Header Ads



சிங்கள - முஸ்லிம் கலவரத்தின் நூற்றாண்டினை நினைவுறுத்தத் துடிக்கும் பேரினவாதம்..!

(தந்திமகன்)

1915ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஒரு சிறு சம்பவம் இந்நாட்டின் பெரும்பான்மை, சிறுபான்மையினருக்குள் ஏற்பட்ட இனக்குரோத வெடிப்பு மாபெரும் கலவரமாகி அப்போதிருந்த சிங்களத் தலைவர்களையும் கைது செய்யும் அளவுக்கு மிகைத்திருந்தன. அதுமட்டுமன்றி, நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்களையும் அன்றைய ஆங்கிலேய படையினரால் சுட்டுக் கொல்லப்படவும் காரணமாகவிருந்த சம்பங்களின் பின்னணியில் ஒரு நூற்றாண்டை நினைவுறுத்தும் வகையில் அச்சம்பவம் நடைபெற்ற கம்பளையை நோக்கிய பெரும்பான்மையினரின் நகர்வுகள், அதனூடாக நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அண்மையக் காலச் சம்பவங்கள் இதனையே தொட்டுக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளிவைப்பது போல இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் ஒற்றுமை என்கிற சமானியம் இல்லாமையினால்தான் முஸ்லிம்களை தொடர்ந்தும் பெரும்பான்மையினருக்குள் புகைந்துக் கொண்டிருக்கின்ற பொதுபலசேனா போன்ற குழுக்கள் அடக்க முயற்சிக்கின்றன. அந்த அடக்கு முறைக்குள் அள்ளுண்டு போனாலும் நமது பட்டம் பதவிகளை பறக்கவிடாமல் அரசியலில் அநியாம் பேசித்திரிகின்ற இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறு கொட்டாவி விட்டுக் கொண்டு ஊர் ஊராய் வந்து பேசுவதால் எவ்விதமான பயனேதுமில்லை. அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கின்றபோது நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இப்போது தேர்தல் ஒன்றுக்கான மணி ஒலிக்கப்போகிறது. அதற்கான முஸ்தீபுகளை மேற்கொள்ள முஸ்லிம்களின் நாடிபிடிக்கின்ற ஒரு படலத்தை முக்கியமான முஸ்லிம் கட்சியான முகாவின் தலைமைத்துவம் இப்போது மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில் ஏறாவூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வின்போது பேரினவாத அரசிலிருந்து விலகப்போவதாக கூறியிருக்கின்ற விடயம் வெறும் வெட்டிப்பேச்சாகும். அனுபவித்து கொட்டையும் போட்டாச்சு இப்போது எதுவும் இல்லை என்றாகிவிட்ட நிலையில் முகாவின் தலைமைப்பீடம் நீலிக் கண்ணீர் வடிப்பதன் மர்மம். எதிர்வரும் தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கான தயார்நிலையினை ஏற்படுத்துவதற்காகவே இந்த காரணங்களை முன்வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதேபோன்றதொரு துயரம்நிறைந்த நிகழ்வு கடந்தாண்டிலும் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஏற்பட்டது. அப்போதும் கிழக்கு மாணத்திலுள்ள கல்முனைப் பிரதேசத்திற்கு வருகைதந்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப்பீடம் பேசியதை இங்கே நினைவிற் கொள்ளலாம். அதாவது 'கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது. உண்மையான நண்பர்கள் யார் என்பதை இந்த அரசாங்கம் பிரித்தறிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் எங்களுக்கு அநியாயம் இடம்பெறும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திற்குள்ளே எதிரியாக வைத்துக்கொண்டு தங்களுடைய அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அரசிற்குள்ளே உள்ளவர்களும், வெளியே உள்ளவர்களும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகள் அவதானமாக இருக்க வேண்டும். அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றி ஆட்சியை கவிழ்க்கவும் சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்' என தலைவர் கூறியிருந்தார். அப்படியானால் இன்று நடைபெறுகின்ற தம்புள்ளை பிரச்சினையானாலும்சரி, மாவனெல்ல, அழுத்கம கடையெரிப்பு, பானத்துறையில் முஸ்லிம் வியாபாரிகள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்களைப் பார்க்கின்றபோது கடந்த ஒரு நூற்றாண்டின் நினைவுகளை பெரும்பான்மைச் சமூகத்தினராலும் அடக்கமுடியாத பேரினவாதகக் குழுக்கள் அப்பாவி முஸ்லிம்கள்மீது காட்டுத்தர்பார் நடாத்திக் கொண்டிருப்பதை அப்போது ஆட்சி கவிழ்ப்பைப் பற்றி ஜனாதிபதியிடம் கூறமுடியுமானால் இன்று இந்த நிகழ்வுகளைப் பற்றி கூறமுடியாமல்போனது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

அதேவேளை ஏறாவூரில் நடைபெற்ற விழாவொன்றில் முகாவின் தலைவர் பேசிய பேச்சில் அழுத்கம சம்பவம் தொடர்பாகவும் பேசப்பட்டது. இந்நிகழ்வுகள் நள்ளிரவு 12.30 மணியளவில்தான் நிறைவுபெற்றது. இரவு மூன்று மணியளவில் மாவனெல்லையில் கடைக்கு தீவைக்கப்படுகிறது. அப்படியானல்; இச் சம்பவம் மிக வேகமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதற்கான துணையானவர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளரா? எனவும் எண்ணத் தோன்றுகின்றது. இச்சம்பவத்தை நேரில் பார்வையிட்ட முகாவின் தலைவர் 'இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பங்கள் குறித்து சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் அசமந்த போக்குடன் உள்ளனர். அத்துடன் இது போன்ற செயற்பாடுகளை தொடர அனுமதிக்க முடியாது. குறித்த சம்பவங்கள் தொடருமாயின் ஜெனீவா வரை செல்ல வேண்டி நேரிடும். எனவே இந்த சம்பவங்கள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் பாரிய விளைவுகளை கொண்டுவரும்' என்று அங்குள்ள பொலிஸ் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இப்படி வெளிப்படையாக ஜெனீவாக்குச் சென்று முறையிடவேண்டுமாக இருந்தால் இலங்கை வந்திருந்த நவநீதம் பிள்ளையிடம் கொடுத்த இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக ஏன் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமைக்கான காரணங்கள் பற்றி அரசுடன் கைகோர்த்துள்ளவர்கள் பாராமுகமாக இருப்பதன் நோக்கம் என்ன என்பது புதிராகவே உள்ளது. அதேவேளை இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தைக் கண்டுள்ள பெற்றோலியத்தினை ஈரான் மீண்டும் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இலங்கையின் வாழும் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கின்ற இந்த பேரினவாதிகளுக்கு எதிராக அரசு எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறும் முஸ்லிம் அமைச்சர்கள் ஏன் ஈரான் தூதுவரிடமோ, ஈரான் நாட்டின் ஜனாதிபதியிடமோ சென்று முறையிடாது மௌனமாக இருப்பதன் மந்திரம்?

அதேவேளை மற்றொரு முஸ்லிம் கட்சியின் தலைவர் இந்த விடயத்தில் அரசிற்கு எதிராக அறிக்கைகள் விடுவதிலும், நஷ்டஈடு வழங்குவதிலும்தான் மும்முரமாக இருக்கின்றார். மாவனெல்ல கடைஎரிப்பினை பார்வையிட வருகை தந்திருந்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் கருத்துரைக்கையில் 'முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சியே அளுத்கம வர்த்தக நிலையத்தின் தீ வைப்புக் காடைத்தனமாகும். குறித்த வர்த்தகர் அளுத்கமவில் சிறப்பாக தொழில் புரிந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் இவரது உயர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத வர்த்தகர்களே இனவாத கும்பலை தூண்டிவிட்டு இந்த செயலை செய்துள்ளதாகவும், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் சில பௌத்த பிக்குகள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் வர்த்தக நிலையம் எரிந்துள்ளது என்றால் இது திட்டமிடப்பட்ட சதியாகவும் இருக்கலாம்.  

எமது நாட்டின் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அடாவடித்தனங்கள் அல்லது வன் செயல்கள் தொடர்பான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதுள்ளது. எனது அமைச்சுக்குள் பொலிசாரின் கண்களுக்கு முன்னாலே புகுந்து காட்டு தார்பார் நடாத்திய, நாட்டின் தொலைக்காட்சி நிலையங்களுக்கூடாக, முழு நாட்டிற்குமே அடையாளப்படுத்தப்பட்டவர்களை, இன்னும் நமது காவல் துறையினரால் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும். மட்டுமல்லாமல் எனது அமைச்சிற்குள் வைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளை திட்டியவர்களையே அவர்களால் அடையாளம் காண முடியாமல் இருக்கின்றது.

தெமடகொடயில் வைத்து மாட்டிறைச்சி ஏற்றி வந்த லொறியை தீயிட்டுக் கொழுத்தியவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 250 இற்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வரை அடையாளம் காணப்படவில்லை. அதேபோன்று அளுத்கமவில் இடம்பெற்ற தீவைப்புச் சம்பவம் பொலிஸாரால் குற்றவாளிகள் இனங்காணப்படாத மற்றுமொரு சம்பவமாக இந்த வரிசையில் இடம் பிடிக்க அனுமதிக்க முடியாது.

பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு அரசு உரிய நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்புள்ள பள்ளிவாசல் கை வைக்கப்பட மாட்டாது என்று அமைச்சு கலந்தாலோசனைக் குழுக் கூட்டத்தில் எமக்கு ஜனாதிபதியினால் தரப்பட்ட வாக்குறுதிக்கு மத்தியில் குறித்த ஒரு மதகுருவின் அழுத்தம் காரணமாக அந்த பள்ளிவாசலின் இருப்பு மீண்டும் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இவ்வாறான நிலமைகள் தொடர அனுமதிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும், நாளை தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசுக்குள்ளிருந்து கொண்டு நாம் போராடுகின்றோம். ஆனால் அரசு வாய் வீச்சில் பிரச்சினை இல்லை என்று சொல்லிக்கொண்டு நாளாந்தம் முஸ்லிம்கள் இனவாத சக்திகளிடமிருந்து முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை தொடர்ந்தும் கண்டும் காணாததுபோல் இருக்குமாயின், முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை ஜனநாயக சட்ட வரம்பிற்கு உட்பட்டு அரசுக்கு வெளியே நாங்கள் தேட வேண்டி ஏற்படும்' என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பலமிக்க அரசிலும், அரசின் பங்காளிகளாகவும், அமைச்சர்களாகவும் இருந்துகொண்டு நாட்டில் வாழும் சிறுபான்மையினராகிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்படுகின்ற சம்பவங்களுக்கு முத்தாப்பாய் அமைகின்ற வெறும் பேச்சுக்களால் மாத்திரம் கருத்துக்கள் வெளியிடுவதைவிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். 'அரசுக்கு வெளியே நாங்கள் தேட வேண்டி ஏற்படும், ஜெனிவாக்களம் செல்வோம்' என்று மக்கள் மத்தியில் கூப்பாடு போடுவதால் எவ்வித பயனேதுமில்லை. பேச்சுக்களும் நடவடிக்கைகளும் பயன் பெறுவதாக இருந்தால் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் சமுதாய உணர்வுகள் மேலோங்கவேண்டும். அதுதான் இன்றைய கேள்வியும் விடையுமாகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வுக்காக அந்நாளை நினைவுறுத்தும் வகையில் வெகு சிறப்பாக கொண்டாட நினைக்கும் பேரினவாதிகளுக்கு முன்னால் ஒற்றுமையே இஸ்லாமிய பண்பாடாகும் என்கிற மனிதர்களைக் கொண்ட சமுதாயத்தினை அழிவுக்குள்ளாக்க நினைப்பவர்களுக்கு எதிராக, அந்த எதிர்வாதிகளின் நிழலில் நிற்பதற்கு ஆசைப்படுகின்ற ஒரு குழுவாக முஸ்லிம் சமுகம் ஆசைப்படவில்லை. அப்படியானல் அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகின்ற தலைவர்களும் நிச்சயமாக அரசிலிருந்தும் பேரினவாத வெறியிலிருந்தும் வெளியேறி இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களும் இந்நாட்டின் கௌரவமிக்க பிரஜைகள்தான் என்பதை பறைசாட்டுவதுடன், இந்நாட்டுவாழ் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்ற பேரினவாதிகளின் பேராபத்தை முஸ்லிம் நாடுகளுடன் பகிர்வதற்கான ஒரு மார்க்கத்தையும் முஸ்லிம் தலைமைப்பீடங்கள் ஒன்றுபட்டு காணவேண்டும். இல்லையேல் 1915ஆம் ஆண்டின் நினைவுநாள் 2015ஆம் ஆண்டில் நடைபெறுவதை யாராலும் தடுக்கமுடியாமல் போகலாம். வரும்முன் காப்பதே நலம். முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் யதார்த்தவாதிகளும் உணர்வார்களா?

1 comment:

Powered by Blogger.