Header Ads



ஒரு ஏழை எழுத்தாளனின் கனவு..!


(உமர் அலி முகம்மதிஸ்மாயில்)

ஆழ்ந்த உறக்கம்
சோக்கான ஒரு கனவு

பாரிய ஒரு மேடை 
மேடையின் கூரை 
உதிர்ந்த இலைகளால்
சோடிக்கப்பட்டிருந்ததது
ஆடாதவண்ணம் அதன் கால்களும்
ஆணிவேர்களால் 
ஆழப்புதைக்கப்பட்டிருந்தது !

ஆளுக்காள்
கருத்துக்களால் மோதி
சமூகத்தை நிர்வாணமாக்கி
அந்நியர் கதறக்கதற கற்பழிக்கும்போது
கைகட்டிவாய்பொத்தி பேசாதிருந்த 
நிகழ்கால அரசியலின் 
அத்தனை தலைமைகளும்
தோளோடு தோள் உரசி 
காதுக்குள் ஏதேதோ கதை பேசி
கனிந்த முகத்துடன் 
கம்பீரத்தோற்றத்தில்
வேற்றுமை களைந்து 
ஒற்றுமையாய் உட்கார்ந்திருந்தன !

எங்கள் ஒற்றுமை கீதம்
உரத்து ஒலிக்கிறது 
வேற்றுமைக் காரரை 
மருந்துக்கும் காணவில்லை

கல்லெறிந்து குழப்புவவர்கள் 
கரகோஷம் இடுகின்றார்
கூப்போட வந்தவர்கள் 
ஒப்போட்டு மகிழ்கின்றார்!

மகிழ்ச்சித் தென்றல்
மனம் தொட்டு செல்கின்றது
முன் வீட்டு ஜன்னல்
அதைப்பார்த்து சிரிக்கின்றது!

தடைபோட்ட காணிகள்
நெற்பயிரால் அலைபோட
இடை விட்ட திட்டங்கள்
உயிர்பெற்று நடைபோடுகின்றன !

அதிகமாக பிடிபட்ட மீன்கள் 
தெருவோரங்களில் 
கருவாடாக காய்கின்றன!

அகதிகள் அந்தஸ்து 
அருகிப்போய் சொந்த இடத்திலே
சுமைகள் இறக்கிவைத்து
முடங்கிக் கிடந்த கால்களை 
நீட்டி நிமிர்ந்து நிம்மதியாக 
குறட்டை விட்டு உறங்குகின்றார்கள்! 

குடியேற்ற திட்டங்கள்
குதூகலிக்க
திறக்காத வீட்டுத்திட்டத்தில் 
புதுமனைபுகுவிழா கொண்டாட்டம்

வெட்டுக்குத்துக்கள் விரண்டுபோய் 
வேலிக்குமேலால் மருண்டதாய் 
எட்டிப்பார்க்கின்றன!

அரசியல் நயவஞ்சகர்களெல்லாம்
அவசரமாக கூடி
அடுத்த கட்டம் என்னவென்று
திட்டம்போடுகிறார்கள் !

காவிப்பேய்களெல்லாம்
கதிகலங்கி ஓடிவிட
இந்தப் பூமியிலே நீதி மரம் 
தளிர்விட்டு கிளை பரப்புது 
தளைத்தோங்குது 

கிட்டநின்று குத்திவிட்டு
குதூகலித்த எட்டப்பர் கூட்டம் 
எட்ட நின்று கைபிசைந்து
தொடைநடுங்கி நிற்கிறது!

நாறிச் சேறான நாற்றமடித்த
தூர்வாராமல் கிடந்த கிணறொன்றை
துப்பரவு செய்ததனால் 
ஓயாமல் ஊற்றெடுத்து வழிகிறது
ஊரார் எல்லோரும் குடிப்பதற்கு உகந்ததாக !

அந்தாதி பாடுகிறான் வேதாந்தி
குயிலாக பாடுகிறான் அவன் வந்து
சிங்கமாய் முலழங்ககுறான் ஒருவன்
வங்கமாய் குமுறுகிறான் மறவன் !

பட்டாசுகளை துரத்திவிட்டு
கரகோஷம் ஆட்சியமைகின்றது 
மிட்டாசு தின்றது போல் 
மனசெல்லாம் தித்திப்பு!

வந்த பிணக்குகள் எல்லாம் 
சாணக்கியமாக சரிக்கட்டப்படுகிறது
நொந்த மனங்களெல்லாம்
சாமரம் வீசி குளிர்விக்கப்படுகின்றன! 

முறிந்த கிளையெல்லாம்
மீளவந்து இணைந்திருக்கு
முதிர்ந்த கனியெல்லாம்
மரம் நிறைய ஜொலிக்கிறது!

ஊரெல்லாம் ஒரு குரல் 
ஒலிக்கையிலே 
பாங்கோசை பள்ளியில் 
பாங்காக கேட்கிறது!

மறைந்த மாமனிதரின் 
ஆத்மாவின் கரங்களில்
அவர்கள் கைகளெல்லாம் 
அந்தரத்தில் சத்தியம் செய்கின்றன 

அதுவரை அலைந்து திரிந்த ஆத்மா
அவர்களை சத்தியத்தின் முடிச்சுக்களால் 
இறுகப் பிணைத்துவிட்டு 
இரவோடிரவாக இருப்பிடம் சென்றது
ஆம் அவர்கள் இனி பிரியவே மாட்டார்கள் !

சந்தோசம் பொங்கிட 
அல்லாஹு அக்பர் என்று 
உரத்துக்கூறுகிறேன்
மனைவியின் குரல் திடீரென 
ஒலிக்கிறது 
என்னங்க கனவா?
பேசாம சூராவை ஓதிக்கிட்டு படுங்க! 

1 comment:

  1. அருமையாகச்சொன்னீர்..!
    சில்லறையாய் சேகரித்து, மொத்தமாய்
    சிலோன் அரசிடம் கொடுத்த
    முஸ்லிமின் வாக்குகள், வாக்குகள் தவறிய
    முஸ்லிம் தலைமைகள்
    கவவு உடையும் தருணம் வரைதான்
    நம்மளை மகிழ்விக்கும்...!

    ReplyDelete

Powered by Blogger.