தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழா - ஓர் ஆய்வு
(இவன்)
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கின் முகவெற்றிலை என்று சொல்லக்கூடியளவுக்கு இந்தப் பல்கலைக் கழகம் இருக்கின்றது என்றால் மிகையாகாது. இதன் ஒட்டுமொத்தப் பெருமைக்குரியவர் அதன் ஸ்தாபகரான மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம். எச். எம். அஸ்ரப் அவர்களேயாகும். இந்த ஸ்தாபனத்தில் ஏதாவது வழுக்கள் ஏற்படுமாக இருந்தால், அது அந்த மாமனிதரை களங்கப்படுத்துவதாக அமைந்து விடும்.
குறித்த பட்டமளிப்பு விழா கொழும்பிலே நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பத்தில் செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடந்தேறியும் விட்டது. கொழும்பிலே நடத்தாமல், இந்தப் பிரதேசத்திலேயே நடத்துவதற்கு பிந்தியாயினும் தீர்மானிக்கப்பட்டதை வரவேற்க வேண்டும். இவ்வாறு நடத்தப்பட்டதால் தென்கிழக்கு மண்ணுக்கும் பெருமை. சராசரி ஏழை மாணவர்களும் அவர்களின் பெற்றோர் உட்பட குடும்பத்தினர் கண்டுகளிக்கவும் ஏதுவாக இருந்தது.
இத்தகைய சிறப்புக்களைத் தாங்கிய அந்த பட்டமளிப்பு விழாவிலே காணப்பட்ட குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். ஏனெனில், இந்தத் தவறுகள் எதிர்காலத்திலும் தொடராமல், எதிர்காலத்தில் குறைபாடுகள் குறைந்த ஒரு பல்கலைக்கழகமாக இது மிளிர வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து பட்டமளிப்பு விழா நடைபெற்ற தற்காலிக மண்டபத்தை அடையும் வரை, அதன் திசையைக் காட்டுவதற்கான எந்த அறிவிப்புப் பதாதைகளும் வைக்கப்பட்டிருக்கவில்லை. எதிரே அகப்பட்டவர்களிடம் கேட்டுக் கொண்டே மண்டபத்தை அடையவேண்டியிருந்தது. அம்புக்குறிகளைத் தாங்கிய விடயங்களை சாதாரண கடதாசியிலே பிரிண்ட் செய்து தொங்கவிட்டிருந்தால் கூட எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும்.
அதேவேளை பல்கலைக்கழக முன்றலில் விசேட பேச்சாளரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட கட்அவுட் வைக்கப்பட்டிருந்தமை பல்கலைக்கழக சம்பிரதாயத்தை மீறி ஒரு அரசியல் கலாசாரத்தை அரங்கேற்றும் செயலென பலராலும் விமர்சிக்கப்பட்டது. மற்றும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பிரதம அதிதி என எவரும் அழைக்கப்படும் சம்பிரதாயம் வேறு எப்பல்கலைக்கழகத்திலும் இடம் பெறுவதில்லை. ஆனால் விசேட பேச்சாளராக அழைக்கப்பட்டவர் உபவேந்தர் அவர்களினால் பிரதம அதிதி என விளிக்கப்பட்டமை ஒரு நகைப்புக்கிடமான செயலாக காணப்பட்டது.
அழைக்கப்பட்டவர்கள் உட்பட பட்டதாரிகளின் குடும்பத்தினர் உரிய நேரத்திற்கு முன்பாகவே சமுகமளித்திருந்தும், மண்டபத்தில் அமருவதற்கு அனுமதிக்கப்படாததால், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக அலைமோதியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மண்டபத்தை அண்டிய பகுதிகளில் சரியான அறிவுறுத்தல் இன்மையால், நின்று கொண்டிருந்த பட்டதாரி மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்கள் பாதுகாப்புப் பணியாளர்களினால் விரட்டப்பட்ட விதம் இந்தப் பல்கலைக்கழகத்தின் தரத்தினை மலினப்படுத்துவதாக இருந்தது. கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் அகௌரவிக்கப்பட்டது போலவும் இருந்தது.
மேலும் வேந்தர் பவனி மேடையை நோக்கி வரும்போது அரைவாசிப்பேர் மேடைக்கு வந்தபின்னர் மற்றையோர் காலதாமதமாக வந்தமை அணியில் ஒரு தொடர்நிலை காணப்படாது துண்டறுந்த நிலையை காண்பித்தது.
பட்டமளிப்பு நிகழ்வின் பிரதானமான விடயமே பட்டதாரி மாணவர்கள் எடுக்கின்ற சத்தியப்பிரமாணம் தான். இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் கூட ஒரு தொய்வு நிலை காணப்பட்டது. பதிவாளர் அந்தப் பிரமாணத்தை வாசிக்கின்ற போது பட்டதாரி மாணவர்களும் அதனைப் பின்பற்றி உரைப்பதுடன், தத்தமது வலது கையை முன்னே நீட்டி வைத்திருக்க வேண்டும். இது பின்பற்றப்படவில்லை. பட்டதாரி மாணவர்கள் அந்தப் பிரமாணத்தை உரைக்கின்ற போது அந்த மண்டபமே அதிர்ந்திருக்க வேண்டும். ஆனால் அங்கோ பதிவாளர் ஒப்பித்த சப்தத்தைத் தவிர, மண்டபம் நிசப்தமாகவே இருந்தது. இது விடயம் தொடர்பாக பதிவாளரினால் பட்டதாரி மாணவர்களுக்கு எந்த அறிவுறுத்தல்களும் அவ்விடத்தே கூறப்படவில்லை. சத்தியப்பிரமாணத்தை பட்டதாரி மாணவர்கள் கூறுவதற்கான அவகாசம் இவரால் வழங்கப்படவில்லை. இது முன்னோடியாக பட்டதாரி மாணவர்களுக்கு எந்த அறிவுறுத்தலும் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லையா என்ற கேள்வியை எழுப்புகின்றது. பல்கலைக்கழகங்களில் நடக்கின்ற நிகழ்வுகளிலே, பட்டமளிப்பு விழாதான் மிக முக்கியமானது என்பதை விழா ஏற்பாட்டாளர்கள் மறந்து விட்டார்கள் போலும்.
பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலில்; ஆரம்ப நேரம் எப்படியோ இருக்க, நிகழ்வு ஆரம்பிப்பதற்கு எடுத்த காலதாமதம் இந்தப் பல்கலைக்கழகத்தின் தரத்தை மழுங்கடிப்பதாக இருந்தது. பட்டதாரி மாணவர்கள் தமது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு தமது வாழ்க்கையில் முக்கியமான படித்தரத்தை எட்டுகின்ற வேளையிலே, காலமுகாமைத்துவம் பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டிய தருணத்திலே, காலதாமதமாக நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போது பட்டதாரி மாணவர்கள் தங்களை எவ்வாறு மெருகூட்டிக் கொள்ளப் போகின்றார்கள்.
அதுமட்டுமல்ல, தற்காலிக மண்டபமாயினும், மண்டப ஏற்பாடுகளில் குறிப்பாக காற்றோட்ட வசதியை ஏற்படுத்துவதிலும் ஒரு பின்னடைவு காணப்பட்டது. மண்டபத்தில் வீற்றிருந்த பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்கள், விசேட அதிதிகள், பட்டதாரி மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் மேடையிலே வீற்றிருந்த பிரதானிகள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் கூட காற்றோட்டமில்லாமல் புழுக்கத்துடன் புழுங்கிக் கொண்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
மேலும், பட்டங்களை வாங்கச் சென்ற பட்டதாரி மாணவர்கள் குறிப்பாக பட்டதாரி மாணவிகள் மாலை அணிவிக்கப்படும்போது எவ்வாறு சிரம் தாழ்த்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூட அறிவுறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. தள்ளாத வயதிலே நிற்பதற்குக் கூட சிரமப்பட்டுக் கொண்டிருந்த கௌரவ பல்கலைக்கழக வேந்தர் (ஊhயnஉநடடழச) மாலைகளை அணிவிக்கும்போது மிகுந்த அவஸ்தைப்பட்டதை அங்கிருந்த எல்லோரும் கவலையோடு நோக்கிக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. பட்டதாரி மாணவர்களுக்கு சரியான முறையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை என்பதையே அது காட்டுகின்றது.
இந்தப் பல்கலைக்கழகத்தால் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவுக்கு கௌரவ கலாநிதிப்;பட்டம் வழங்கப்பட்டதன் பொருத்தப்பாடு குறித்து பல வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, அவர் மண்டபத்திலிருந்து இடைநடுவில் சென்றமை இவ்வாறான நிகழ்வுகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஓர் அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லாமல் இருந்தமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எனவே, எதிர்காலத்தில் நடக்கின்ற நிகழ்வுகளிலே இவ்வாறான தொய்வுத் தன்மைகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன், இந்தத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் எமது நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று சிறந்து விளங்க வேண்டுமென்பதே எல்லோரினதும் விருப்பமாகும். ஆகவே, இந்த சுட்டிக்காட்டுதலை எதிர்மறையாக நோக்காமல், ஊக்கப்படுத்துகின்ற ஒன்றாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருதவேண்டும்.
பிந்திக்கிடைத்த செய்தி:
அன்றைய தினம் உபவேந்தர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராப்போசன விருந்துபசாரத்தை அதிகமான விரிவுரையாளர்கள் பகிஷ்கரித்ததாக கூறப்படுகிறது. இதற்கான பிரதான காரணம் உபவேந்தர் தன்னிச்சையாகவும் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தொழிற்படுவதை ஒருசில கைக்கூலி விரிவுரையாளர்களை கொண்டு பல வருடங்களாக தடுத்து வருவதாகவும் அதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாகவே மேற்படி விருந்துபசாரத்தை பகிஷ்கரித்ததாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment