Header Ads



பேரீத்தம் பழங்களைக் கூட அபகரித்து விட்டனர் - அஸாத் சாலி

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (28.05.14) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்

அரசாங்க தரப்பு உறுப்பினர்களின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் மோசமடைகின்றது. அண்மையில் பிரதி அமைச்சர் ஒருவர் தென் பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்திலும் பார்க்க அதிகமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை செலுத்தி வந்துள்ளார். அவர் கொட்டாவையை வந்து சேர்ந்ததும் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர் தண்டப் பணம் செலுத்துவதற்கான நோட்டீஸை வழங்கியுள்ளார் ஆனால் அதை ஏற்க மறுத்த அந்தப் பிரதி அமைச்சர் தனக்கு நோட்டீஸ் வழங்கிய பொலிஸ் அதிகாரியை தன்னிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியுயள்ளார். அது மட்டுமல்ல அந்த பொலிஸ் அதிகாரி இந்த சம்பவம் நடந்து ஒரு சில மணி நேரத்துக்குள் அங்கிருந்து வேறு ஓர் இடத்துக்கு மாற்றமும் செய்யப்பட்டுள்ளார். இது தான் இன்று இந்த நாட்டில் சட்டத்துக்கு இருக்கின்ற மதிப்பு. தொலைக்காட்சியைப் பார்த்தாலோ அல்லது பத்திரிகையை புரட்டினாலோ எல்லாமே கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று தான் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எதியோப்பியா, உகண்டாவை விட நாடு மிக மோசமான நிலைக்கு வந்து விட்டது. எப்போதும் எங்கு பார்த்தாலும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர் கொண்ட நிலையிலேயே தலைநகரம் காணப்படுகின்றது. இந்த நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் இது போன்றதோர் நிலை காணப்பட்டதில்லை. நாட்டிலும் இந்த அளவுக்கு மோசமாகக் குற்றச் செயல்கள் தலைவிரித்தாடியதும் இல்லை. பொலிஸார் சட்டத்தை நிலைநாட்ட முனைந்தால் அவர்ளை அரசியல்வாதிகள் தண்டிக்கின்றனர்.

இன்று அரசாங்கத்துக்குள் மாபெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களே இதை அன்றாடம் ஏதோ ஒரு வகையில் கூறி வருகின்றனர். நாம் இதைப் பற்றிக் கூறத் தேவையில்லை. அண்மையில் அரசுக்கு விரோதமாகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பல அமைச்சர்கள் மௌனம் சாதிக்க காரணமும் இந்த உள் வீட்டு குழப்ப நிலைதான்.

கடந்த வாரம் வட்டரக்க விஜித தேரரை சுடுவதற்கான மற்றொரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பொலிஸ் மெய்க்காவலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அவர் இரவு முழுவதும் மரத்தின் மீது ஏறி இருந்து தனது உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்தக் காட்சிகளை நாம் பேஸ்புக்கில் காணக் கூடியதாக உள்ளது. இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பதுளை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத அடிப்படையில் கோஷங்களை எழுப்பி பொது பல சேனா பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. ஒரு இனத்துக்கு எதிராகவும் நாட்டின் அமைதியை குழப்புவதற்கும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை சட்டப்படி தடுத்து நிறுத்த பொலிஸார் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. இன்று நானோ சுமந்திரனோ அல்லது மனோ கணேஷனோ இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமா? பொலிஸார் உடனே நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்று வந்து அதை தடுத்து விடுவார்கள். ஏன் பொது பல சேனா விடயத்தில் இதை செய்ய முடியாது என்று பொலிஸ் மா அதிபரிடம் நான் கேள்வி எழுப்புகின்றேன். இப்படியே சென்றால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்?

தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவைச் சேர்ந்த ஒரு ஆணையாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஒரு தகவலில் இந்த ஆணைக்குழு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது என்றும் அதனால் மக்களிடமிருந்து அதற்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைவடைந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார். இதுதான் உண்மை நிலை. இந்த நிலை மாறவேண்டுமானால் நாம் அடிக்கடி வலியுறுத்தி வருவதைப் போல் இந்த நாட்டின் அரசியல் யாப்பின் படி சகல சுயாதீன ஆணைக்குழுக்களும் வரைவாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். சில அமைச்சர்களின் மனைவிமாரே அமைச்சர்கள் சட்ட விரோதமாக பெருமளவு சொத்துக்கள் சேர்த்துள்ளனர் என்று லஞ்ச ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவை எதுவும் விசாரிக்கப்படவில்லை. அவற்றை விசாரிக்க விடாமல் தடுத்து வருபவர் வேறு யாரும் அல்ல. ஜனாதிபதியே அவ்வாறு செய்து வருகின்றார். இது உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இடம் பெறாத ஒரு விடயம். இந்நிலையில் மக்களுக்கு எப்படி இந்த ஆணைக்குழு மீது நம்பிக்கை ஏற்படும். நாட்டில் சுதந்திர விசாரணை ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும், 13வது திருத்தச் சட்டம் மேலும் அதற்கு அப்பாலும் சென்று அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதெல்லாம் நாம் சொல்லும் விடயங்கள் அல்ல. மகிந்த சிந்தனை மற்றும் மகிந்த சிந்தனை எதிர்கால வேலைத் திட்டம் என்பனவற்றின் மூலம் நாட்டு மக்களுக்கு கூறப்பட்ட விடயங்கள். ஆனால் அவை அனைத்தும் இன்று எழுத்தில் மட்டுமே உள்ளன.

இந்தியாவில் ஒரு மடையன் ஆட்சிக்கு வந்துள்ளார். அவர் நாம் முன்னர் கூறிய விடயங்களை அறிந்திருக்க மாட்டார். எல்லாமே புதிதாகத் தொடங்கும் என்று ஆளும் தரப்பு தப்புக் கணக்குப் போட்டு விட்டது. ஆனால் மோடி தான் ஒரு மடையன் அல்ல. உங்களை நான் விடப் போவதும் இல்லை. இந்திய அரசுக்கு என்ன வாக்குறுதிகளை இதற்கு முன் அளித்தீர்களோ அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என முதலாவது சந்திப்பிலேயே வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் ஆட்சி மாறினால் இலங்கையைப் போல் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் என்பது அரசு போட்ட தப்புக் கணக்கு என்பதை தற்போது அரசாங்கம் உணரத் தொடங்கியுள்ளது. அங்கு ஆட்சி மாற்றம் என்பது வேறு அரச நிர்வாகம் என்பது வேறு. ஆட்சி மாறினால் நிர்வாகமும் தலைகீழாக மாற வேண்டும் என்ற நிலை அங்கு இல்லை. இலங்கை ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகள் ஒரு நாட்டுக்கும் அரசுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் என்ற நிலையில் தான் புதிய நிர்வாகம் அதைப் பார்க்கத் தொடங்கியுள்ளது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தற்போது பதவிகளைப் பெறவேண்டும் என்பதற்காக பலர் ராஜபக்ஷ என்ற நாமத்தை தமது பெயரோடு சேர்த்து வருகின்றனர். காரணம் பதவிகள் வழங்கப்படுகின்றபோது ராஜபக்ஷ என்ற பெயர் உள்ளதா என்று பார்க்கப்படுகின்றதே தவிர அவர் அந்தப் பதவிக்கு தகுதியானவரா என்று அவதானிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த நிலை விரைவில் மாறும். உண்மையில் ராஜபக்ஷ என்று பெயர் உள்ளவர்கள் கூட அதை அழிக்கும் நிலை தோன்றும். காரணம் அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் துரத்தி துரத்தி அடிக்கும் ஒரு நிலைமை இந்த நாட்டில் உருவாகும். அது நிச்சயம்.

இந்தியாவின் இன்றைய சனத்தொகை சுமார் 120கோடி. ஆனால் மோடியின் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 23 மட்டுமே. இணை அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் எல்லாம் சேர்த்து மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 45 மட்டுமே. ஆனால் நமது நாட்டின் சனத்தொகை சுமார் இரண்டு கோடி மட்டுமே. ஆனால் எங்களுக்கு எத்தனை அமைச்சர்கள் உள்ளனர்? அமைச்சர்களின் எண்ணிக்கை 60 பிரதி அமைச்சர்கள் திட்ட அமைச்சர்கள் என எல்லாம் சேர்த்து 123 அல்லது 130ஆகவுள்ளது. ஜனாதிபதி இந்தப் பதவியேற்பின் போது அங்கிருந்தார். இது அவரை வெற்கம் அடையச் செய்திருக்க வேண்டும். தான் எப்படி அரசாங்கம் அமைத்துள்ளேன் என்று வந்து பாருங்கள் என்று தனது திறமையைக் காட்டத்தான் மோடி ஜனாதிபதியை அழைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

மோடி பதவிக்கு வந்ததும் இந்தியாவில் இன்னொரு ராஜபக்ஷ உருவாகிவிட்டார் என்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் தவறானது. அவர் எந்தவொரு சட்சியினதும் ஆதரவின்றி தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளார். ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் இந்த நாட்டில் இது ஒரு போதும் சாத்தியமாகாது. இதற்கு முன் நடந்ததும் இல்லை. இனிமேல் நடக்கப் போவதும் இல்லை. இவர்கள் எந்தக் காலத்திலும் கூட்டு சேர்ந்து தான் கஞ்சி குடிக்க வேண்டுமே தவிர. தனித்து ஒரு போதும் இவர்களால் கஞ்சி குடிக்க முடியாது. மேலும் மோடியின் ஒட்டு மொத்த பிரசாரமும் ஊழலுக்கு எதிரானதாக இருந்தது. நல்லாட்சிக்கான குரலாக அது இருந்தது. அதனால் தான் மக்கள் இந்தளவு அதீத நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்துள்ளனர். ஜனாதிபதியால் இப்படி ஒரு நிலையை இந்த ஜென்மத்தில் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

ஜனாதிபதிக்கு இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே தெரியாது. அவர் மோடியின் பதவிப்பிரமாணத்துக்காக இந்தியா செல்லுமுன் இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செ;யுமாறு உதட்தரவிட்டுள்ளார். ஆனால் அப்படி விடுதலை செய்ய நாட்டில் இந்திய மீனவர்கள் எவரும் தடுத்து வைக்கப்பட்டில்லை என்று மீன் பிடி அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்ற போது இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். தற்போது போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்கள் சிலர் தான் இலங்கை சிறையில் உள்ளனர். ஒரு வேளை அவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளாரோ என்று இந்த அதிகாரி தற்போது குழப்பம் அடைந்துள்ளார். அந்தளவுக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் தான் ஜனாதிபதி உள்ளார்.

சவூதியில் இருந்து இம்முறை அனுப்பப்பட்ட பேரீச்சம் பழங்களுக்கு என்ன நடந்தது என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இது முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் விநியோகிப்பதற்காக வருடாந்தம் அனுப்பப்படுவது. இம்முறை அவர்களின் பேரீச்சம் பழ அறுவடை காலம் முன்கூட்டி வந்ததால் முன் கூட்டியே அவை இலங்கைக்கும் அனுப்பப்ட்டுவிட்டன. முஸ்லிம் விவகார திணைக்களத்துக்கு வர வேண்டிய இந்தப் பழங்களை இம்முறை அங்கு அனுப்பாமல் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா பொறுப்பேற்று அது சிங்கள மக்களின் புத்தாண்டு காலத்துக்காக வந்துள்ளது என்று உரிமை கோரியுள்ளார். நன்கொடையாக முஸ்லிம்களுக்கு அனுப்பப்படும் இந்த பழங்கள் அப்பாவி சிங்கள மக்களை சென்றடைந்தாலாவது பரவாயில்லை. ஆனால் இவை தற்போது புறக்கோட்டை வர்த்தகர்களுக்கு விற்பனைக்கு வருவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. அவற்றை வாங்க வர்த்தகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். காரணம் அவை விற்பனைக்கு உரியவை அல்ல என்று அவற்றின் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் என்னோடு தொடர்பு கொண்டு அவற்றை வாங்கலாமா என்றும் கேட்கின்றனர். அவற்றை வாங்க வேண்டாம் அந்த வர்த்தகம் உங்களுக்குத் தேவையில்லை என்று நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். இந்த நாட்டு முஸ்லிம்களின் நிலையைப் பாருங்கள். நோன்பு காலத்தில் நோன்பு துறக்க இலவசமாகக் கிடைக்கும் பேரீத்தம் பழங்களைக் கூட அபகரித்து விட்டனர். எதிர்வரும் ஜுன் மாத இறுதியில் நோன்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில்தான் திருடப்பட்ட பேரீச்சம் பழங்கள் இப்போது சந்தைக்கு விற்;பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. இது பற்றி அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியிடம் பேசினாராம். அப்போது இந்த விடயம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று அவருக்கு கூறப்பட்டுள்ளது.சிங்கள மக்களுக்கு அவர்களுடைய புத்தாண்டுக்கு பிரதி அமைச்சரோ அல்லது அரசாங்கமோ ஏதாவது வழங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் சாரியோ அல்லது வேறு ஆடைகளையோ வாங்கிக் கொடுத்திருக்கலாம். எமக்காக இலவசமாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களை திருடிதான் தானம் வழங்க வேண்டுமா? சிங்கள மக்களுக்கு கூட அது வழங்கப்படாமல் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளமை பெரும் வேதனையளிக்கின்றது. 

இதுதான் இன்றைய அரசின் நிலை. இந்த அரசு இனிமேல் திருந்துவதற்கான அறிகுறியே தென்படவில்லை. இந்தியாவில் ஏற்பட்டது போன்றதோர் நிலை இங்கும் ஏற்பட வேண்டும். அதற்கான ஒரு பொது எதிரணியை நாம் ஏற்படுத்த வேண்டும். பொது வேட்பாளர் யார் என்பதல்ல தற்போதைய பிரச்சினை. ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின் அதைப்பற்றி நாம் யோசிக்கலாம். ஆனால் இன்று தேவை அவ்வாறானதோர் நிலையை எதிர்கொள்ள ஒர் பொது எதிரணி மேடை. அதை உருவாக்க நாம் அர்ப்பணத்தோடு பணிபுரிய வேண்டும் என சகல எதிர்க் கட்சிகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறானதோர் பொது எதிரணி மேடை ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் இந்த நாட்டு மக்களுக்கு எற்பட்டுள்ளது. அந்தத் தேவையை நாம் நிறைவேற்ற வேண்டும். அமைச்சர்கள் பலர் இரசகியமாகக் கூடி இதுபற்றி பேசத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அரசுக்கு வக்காளத்து வாங்குவதும் தற்போது குறைந்துள்ளது. விரைவில் ஒரு அமைச்சர் மேலும் 17 பேருடன் அரசை விட்டு வெளியேறத் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 60 பேர் கொண்ட ஒரு அணி தற்போது அரசிலிருந்து கொண்டே அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

1 comment:

Powered by Blogger.