சும்மா இருத்தல்...!
வீட்டுக்குள் புகுந்த கள்வனைப் விரட்டிப் பிடிக்காமல் ஓரத்தில் நின்றுகொண்டு 'கள்ளன்.... கள்ளன்...' என்று கத்துகின்ற வேலையை மட்டுமே முஸ்லிம் சமூகம் செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு அவர்கள் பொறுமை காத்தல் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்.
முஸ்லிம் சமூகம் என்ற வகுதிக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள், சமய அமைப்புக்கள், படித்தவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் என விதிவிலக்கற்று எல்லோரும் உள்ளடங்குகின்றனர். 'பொறுமை காத்தல்' என்பது முஸ்லிம்களின் விடயத்தில் வாழாவிருத்தலாகவும், அடங்கிக் கிடத்தலாகவும், வக்கற்று திரிதலாகவும், சும்மா இருத்தலாகவும் ஆகி விடுகின்றது.
எல்லாம் முடிந்த பிற்பாடு தம்முடைய கோவணங்களோடு சேர்த்து உடமைகளும் உரிமைகளும் களவாடப்பட்டிருப்பதை காணநேர்கின்ற போது அவர்கள் கள்வனை திட்டித் தீர்த்து சபிப்பார்கள். தமது தலைவிதி என்று சொல்வார்கள். தம்மீதே கழிவிரக்கம் கொள்வார்கள்.
சூன்யத்திற்குள் வாழ்தல்
நிகழ்கால அரசியல், சமூக சூழல் என்பது இனவாதத்தால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றது. இப் பின்னணியில், சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக இரண்டாவது சிறுபான்மையான முஸ்லிம் சமூகம் ஒருவித சூன்யத்திற்குள் சிக்குண்டிருக்கின்றது. தமது தலைவர்கள் எதுக்கும் லாயக்கற்றவர்கள் என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் அவர்களை தெரிவுசெய்கின்ற மக்களுக்கு தண்டனைகள் எவ்வாறு வந்துசேரும் என்பதற்கு இந் நிலைமையை உதாரணமாகவும் கொள்ளலாம்.
ஹலால் சான்றுபடுத்தல் தாரை வார்க்கப்பட்டிருக்கின்றது, பள்ளிவாசல்களின் பாதுகாப்பு சிங்கள கடும்போக்கு சக்திகளின் கைகளில் தஞ்சமடைந்திருக்கின்றது, அபாயாவும் இன்னபிற இனத்துவ அடையாளங்களும் உருவி எறியப்படும் நிலையிலிருக்கின்றது, முஸ்லிம் வர்த்தக நிலையங்களை கொளுத்திவிட்டு அதில் தமது உடற் குளிரை அடக்கிக் கொள்ள பேரினவாதம் மனக்கணக்குப் போட்டிருக்கின்றது.
ஆனால் முஸ்லிம் சமூகம் என்ன செய்து கொண்டிருக்கின்றது. ...........? தங்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும,; அது தவறும் பட்சத்தில் தமது மேய்ப்பர்களான முஸ்லிம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வர்கள் என்பது போல மக்கள் இருக்கின்றனர். ஆனால், இந்த எண்ணம் பிழைத்துப் போகின்ற சந்தர்ப்பங்களில் தமது அரசியல் தலைவர்களை கெட்ட வார்த்தைகளால் ஏசிக் கொள்கின்றனர். அரசியல் தலைமைகளோ – படுக்கையை நனைத்த பருவமடையா சிறுவன் வீட்டாரின் கேலிப் பேச்சுக்களை கேட்டு சிரிப்பதுபோல அசடு வழிய மக்கள் மன்றத்தில் நிற்கின்றனர்.
இப்படியே தங்கள் பக்கத்தில் ஆயிரத்தெட்டு தவறுகளை வைத்துக் கொண்டு, இனவாதத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றனர். 'இனவாதிகள் சிறுபான்மை முஸ்லிம்களை வாழ விடுகின்றார்கள் இல்லை', 'பள்ளிவாசல்களை உடைக்கின்றனர்,' 'மத உரிமைகளை தடுக்கின்றனர்'..........; என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர். முஸ்லிம்கள் கேட்பது எதுவும் கிடைப்பதில்லை என்றும் இதனையெல்லாம் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை என்றும் புலம்புகின்றனர். இது குறித்து முஸ்லிம்கள் சுய பரிசீலனை ஒன்றை நிகழ்த்த வேண்டியிருக்கின்றது.
கேள்விகளால் வேள்வி
நான் தெரியாமல்தான் கேட்கின்றேன் நீங்கள் எவ்லோரும் ஓரணியில் சென்று கேட்ட எதனை அரசாங்கம் தர மறுத்துள்ளது? நீங்கள் ஒரே குரலில் முறையாக முன்வைத்த எந்தக் கோரிக்கையை ஆட்சியாளர்கள் அசட்டை செய்திருக்கின்றனர்? இனவாதத்திற்கு எதிராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு உரிமையைக் கோரியோ உங்களால் முன்வைக்கப்பட்ட எந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது என்பதற்காக இத்தனை அவதிப்படுகின்றீர்கள்?? இந்தக் கேள்விகளுக்கு முஸ்லிம் மக்கள் சுயமாக விடையளிக்க வேண்டும்.
1915 ஆம் ஆண்டு இலங்கையில்; முதன் முதலாக சிங்களவர்களிடம் இருந்து இன ஒடுக்குமுறையை எதிர்கொண்டவர்கள் முஸ்லிம்களே. இருப்பினும் கூட இன்று வரை சிங்கள மேலாதிக்கத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அக் கலவரம் இடம்பெற்று கிட்டத்தட்ட 100 வருடங்களாகின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்திடம் அவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வது பற்றிய எந்தப் பிரக்ஞையும் கிடையாது என்பதே வருத்தமான செய்தி.
ஆனால் வெளியுலகுக்கு முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் புனைகதைகளை உருவாக்கி உலவ விட்டிருக்கின்றது மேற்குலக நாடுகளும் இனவாத சக்திகளும். முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டமொன்றை நடாத்தி நாட்டை சூறையாடி விடுவார்கள் என்ற கற்பிதங்கள் ஏகத்துக்கு முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் நிஜத்தில் அவ்வாறில்லை. அரசியல் காரணங்களுக்காகவோ மத விவகாரங்களுக்காகவோ ஓரணியில் திரட்டுவதற்கு முடியாத ஒரு சமூகமாகவே முஸ்லிம்கள் இருக்கின்றனர். இந்த லட்சணத்தில் ஜனநாயக ரீதியான எந்த முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வது பகற்கால சொப்பனம் என்றே தோன்றுகின்றது.
முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பற்றி பெருமையாக சொல்வதற்கு புதிதாக ஒன்றுமில்லை. இத்தனை அநியாயங்கள் முஸ்லிம் மக்களுக்கு நடந்துவிட்ட பிறகும் அவர்கள் இன்னும் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். கள்வனைப் பிடிக்காமல் கள்வன் கள்வன் என்று கூச்சலிடுவதற்கு ஆள் தேவையில்லை. அறிக்கை விடுவதற்கு அரசியல்வாதி அவசியமில்லை. ஒரு மிகச் சாதாரண அறிக்கையை விட்டு விட்டு சும்மா இருப்பதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதை நினைவிற் கொள்ளவும். உங்கள் பெயரில் யாரோ எழுதுகின்ற அறிக்கையை பிரசுரித்துவிட்டு 'இன்றைக்கு இறைத்தது போதும்' என்று நிம்மதி கொள்வதால் இனவாதத்தை கட்டுப்படுத்த முடியாது.
தனித்தனி கட்சிகளில் இருந்தாலே தமக்கு எம்.பி. ஆசனம் கிடைக்கும் என்பதற்காகவும் தலைவராக இருந்தாலே அமைச்சராக ஜொலிக்கலாம் என்பதற்காகவும் முஸ்லிம் தலைமைகள் ஆளுக்கொரு கட்சியைத் திறந்துள்ளார்கள் என்பது மக்கள் அறிந்த ரகசியம்தான். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய அமைச்சர்களும் எம்.பி.க்களும் மட்டுமே மக்களுக்காக பேசுகின்றார்கள். பகிரங்மாக விமர்சிக்கின்றார்கள். இன்னும் சிலர் மதில்மேல் பூனையாய் முழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அநேகம் பேர் அரசவைக் கவிஞர்கள் போல பொற்காசுகளுக்கு ஆசைப்பட்டு துதி பாடுவதிலேயே தமது தொழிலை ஓட்டிக் கொண்டிருப்பது மிகுந்த நகைப்பிற்குரியது.
இலங்கையில் இனவாதம் கொடிகட்டிப் பறக்கின்றது என்பது உலகறிந்த விசயம். ஆனால் தனக்கு இது குறித்து முஸ்லிம் தலைவர்கள் சொல்லவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார். அதில் ஒருவித உண்மையுமிருக்கின்றது. தமிழ் தலைமைகள் தமது மக்களின் உரிமைகளுக்காக சத்தியாக்கிரகம் இருந்ததில் தொடங்கி உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக இருந்தனர். ஆனால் நிகழ்கால முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டுச் சென்று ஆட்சித் தலைமையிடம் இனவாதத்தின் தொடர்விளைவுகளை எடுத்துரைக்கவில்லை. ஒருசில அரசியல்வாதிகள் மட்டும் உத்தியோகப்பற்ற சந்திப்புக்களில் ஜனாதிபதிக்கு நிலைமையை எடுத்துக் கூறுவதற்கும் எல்லோரும் ஒருமித்த குரலில் சென்று முறையிடுவதற்கும் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன.
கல்யாண வீடுகளையும் மரண வீடுகளையும் தவிர வேறெந்த விடயத்திற்காகவும் முஸ்லிம் தலைமைகளால் ஒரு புள்ளியில் சந்திக்கவும், ஒரு விடயத்தை சிந்திக்கவும் முடியாதிருக்கின்றது. எந்தளவுக்கு என்றால், ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்புவது என்றால் கூட இரண்டு பேர் ஒப்பமிட முடியாதென அடம்பிடிக்கின்றனர். இனவாதத்தை எதிர்த்தால் அரசாங்கத்தை எதிர்த்தது போல் ஆகிவிடும் என்று ஒரு காரணத்தை கூற அவர்கள் முற்பட்டாலும் அதற்கான உண்மையான காரணம் ஏதோ ஒரு வகையான பயம் சார்ந்ததாகவே இருக்கக் கூடும்.
படித்த முட்டாள்கள்
அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால் கல்வி கற்ற அல்லது படித்த சமூகமோ இதை விட மோசமாக இருக்கின்றது. இலங்கையில் எத்தனை ஆயிரம் முஸ்லிம் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், தொழில்வாண்மையாளர்கள் இருக்கின்றனர்? இந்த இரண்டரை வருடங்களாக தமது சமூகத்து மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாதத்திற்கு எதிரான ஆட்சேபத்தை அவர்கள் எங்ஙனம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்? ஒரு சாதாரண பொது மகனின் குரலை விடவும் தொழில்வாண்மையாளர்கள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினால் அதற்கு ஆட்சியாளர்கள் பதிலளித்தே ஆக வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாததல்ல. ஆனால், தமது சிங்கள 'கஷ்டமர்களை' இழந்துவிடக் கூடாது என்ற நினைப்பிலோ என்னவோ அவர்கள் ஒதுங்கியிருக்கின்றனர்.
அதேபோல், சமூக நலன் விரும்பிகள் என்றும் மக்கள் சேவகர்கள் என்றும் ஒரு கூட்டம் இருக்கின்றது. பொன்னாடைக்காகவும் சமாதான நீதிவான் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நிறைய செலவு செய்கின்ற இவ்வாறானவர்கள் ஒரு பொதுவான பிரச்சினை வருகின்ற போது, ஒதுங்கிக் கொள்கின்றார்கள். தாம் கலந்துகொள்ளும் விழாக்களின் புகைப்படங்களில் தன்னை 'சமூக சேவகன்' என குறிப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கின்ற இவர்களை எந்த சமூக சேவையிலும் காணக் கிடைப்பதில்லை.
வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதே சமூக சேவை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இப்பேர்ப்பட்டவர்கள் இனவாதம் மேலோங்குகின்ற காலப்பகுதியில் ஓடி ஒழிந்து விடுகின்றனர். கூட்டாக ஒரு கோரிக்கையை விடுவதையோ அல்லது பெரும்பான்மை சமூகத்தவரை சந்தித்து தெளிவுபடுத்துவதையோ இவர்கள் சமூக சேவை எனக் கருதுவது கிடையாது.
தாடியும் ஜிப்பாவும்
அடுத்தது – முஸ்லிம் அமைப்புக்கள் பற்றியது. இன்று நூற்றுக்கணக்கான அமைப்புக்கள் முஸ்லிம்களை மையப்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை சமயம் சார்பானவை. நான் கண்ட பிறை சரியா? அவர் கண்ட பிறை சரியா? என்று விவாதம் நடாத்தும் அளவுக்கு வேறெந்த விடயத்திலும் இவ்வமைப்புக்கள் அக்கறை காட்டியது இல்லை. பள்ளிவாசல்கள் அமைப்பதற்கு நிதியுதவிகளை பெற்றுக் கொடுக்க முன்னிற்கின்ற இவ்வமைப்புக்கள் அப்பள்ளிகள் உடைக்கப்படுகின்ற போது 'பிடில்' வாசித்துக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு கொழும்பிற்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அழைக்கப்பட்டால் பல நூற்றுக்கணக்கான – தாடி வைத்து, ஜிப்பா போட்ட முகங்களை காண முடியும். ஆனால், இனவாதத்திற்கு எதிராக ஒரு பேரணிக்கு வாருங்கள் என்று அழைத்தால் முகத்தை மூடிக் கட்டிக் கொண்டு நான்கைந்து பேர் வருவார்கள். இதுதான் நிதர்சனம்.
அமைப்புக்கள் எனும் போது ஜம்மியத்துல் உலமா சபை ஞாபகத்திற்கு வருகின்றது. ஹலால் சான்றிதழ் விவகாரத்திற்குப் பின்னர் உலமா சபை ஒதுங்கிக் கொண்டதாக தெரிகின்றது. இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் மத விடயங்களை நெறிமுறைப்படுத்துகின்ற அமைப்பாக உலமா சபை இருக்கின்றது. எனவே மிகுந்த விவேகத்துடனும் பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், கடந்த சில மாதங்களாக உலமா சபையை களத்தில் காணவில்லை. ஒரு காலத்தில் உலமா சபையின் விமர்சனங்களுக்கு உள்ளாகிய தவ்ஹீத் ஜமாஅத்தே அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகின்றது.
தலைப்பிறையில் சரி – பிழை காண்பதைக் காட்டிலும் பள்ளிகள் உடைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததில்லையா? அதற்காக ஆர்ப்பாட்டம் நடாத்த தேவையில்லை, குறைந்தபட்சம், மத ரீதியான பிரதிநிதியாக அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்கலாம் இல்லையா? ஆனால் முஸ்லிம்களை பொறுமை காக்கச் சொன்ன உலமா சபை, பிற்பாடு தனது பணியிலிருந்து விலகிவிட்டதாகவே மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.
தனிநபரின் வகிபாகம்
முஸ்லிம் சமூகத்தில் மிக முக்கிய பங்கினை சாதாரண பொது மக்கள் வகிக்கின்றார்கள். அவர்கள்தான் ஆட்சியை தீர்மானிக்கும் அரசியல்வாதிகளை தெரிவு செய்கின்றார்கள். அந்த வகையில், இப்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவாத நடவடிக்கைகளை சமாளிப்பதற்கு என்ன நடவடிக்கைகளை ஒவ்வொரு தனிநபரும் மேற்கொண்டுள்ளனர் என்று கேட்க விளைகின்றேன்.
ஒரு வாழைப்பழத்தை உரித்து வாய்க்குள் வைத்து உள்ளே தள்ளிவிடுவது போல் உங்களுக்கான உரிமைகளை சிங்கள ஆட்சிச் சூழல் உங்களுக்கு வழங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களா? வெற்றிலை பாக்குடன் வந்து உங்கள் காலைக் தொட்டு கும்பிட்டு உங்களுக்கான மத சுதந்திரத்தை இனவாதம் தந்துவிட்டுப் போகும் என்ற நீங்கள் நினைக்கின்றீhகள்? அது ஒருக்காலும் நடக்காது.
லண்டனில் வாழ்கின்ற இலங்கையர் அண்மையில் இனவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றார்கள். வன்முறைகள், அத்துமீறல்களை நிறுத்துவது உள்ளிட்ட 7 கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் இலங்கை தூதுவரிடம் கொடுத்திருக்கின்றார்கள். இதில் சாதகமும் இருக்கின்றது கொஞ்சம் பாதகமும் இருக்கின்றது. உள்நாட்டில் முஸ்லிம்களுக்கு இல்லாத தைரியமும் ஒன்றுகூடும் ஆற்றலும் கடல்கடந்து சென்ற பிறகு ஏற்படுவது இயல்பு. இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமானது. ஆயினும், இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் உள்நாட்டில் வாழும் முஸ்லிம்களை நெருக்குவாரப்படுத்துவதற்கு காரணமாகி விடாத வகையில் மிகவும் கவனமாக ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.
ஆனால் உள்நாட்டில் நிலைமை வேறு. தேனீர் கடைகளில் அமர்ந்திருந்து இலவசமாக பத்திரிகை படிப்பது - அதுவும் நடுப்பக்கத்தை கூர்ந்து வாசிப்பது, அரசியல் பேசுவது, ஆட்சியாளர்களையும் அவர்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களையும் கெட்ட வார்த்தைகளால் விமர்சி;ப்பது, பற்றவைத்த சிக்கரட் முடிந்துவிட்டால் கதையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடக்க வேண்டியது. வீட்டில் - மெகா தொடர்கள், செய்மதித் தொலைக்காட்சி அலைவரிசைகளுடன் தூக்கம் போய்விடுகின்றது. இதனைத் தவிர உருப்படியாக எதனையும் செய்யாமல் வெறுமனே அரசியல்வாதிகளை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கின்றார்கள் இந்த மக்கள்.
மக்;களை திருப்திப்படுத்தும் விதத்தில் அரசியல்வாதிகள் செயற்பட தவறுகின்ற போது அவர்களை கடுமையாக விமர்சிக்கின்ற வாக்காளப் பெருமக்கள், ஒன்றுக்கும் உதவாதவர்களை மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்பியது தாங்களே என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். இதற்கப்பால், இனவாதத்தை எதிர்கொள்வதற்கு அடிமட்டத்தில் எந்த வித ஏற்பாடுகளும் இல்லவேயில்லை.
ஆக மொத்தத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளோ, அமைப்புக்களோ, பொதுமக்களோ யாருமே ஒருமித்த குரலில் தமது பிரச்சினைகளை – ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்திற்கோ மகாநாயக்கர்களுக்கோ அது சாத்தியப்படாத பட்சத்தில் சர்வதேசத்திற்கோ எடுத்துரைக்கவில்லை. இப்படியிருக்கையில், 'ஐயோ... இந்த நாட்டில் எமது பிரச்சினை தீர்க்கப்படவில்லை' என்று புலம்பித்திரிவது நேரத்தை வீணடிக்கும் வேலை.
இப்போது முஸ்லிம்களின் வர்த்தகம் மீதும் இனவாதம் கண்வைத்தாயிற்று. கடைகள் எரிக்கப்பட்டமைதான் ஜூலைக் கலவரத்தின் மிக முக்கிய தோற்றுவாய் என்ற அடிப்படையில் நோக்கும் போது இனியும் தாமதிக்க முடியாது. தாமதித்தால், பள்ளிகளில் ஆயுதங்களை அல்லது கஞ்சாவை வைத்துவிட்டு முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவுள்ளதாகவும் ஏகப்பட்ட கதைகள் உலா வருகின்றன.
நமது பார்வைக் கோணத்தில் அநியாயமாக தெரிந்தாலும், சிங்கள சக்திகள தமது பௌத்த மதத்துக்காகவும், ஏனைய மதங்கள் தம்மை மேவி விடக் கூடாது என்ற காரணத்திற்காகவும் ஏதோ ஒரு வகையில் குரல்கொடுத்து வருகின்றன. தமது மதத்தையும் இன அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த பிரயத்தனத்தையும் மேற்கொள்ளாமல், சும்மா இருத்தலே சுகம் என இருக்கும் முஸ்லிம் மக்கள், இனவாதிகளை குறைகாண்பதால் மட்டும் எதுவும் ஆகிவிடாது.
முஸ்லிம்களுக்குப் பிறகு இனக் கலவரத்தை சந்தித்த தமிழ் மக்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தையே நடாத்தி விட்டனர். 30 வருடங்களை அவர்கள் போராட்டத்தால் நிறைத்திருந்தனர். அதற்கு முன்னர் இனக்கலவரத்தை சந்தித்த முஸ்லிம்கள் குறைந்தபட்சம் தமக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த குரலில் ஜனநாயக அடிப்படையில் குரல்கொடுக்க வேண்டும்.
உங்களது பொறுமை எத்தனையாம் நூற்றாண்டில் காலாவதியாகும் என்று சொல்லியனுப்புங்கள்.
brother.dont blame acju.acju they are trying evry corner and keeping meeting with
ReplyDeletediplometic teams sofar.they are not propaganda with media too.
அருமையான கட்டுரை என்று வருத்தம் கலந்த வாழ்த்துக்களை கூறுகிறேன் ..!
ReplyDeleteகட்சிகளுக்கு வாக்கப்பட்ட முஸ்லிம் மக்கள்..!கண்பொண்ட்டாட்டியாக வாழும் காலம் இது,
அரசுக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் நடத்தினால் இடமாற்றம் கிடைத்து விடும் என்று முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர் போலும்..!
முஸ்லிம் அமைச்சர்கள் மௌனத்தை பார்க்கும்போது பாரளுமன்றம் முஸ்லிம் மையவாடியா?/ பிணவறையா என எண்ணத்தோன்றுகின்றது..!
தள்ளாடும் வயதில் பிரதமருக்கு இருக்கும் தைரியம் கூட எம்மவர்க்கு இல்லை..!