''ரெஸ்லிங்'' அம்பலமாகும் உண்மைகள்..!
(Mn)
ஜோன் சினா, அண்டர் டேக்கர், ஷோன் மைக்கேல், பிக் ஷோ, கிரேட் காளி, த ரொக், கேன், ரீ மிஸ்ட்ரியோ, பெட்டிஸ்ட்டா, எட்ஜ், ரெண்டி ஓர்டன், ட்ரிப்பிள் எச்... என்ன பெயர்களை கேட்டாலே சும்மா அதிருதில்ல. இப்பெயர்களுக்குரிய உருவங்களை நினைத்தவுடன் உடம்பு முறுக்கேறுகிறதா?
தற்போது இளைஞர்கள் மட்டுமன்றி பலருக்கும் நன்கு பரீட்சயமான ரெஸ்லிங் நட்சத்திரங்களே இவர்கள். ஒருவரை ஒருவர் இரத்தம் வருமளவிற்கு படு பயங்கரமாக மோதிக்கொள்ளும் ரெஸ்லிங் ( மல்யுத்தம்) பற்றி தற்போது அறியாதவர்களே இல்லை எனலாம்.
சில வருடங்களுக்கு முன்னர் எம்மவர்களால் வருடத்திற்கு வெகு சில ரெஸ்லிங் போட்டிகளையே காணக்கூயடிதாக இருந்தது. ஆனால் தற்போது டி.வி.டி, சி.டி, இணையம் என்பவற்றால் ரெஸ்லிங்கை இலகுவாக பார்க்கக்கூடியதாக உள்ளது. தற்போது தொடராக ஒவ்வொரு வாரமும் ஏன் சில சமயங்களில் ஒவ்வொரு நாளும் பார்க்கக் கிடைக்கின்றது.
இதனால் அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற விடயங்கள் போல ரெஸ்லிங் குறித்தும் அடிக்கடி விவாதங்களில் பெரியவர்கள் கூட ஈடுபடுவர். நீங்களும் அதுபோன்ற ஒரு விவாதத்தில் பங்கெடுத்திருக்கலாம். அவை பெரும்பாலும் தங்களது விருப்புக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் அவரது அதிரடியான சண்டைகள், விசேட நகர்வு பற்றியதாக இருக்கும்.
இவற்றிடையே சில சமயங்களில் ரெஸ்லிங் என்பது ஒரு வீர விளையாட்டா? அல்லது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஏமாற்று விளையாட்டா? எனவும் கேள்விகள் எழுந்திருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்தனை பாரிய உடலமைப்பை கொண்டு இரத்தம் வர அடித்து நொறுக்குவதெல்லாம் பொய்யா? என ரெஸ்லிங் ரசிகர்கள் ஆத்திரமடையக்கூடும்.
உண்மையில் தொலைக்காட்சியை இலக்காக கொண்ட ரெஸ்லிங் நிஜமா? நிழலா? என்பதை அறிய முற்படுபவர்கள் தொடர்ந்து வாசியுங்கள். ரெஸ்லிங்கின் அடிப்படை கிரேக்க - ரோமன் மல்யுத்தத்திலிருந்து உருவானதொரு விடயமாகும். அதுவே தற்போது பிறீஸ்டைல் ரெஸ்லிங்காக மாற்றமடைந்துள்ளது.
கிரேக்க - ரோமன் மல்யுத்தத்தில் ஒருவரை ஒருவர் தூக்குவதை இலக்காகக்கொண்டு நகர்வுகள் இடம்பெறும். ஆனால் ரெஸ்லிங்கில் ஒருவர் எழுந்திருக்க முயாதளவிற்கு அடித்து வீழ்த்த முயற்சிப்பர்.
இவர்களின் ரெஸ்லிங் விளையாட்டுக்கென திட்டமிடப்பட்ட ஒழுங்கமைவான தீர்மானமிக்க சட்ட திட்டங்கள் கிடையாது. ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையிலான சண்டைகளுடன் முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட ஒரு திரைக்கதை மூலம் ஒவ்வொரு ரெஸ்லிங் போட்டியும் இடம்பெறுகின்றது. இது ஆச்சரியமாக இருக்கின்றதா?
உங்கள் ரெஸ்லிங் நட்சத்திரங்களின் அத்தனை வெற்றிகளும் ஏன் அவர்களது ஒவ்வொரு அசைவும் திரும்பலும் கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்.
அப்படியானால் ஒவ்வொரு அடியும் பொய்யா? என்றால் இல்லை. ஆனால் அந்த ஒவ்வொரு அடியும் அடுத்தவருக்கு வலிக்காமல் எவ்வாறு அடிப்பது, உதைப்பது என பலமுறை ஒத்திகை பார்த்து பயிற்சி பெற்ற பின்னரே மோதிக்கொள்வார்கள்.
ஒருவருக்கு மேலாக அத்தனை இலகுவாகப் பாய்வது, பாரிய உடலைக்கொண்ட ஒருவரை தூக்கி எறிவது, பல அடி உயரத்திலிருந்து கீழே பாய்வது போன்ற அபரிமிதமான செயற்பாடுகளை இலாவகமாக செய்ய நன்கு பயிற்சி பெற்றவர்களே ரெஸ்லிங் வீரராக மாற முடியும். அவர்கள் சிறந்த ஜிம்னாஸ்டிக் கலைஞர்களாகவும் சமயோசிதமாக செயற்படும் நடிகராகவும் இருக்க வேண்டும்.
இருப்பினும் கரணம் தப்பினால் மரணம் போன்ற சாகஸங்களையும் ரெஸ்லிங் வீரர்கள் செய்கின்றார்கள். அவர்களது நகர்வுகளை நாம் செய்துபார்க்கப்போனால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும். ரெஸ்லிங் வீரர்களோ அதில் கைதேர்ந்தவர்கள். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கும் நிஜமாகவே பாரிய உபாதைகள் ஏற்படும். அதனை வழக்கமான தொழில்களிலுள்ள சவால்களை போன்றதாகவே ரெஸ்லிங் வீரர்களும் தங்களது தொழில்ரீதியிலான ரெஸ்லிங்கில் ஈடுபடுகின்றனர்.
ஆரம்பத்தில் ரெஸ்லிங் போட்டி, விளையாட்டாகவே இருந்தது. ஆனால் தொழில் ரீதியாக பலகோடி வருமானம் ஈட்டச் செய்யும் ரெஸ்லிங்கை பொழுதுபோக்காக மாற்றி சுமார் 60 வருடங்களாகின்ற நிலையில் இதுவரையில் ரெஸ்லிங் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி உயிரிழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாயும்போது மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு போட்டியின்போது மூவர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வீராங்கனை ஒருவர் உட்பட 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போட்டியின்போது நடு நெற்றியிலேயே இரத்தம் சொட்டுவதும் செயற்கையானதே. இதற்காக பிரத்தியேகமான ஒரு திரவமும் சாதனமும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றினை முறையாக இயக்குநர், கிரபிக்ஸ் இன்றி செயற்படுத்த குறியீட்டு சொற்களும் இவர்களுக்கிடையில் உண்டு. இது 'கேபேப்' என அழைக்கப்படும். தற்போதைய பிரோ ரெஸ்லிங்கில் 'கேபேப்' குறியீட்டு முறை பயன்படுத்தப்படுவது குறைவு.
அத்துடன் சண்டைக்காக பயன்படுத்தும் கதிரை, மேசைகள் முதற்கொண்டு அத்தனையும் போலியானவையே. மேலும் இவர்கள் மோதும் ரிங் எனப்படும் அந்த மேடையானது நூற்றுக்கணக்கான கிலோ எடையையும் தாங்கும் வல்லமையும் ஒரு மெத்தைபோன்ற அமைப்புமாகும்.
ரெஸ்லிங் வீரர்களின் போலியான நடிப்பை அறிய பாரிய அறிவொன்றும் தேவையில்லை. நீங்கள் பார்க்கும் வீடியோவின் வேகத்தை சற்றே குறைத்துவிட்டு பார்த்தாலே பல அசைவுகளின் செயற்கைத் தனமும் போலியான அடிகளும் தெளிவாகத் தெரியும். மோதுபவர்களுக்கு இடையிலான துல்லிமான நேர இடைவெளி தவறுமிடத்து அது அப்பட்டமாகவே தெரியும்.
பெரும்பாலான ரெஸ்லிங் ரசிகர்கள் அது பொய்யெனத் தெரிந்தும் நேரடியாகவும் திரையிலும் பார்த்து மகிழ்ச்சிப்படுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து ரெஸ்லிங்கிற்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மொத்தத்தில் மக்கள் முன்னிலையில் ஒரே தடவையில் எடுக்கப்படும் இந்த நேரடி அதிரடி சண்டை சினிமாவுக்கு ஆதரவு அதிகமே. அதேநேரத்தில் ரெஸ்லிங்கை நடாத்தும் நிறுவனங்களும் அதன் வீரர்களும் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டி வருகிறனர்.
இதில் அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட WWWF என்ற பெயரில் ஆரம்பமாகி WWF என மாற்றம் பெற்று தற்போது WWE (World Wrestling Entertainment) என்ற பெயருடன் இயங்கும் நிறுவனத்தில் மட்டும் பிரபல்யமான வீரர்கள் உள்ளடங்கலாக 700க்கும் அதிகமான ஊழியர்கள் பணி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று WWC, WEW, ECW, NWS என இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஜப்பான், மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகளில் 100க்கும் மேற்பட்ட ரெஸ்லிங் நிறுவனங்கள் உள்ளன. உங்களது ஆரவாரத்துக்கிடையில் இந்நிறுவனங்களில் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் பணம் கொட்டும் என்பது மட்டுமே உண்மை.
-ஏ.எம்.ஆர
உண்மைகளை வெளியில் கொண்டுவந்தமைக்கு மிக நன்றி.
ReplyDeleteஇவைகள் பொய்கள் என நாங்கள் ஏற்கனவே தெறிந்திருந்தும் வெறிபிடித்த இரசிகர்களிடம் சொல்லியும் கேட்காமல் பணம் கொடுத்து நேரத்தை வீணாக்கி இதிலேயே மூழ்கியிருப்பார்கள்.
வாதத்திற்கு வரும்போது,இரத்தம் சொட்டும் காட்சிகளை பொய்யா என கேற்பார்கள்.இரத்தமும் கூட திட்டமிட்ட ஏமாற்று வேளை என்பதை தெறியாத நாங்கள் வாய்மூடி இருந்திருக்கிறோம்.இப்போதுதான் அதுவும் பொய்யென திறிகிறது.
கண்டிப்பாக இதனை ப்ரிண்ட் எடுத்து ஏமாறும் அப்பாவிகளை காப்பாற்ற முயற்சிக்கலாம். நன்றி.
ஐயா சாமி.. ஒத்துக்குரன்.. இது பொய்தான்..
ReplyDeleteஆனா பாகுரத்துக்கு நல்லா இருக்கே ;)