Header Ads



நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆவலுடன் இருக்கிறேன் - மஹிந்த

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்த நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச நன்றி தெரிவித்துள்ளார்.

சீனாவில் பயணத்தை முடித்துவிட்டு, வியாழக்கிழமை இரவு இலங்கை திரும்பிய ராஜபட்ச, டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிலில், "மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

பூடான் பிரதமர் பங்கேற்கிறார்: இதனிடையே, நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பூடான் பிரதமர் லியோன்சென் ஷேரிங் டாப்கய் கலந்து கொள்ள உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக லியோன்சென் ஷேரிங் வரும் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். மோடியை அவர் 27ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறார்.

இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த மற்ற விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது பயணத்தின்போது இந்திய அரசில் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்கும் தலைவர்களையும் பூடான் பிரதமர் சந்திப்பார் என்று தெரிகிறது.

பூடான் பிரதமருடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தாஷோ யேஷே டோர்ஜி, வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் அத்துறையின் மூத்த அதிகாரிகளும் இந்தியா வர உள்ளனர்.

இலங்கை அதிபர், பூடான் பிரதமர் ஆகியோரைத் தவிர, சார்க் அமைப்பின் முக்கிய தலைவர்களான ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம் ஆகியோரும் மே 26ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.