Header Ads



ஜெயிப்பது யாரு..?

டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், 06-05-2014 இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.  வங்கதேசத்தில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது.  நடக்கும் பைனலில், இந்தியா அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

ஏழு ஆண்டுகளுக்குப் பின், தோனி தலைமையிலான இந்திய அணி, இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது. இதற்கு, இத்தொடரில் அதிக ரன்கள் (242) எடுத்துள்ள இளம் வீரர் விராத் கோஹ்லியின் பங்கு அதிகம்.

தவிர, ரோகித் சர்மா (171 ரன்கள்), ரகானே ஜோடியின் சிறப்பான துவக்கம், ‘மிடில் ஆர்டரில்’ ரெய்னா, யுவராஜ் ஆறுதல் தருவது என, பேட்டிங்கும் முக்கிய காரணமாக உள்ளது. பின் வரிசையில் கேப்டன் தோனி, ஜடேஜாவும் உள்ளது கூடுதல் பலம்.

பவுலிங்கில், சுழற் பந்துவீச்சாளர் அஷ்வின் (10 விக்.,), முக்கிய துருப்பு சீட்டாக உள்ளார். அரையிறுதியில் ஏமாற்றிய அமித் மிஸ்ரா (9 விக்.,) இன்று, எழுச்சி பெறலாம்.

2007, பைனலில், அரியானாவின் ஜோகிந்தர் சர்மா அசத்திய போல, மோகித் சர்மா (அரியானா) கைகொடுக்கலாம் என்பதால், ‘வேகத்தில்’ புவனேஷ்வருடன், இவர் தொடர்வது உறுதி.

இலங்கை அணி 2009, 2012க்குப் பின், மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இப்போட்டியுடன் அனுபவ சங்ககரா, ஜெயவர்தனா ஆகியோர் ‘டுவென்டி–20’ அரங்கில் இருந்து விடைபெறுவதால், சாதிக்க முயற்சிப்பர்.
துவக்க வீரர் குசல் பெரேரா, மாத்யூஸ், திரிமான்னே, தில்ஷன் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

பவுலிங்கை பொறுத்தவரையில் ‘யார்க்கர்’ மலிங்கா, பெரும் பலமாக உள்ளார். கேப்டன் பணியில் இவர் தொடர்வதால், சண்டிமால் இன்றும் களமிறங்கப் போவதில்லை. தவிர, 2011, உலக கோப்பை பைனலில், தோனி அடித்த ‘ஹெலிகாப்டர்’ சிக்சரை மறக்காத குலசேகரா, தொல்லை தருவார் எனத் தெரிகிறது. சுழலில் ஹெராத், சேனநாயகே இடம் பெறுவதால், அஜந்தா மெண்டிசிற்கு வாய்ப்பு கிடைக்காது.

இரு அணிகளிலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இருப்பினும், பைனலில் வெற்றி பெறும் உத்தி கேப்டன் தோனிக்கு தான் நன்கு தெரியும். இதனால், இந்திய அணி மீண்டும் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் இன்றைய பைனலில், அம்பயர்களாக இங்கிலாந்தின் இயான் கோல்டு, ரிச்சர்டு கெட்டில்பரோ செயல்பட உள்ளனர். மூன்றாவது அம்பயராக ஆஸ்திரேலியாவின் ராடு டக்கர் உள்ளார்.

இன்று போட்டி நடக்கும் மிர்புரில், வானம் இரவில் மேகமூட்டத்துடன் காணப்படும். பகலில் இடியுடன் கூடிய மழை வர 40 சதவீத வாய்ப்புள்ளது.
* ஒருவேளை மழை காரணமாக போட்டி இன்று ரத்தானால், நாளை போட்டி மீண்டும் நடக்கும்.

இலங்கை அணியின் சீனியர் வீரர்கள் சங்ககரா, 36, ஜெயவர்தனா, 36. இருவரும் இந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருடன், இவ்வகை போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தனர். இதனால், இன்று கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

அதேநேரம், பெரும்பாலான சீனியர் வீரர்களின் கடைசி போட்டி, சோகமாகத்தான் முடிந்துள்ளது. இது வரலாறு. கடந்த 2011 உலக கோப்பை தொடருடன் விடை பெறுவதாக அறிவித்தார் இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்திய அணி கோப்பை வென்றது. இதுபோல, இன்று நடக்கும் என, நம்புவோம்.

தென் ஆப்ரிக்க அணிக்கு அரையிறுதி ‘அலர்ஜி’ என்றால், இலங்கை அணிக்கு பைனல் என்றாலே பயம் தான். கடந்த 1996 உலக கோப்பை தொடரில் மட்டும் கோப்பை வென்றது.

இதன் பின், கடந்த 7 ஆண்டுகளில் 2007, 2011 உலக கோப்பை, 2009, 2012ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இவை அனைத்திலும் தோற்று கோப்பை இழந்தது.

* 2002, சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) பைனலில், அடுத்தடுத்து இரு நாட்கள் பெய்த மழை காரணமாக, இந்தியா–இலங்கை அணிகள் கோப்பை பகிர்ந்து கொண்டன.

காத்திருக்கும் சாதனைகள்
கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. இம்முறை அசத்தினால், இரண்டு முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனை படைக்கலாம்.  
* 2011ல் 50 ஓவர் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி அடுத்து, 2014ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை என, மூன்றிலும் ஒரே நேரத்தில் சாம்பியனாக இருக்கும் முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறலாம்.
முதல் கேப்டன்
இன்று இந்தியா வெற்றி பெற்றால், மூன்று உலக கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெறலாம். இவர் தலைமையில் ஏற்கனவே 2007(20 ஓவர்), 2011(50 ஓவர்) உலக கோப்பையை இந்தியா வென்றுள்ளது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு(1975, 1979), ஆஸ்திரேலியாவின் பாண்டிங்(2003, 2007) ஆகியோர் இரு முறை உலக கோப்பை வென்றுள்ளனர்.
மூன்று ஆண்டு, மூன்று நாட்கள்
கடந்த 2011, ஏப்., 2ல் இந்தியா, இலங்கை அணிகள், உலக கோப்பை (50 ஓவர்) தொடர் பைனலில் மோதின. இதில் இந்தியா கோப்பை வென்றது.
சரியாக மூன்று ஆண்டுகள், மூன்று நாட்கள் கழித்து, 2014, ஏப்.,6ல்  இரு அணிகள் மீண்டும் மற்றொரு உலக கோப்பை (‘டுவென்டி–20’) தொடர் பைனலில் மோதுகின்றன.
சர்ச்சைகள் சகஜம்
இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சைகள் எப்போதும், பெரும் பங்கு வகித்து வருகின்றன. அணியின் கேப்டனாக இருந்த இத்தனை ஆண்டுகளில், இவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். தவிர, இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் எந்த நல்லது, கெட்டது என்றாலும், அதில் எனது பெயர் இல்லாமல் இருக்காது என்ற செய்தி கடினமானது. நீண்ட ஆண்டுகள் விளையாடும் சங்ககரா, ஜெயவர்தனா ஓய்வு பெறுவது, இலங்கை அணிக்கு பெரும் இழப்பு தான்,’’ என்றார்.
ஆதிக்கம் செலுத்துவது யார்
சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், இதுவரை இந்தியா–இலங்கை அணிகள் 5 முறை மோதின. இதில் இந்தியா 3, இலங்கை 2 போட்டியில் வெற்றி பெற்றன.
* ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில், இவ்விரு அணிகள் 4 முறை மோதின. இதில் இந்தியா 3, இலங்கை ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.
* ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் இவ்விரு அணிகள் மோதுவது இதுவே முதன்முறை. ஆனால் ஒட்டுமொத்த உலக கோப்பை (50 ஓவர், டுவென்டி–20) பைனலில், இந்த அணிகள் இரண்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக 2011ல் மும்பையில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) பைனலில், இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
முதலிடம் யாருக்கு
ஐ.சி.சி., சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச ‘டுவென்டி–20’ ரேங்கிங்கில் (தரவரிசை), முதலிரண்டு இடங்களில் இந்தியா (132 புள்ளி), இலங்கை (131) அணிகள் உள்ளன. இன்றைய பைனலில், இந்திய அணி வெற்றி பெற்றால் 135 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும். இலங்கை அணி 129 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கும். ஒருவேளை இலங்கை அணி வென்றால், 133 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறும். இந்திய அணி 130 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்படும்.

No comments

Powered by Blogger.