Header Ads



சிங்கள இனவாதத்தை தோற்கடிக்க வேண்டியது முக்கியமானது - கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி

மாதுளுவாவே சோபித தேரரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த தமது ஒத்துழைப்பு வழங்கப்படும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கங்கொடவில சோம தேரரின் வருகைக்கு பின்னர், கடந்த சில தசாப்தங்களாக சிங்கள பௌத்த இனவாதத்திற்கு புதிய புத்துணர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 

விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அரசாங்கத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதால் ஏற்பட்டுள்ள சிங்கள இனவாத முகாமின் பிளவை பயன்படுத்தி சிங்கள இனவாதத்தை தோற்கடிக்க வேண்டியது முக்கியமானது. 

இதற்காக மாதுளுவாவே சோபித தேரரை பயன்படுத்தி கொள்ள முடியும். 

90 ஆம் ஆண்டு கடைசியிலும் அதன் பின்னரும் சிங்கள பௌத்த அமைப்புகளுக்கு புதிய புத்துயிர் கொடுக்கப்பட்டது. 

கங்கொடவில சோம தேரரின் தலையீடு, அதன் பின்னரான ஜாதிக ஹெல உறுமய, வெகுஜன சுதந்திர முன்னணி, ஜே.வி.பி ஆகியன மிகவும் ஆக்கிரமிப்பு ரீதியில் சிங்கள இனவாதத்தை முன்னெடுத்தன. 

இதனையடுத்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், அல்லி மலர் அமைப்பு, அண்மைய கால பொதுபல சேனா, இராவணா பலய ஆகியன வன்முறை செயற்பாடுகளை ஆரம்பித்தன. 

சிங்கள இனவாதத்தின் இரண்டாம் கட்ட எழுச்சியாகவே நான் இதனை காண்கின்றேன். 

எனினும் 80 ஆம் ஆண்டுகளில் சிங்கள இனவாத பாசறையில் முன்னணி தலைவராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் இன்று இனவாதம் இல்லாதவர்களுடன் இணைந்து செயற்படும் நபராக மாறியுள்ளார்.  இதன் காரணமாகவே சிங்கள் இனவாத தேசியவாதிகள் மாதுளுவாவே சோபித தேரரை விமர்சித்து வருகின்றனர் எனவும் நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.