மனோநிலை செயற்படுகிறது. 

குறிப்பாக எமது அரசியலில் எந்த வேட்பாளர் அதிக பணம் செலவிடுகின்றாரோ அவரே அதிக வாக்குகளைப் பெறுகின்ற முடிவுகளை கடந்த பல தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. 

கட்சியின் மூத்த துணைத்தலைவர்கள் தோற்றுப் போக புதிய முகங்களுடன் வந்தவர்கள் முதன்மை வேட்பாளர்களாக வாக்குகளைப் பெற்றார்கள் என்றால் எமது மக்கள் கட்சிக்கும் கொள்கைக்கும் வாக்களிக்காது காசுக்கும் சொகுசுக்கும் பெரும்பான்மை வாக்குகளை அளித்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. 

எமது மக்கள் இன்று தேர்தல் காலத்தினை அரசியல்வாதிகளிடம் பணம் கறக்கும் ஒரு காலமாக எண்ணி முடிந்தளவு வருமானம் உழைக்கும் ஒரு துறையாக அரசியலை மாற்றியிருக்கிறார்கள். அரசியல்வாதிகளுள் பெரும்பகுதியினரும் முதலீடு செய்வது போன்று தேர்தலில் பணத்தை செலவு செய்கிறார்கள். பின்னர் இட்ட பணத்தைப் புரட்டுவதற்கான ஒரு வழியாகப் பதவிக்காலத்தைப் பயன்படுத்தும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. என்ன செய்வது அடுத்த தேர்தலுக்கும் செலவு செய்யப் பணத்திற்கு அவர்கள் எங்கு போவது? விட்ட இடத்தில்தானே பிடிக்க முடியும்.

பிரதேசசபை தேர்தலுக்கு 25 இலட்சம் மாநகரசபைத் தேர்தலுக்கு 50 இலட்சம் மாகாணசபைத் தேர்தலுக்கு 1 கோடி பாராளுமன்றத் தேர்தலுக்கு 2 கோடி என்று பஜட் தேர்தலுக்குத் தேர்தல் கூடிக்கொண்டே வருகிறது. ஒரு கட்சியின் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் தேர்தல் செலவையும் ஒன்று சேர்த்தால் எமது சமூக வறுமைக்கு ஒரேநாளில் தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற ஒரு மறைமுக உண்மையும் இதில் இருக்கிறது. 

இதனால்தான் இன்று அரசியல் விஞ்ஞானம் என்ற கருத்தியலை அரசியல் வியாபாரம் என்று பார்க்கவேண்டியுமிருக்கிறது.  தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அரசியலை இலாபத்தோடுதான் நகர்த்துகின்றார்கள். இப்படி இலாபம் ஈட்டும் ஒரு துறையாக வளர்ந்திருக்கும் அரசியலில் சமூக நலன், சமூக உரிமை, சமூகப் பாதுகாப்பு குறித்து நாங்கள் கேள்வி எழுப்புவதிலும் விமர்சிப்பதிலும் என்ன அர்த்தம் இருக்கிறது. அத்திவாரத்தைப் பிழையாக இட்டுவிட்டு கூரை ஓட்டை என்றால் எப்படி?

தேர்தலை ஒரு உழைப்பாகப் பார்த்து வாக்களிக்கும் மனநிலை மக்களுக்கும் ஏன் ஏற்படுகிறது என்றால், தேர்தலில் வெற்றி பெற்றபிறகு ஒருசில அரசியல்வாதிகளைச் சந்திப்பதும் அவர்களின் சேவையைப் பெறுவதும் பெரிய போராட்டமாகவே ஆகிவிடுகிறது. அதற்காகவே மக்கள் தேர்தலை வைத்து அரசியல்வாதிகளிடம் எடுக்க வேண்டியதெல்லாம் எடுத்துவிட்டு அதன்பிறகு அவர்களிடம் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். 

அதிகப்படியான மக்கள் தங்கள் வாக்குகளை காசுக்காகப் போடுவதால்  பல அரசியல்வாதிகளும் தம் விருப்புபடி செய்வதெல்லாம் செய்துவிட்டு  இறுதியில் காசு அரசியலை வைத்து வாக்குகளைப் பெறலாம் என்ற முடிவுடன் மக்கள் தொண்டை மறந்துவிடுகிறார்கள். தேர்தலின் போது வீடுவீடாக வந்தவர்கள் வெற்றி பெற்ற பிறகு தொலைபேசித் தொடர்பிலும் வராது மறைந்துவிடுகிறார்கள். இப்படி சமூகத்தைப் பார்க்க வேண்டிய அரசியல்வாதிகளின் கண்களை துரதிஷ்டமாக நாங்களே குருடாக்கிவிட்டு ஆபத்துவரும்போது குரல் கொடுங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அவர்களிடம் கூறுவது குருடரைப் பார்த்து விழி, விழி என்று கூறுவது போன்றுமிருக்கிறது.

எனவே முஸ்லிம் அரசியல் உரிமைக்காகவா காசுக்காகவா? என்பதை முதலில் மக்கள் முடிவெடுக்க வேண்டும். மக்களுக்கு காசுதான் வேண்மென்றால் அரசியல் தலைமைகள் காசுதான் உழகை;க வேண்டும். மக்களுக்கு உரிமைதான் வேண்டும் என்றால் எமது தலைமைகள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். இரண்டும் என்ற நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு இருப்பது நியாயமில்லை. அப்படி இருப்பதால்தான் இன்று நிலைமாறும் தலைவர்களையும் தடுமாறும் சமூகத்தையும் நாம் கொண்டிருக்கின்றோம்.  

உதாரணத்திற்கு தமிழரசுக் கட்சியின் தேர்தல் வாக்குகள் இன்றுவரை உரிமைக்காகவே அளிக்கப்படுகிறது. அதனால்தான் அக்கட்சியின் அரசியல் தலைமைகள் உரிமைக்காக மட்டும் குரல்கொடுக்கும் அரசியலைச் செய்துகொண்டுவருகிறார்கள். அதற்காக அவர்கள் அதிக பணம் செலவிடுவதுமில்லை.

ஆனால் இன்று முஸ்லிம்களின் உரிமைத்துவ அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் செய்வதாகக் கூறிக்கொள்கிறோம் இருந்தும் தேர்தல் காலங்களில் இக்கட்சியின் வேட்பாளர்களே அதிக பணம் செலவிட வேண்டியுமிருக்கிறது. இது மக்களின் தவறா? கட்சியின் தவறா? மாறாக எமது உரிமைக்காக நாங்களே அதிக விலை கொடுக்க வைக்கின்றோமா?

இவ்வாறு அதிக விலைகொடுத்து வெற்றிபெறுவதால்தான்; எமது கட்சிகளும் அபிவிருத்தி என்ற பெயரில் அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறதா?  எமது கட்சிகள் வகுக்கும்; வியூகங்ளும் அரசுடன் இருப்பதற்காகத்தான் வகுக்கப்படுமா? எதிர்கட்சி அரசியல் எமக்கு வங்குறோத்து நிலையாகிவிடும் என்று அதனை யாரும் நாடுவதில்;லையா? முஸ்லிம் அரசியலில் யாரும் நட்டப்பட விரும்பாமல் இலாபம் உழைக்கவே வழி தேடுகின்றார்களா? 

இன்று முஸ்லிம் சமூகத்திற்கு துடிதுடிக்க நடக்கும் பெரும்பான்மை பேரினவாத கொடுமைகளுக்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க நாக்கில்லாதவர்கள் முச்சந்திகளில் மேடைபோட்டு குடல் கிழியக் கத்துவதால் காசுதான் செலவாகுமே தவிர தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை. 

ஆகவேதான் எனது மண்ணின் மக்களே முஸ்லிம் அரசியல் உரிமையா? உழைப்பா? என்பதை இனிவரும் தேர்தல்களில் நாம் திடமாக முடிவெடுக்கும்படி அரசியல் முதலீட்டாளர்களின் முதலீடுகளை முட்டைகட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு உரிமைத்துவ அரசியலைக்; கொண்டவர்களின் குரல்களை மேலோங்கச் செய்வோம்.

நாங்கள்தான் எங்கள் தலைவர்களைத் தீர்மானிக்க வேண்டும். தலைவர்கள் எங்களைத் தீர்மானிக்க கூடாது.

1 comment:

  1. செளபி அவர்களே, உங்களை போன்றவர்கள் ஏன் தேர்தல் காலத்தில் நல்ல தலைவர்களை மக்களுக்கு இனம் காட்ட முடியாது. தற்போது உள்ளவர்களை விட சிறந்தவர்கள் எவராவது உள்ளார்களா என்பதை உங்களால் இனம் காட்ட முடியுமா?...... அப்படியானவர்கள் தற்போது உள்ள சமூகப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை மக்கள் முன் எடுத்துக் கூரலாமெ....

    தமிழர்களின் அரசியல் பயணம் வேறு ( அது சரியா பிழையா என்பது விவாதத்துக்குரியது ) முஸ்லிம்களின் அரசியல் பயணம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    பாட கிடைத்தால் கிழவியும் பாடுவாள் போல் உள்ளது......!!!!

    ReplyDelete

Powered by Blogger.