தோணா வடிகானாகி விடுமா..?
(இவன்)
கிழக்கின் அம்பாரை மாவட்டத்திலே வனப்பு மிக்க பழமையானதொரு கிராமம் தான் சாய்ந்தமருது. கிழக்கே கடலையும் மேற்கே பசுமையான வயல்வெளியையும் எல்லைகளாகக் கொண்ட இந்த கிராமத்தின் அழகை மேலும் மெருகூட்டுவது போல இருந்தது தான், இந்தக் கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் தோணா எனப்படும் அந்த நீரோடை.
மழைக்காலங்களில் எவ்வளவு தான் மழைநீர் சேர்ந்தாலும் அதனை தன்னுள் வாங்கி இந்து மகா சமுத்திரக் கடலில் கொண்டு சேர்த்திடுவாள் இவள். அது ஒரு காலத்தில். அப்போதெல்லாம் இதன் அகலம், இப்போதிருப்பதைப் போல நான்கு மடங்காக இருந்தது. இதன் அப்போதைய அகலம் எப்படியிருந்தது என்று பார்க்க வேண்டுமானால், மாளிகைக்காட்டைத் தாண்டிய காரைதீவு, பாலமுனை, மற்றும் அட்டாளச்சேனைப் பகுதிகளிகளில் இப்போதும்; பார்க்கலாம்.
இந்தத் தோணாவை அண்டிய ஓரங்களில் குடியிருந்த எமது சகோதரர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தமது வைசரிசையைக் காட்டி ஆளாளுக்கு போட்டி போட்டு நிரப்புவது போல தோணாவின் பகுதிகளை நிலமாக்கி வீடுகளையும் அமைத்துக் கொண்டனர்.
இவர்கள் இவ்வாறு செய்ததனால் தான், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினால் எமதூரில் அதிகமான உயிரிழப்புக்களை சந்திக்க வேண்டியிருந்ததும், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பகுதிகளில் உயிரிழப்பு குறைவாக இருந்ததற்கு காரணம் அந்தந்தப் பகுதிகளின் தோணாக்கள் அகலமாக இருந்தது என்பதும், சுனாமியால் பொங்கி வந்த கடல்நீரை அந்தத் தோணாக்கள் உள்வாங்கியே உயிரிழப்புக்களை குறைத்தது என்பதையும் எம்மில் எத்தனை பேர் அறிவார்கள் அல்லது ஏற்றுக் கொள்வார்கள்.
இத்தகைய முக்கியத்துவமிக்க இந்தத் தோணாவின் இன்றைய நிலையோ பரிதாபத்திலும் பரிதாபமாக இருக்கின்றது. அகலத்தில் நான்கிலொரு பங்காகக் குறைந்து விட்ட இந்தத் தோணாவின் இருமருங்கிலும் கொங்கிறீட் பாதைகள் போடப்பட்டு இதன் எல்லைகள் நிருணயிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், மாளிகைக்காட்டிலிருந்து முகத்துவாரம் வரைக்கும் ஒரு பவனி சென்றால் தெரிந்துவிடும் இன்றைய இந்தத் தோணாவின் நிலை என்ன என்பது. கொங்கிறீட் பாதைகளையும் தாண்டி தமது கைவரிசையை மீண்டும் காட்டத் தொடங்கிவிட்டார்கள் எமது சகோதரர்கள். ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு குப்பைகளையும், உடைந்த துண்டுக்கற்களையும் போட்டு நிரப்பி மரங்களையும் நாட்டி ஆங்காங்கே வேலிகளும் அமைத்திருக்கிறார்கள்.
மண்ணரிப்பைத் தடுப்பதற்காக பாய்ந்தோடும் ஆறுகளின் ஓரங்களில் மரங்கள் நாட்டப்பட வேண்டும் என்பது என்னவோ உண்மை தான். ஆனால் இந்தத் தோணாவைப் பொறுத்தமட்டில் மண்ணரிப்பு என்பதை விட தோணா அரிப்பு என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறான நிலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுமாக இருந்தால், இன்னும் சிறிது காலத்தில் இந்தத் தோணாவானது வடிகானாக மாறிவிடுமா அல்லது கல்முனைக்குடியில் இல்லாமலாக்கப்ட்டது போன்று சாய்ந்தமருதிலும் இருந்த தடயமே இல்லாமல் போய்விடுமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
இந்தத் தோணாவைப் பேணிப்பாதுகாக்க வேண்டியது யாருடைய பொறுப்பு. இதனைப் பேணிப்பாதுகாத்துப் பராமரிக்க வேண்டியது எந்த அதிகாரிகள் அல்லது எந்த நிருவாகம். யார் பொறுப்பாக இருந்தாலும், இதன் இருமருங்கிலும் வாழ்கின்ற மக்கள் தூரநோக்கோடு சிந்தித்து விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே இந்தத் தோணாவை மேற்கொண்டும் செம்மையாகப் பேணுவது இலகுவிலும் இலகுவாகும்.
அதுமட்டுமல்ல, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டதொரு விடயம் தான், மேற்படி தோணாவைத் துப்புரவு செய்வதற்காக பதின்மூன்று இலட்சம் ரூபாவினை கௌரவ மாகாண சபை உறுப்பினர் சகோ. ஜெமீல் அவர்களின் முயற்சியினால் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான ஒப்பந்தம் குறித்த ஒப்பந்தக்காரர்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றுமாக அந்த செய்திகள் பரப்பப்பட்டிருந்தன. இதன் பலாபலன்கள் எவ்வாறு அமையும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தாலும், இன்னும் அந்த வேலை ஆரம்பிக்கப்படவில்லையே என்று மக்கள் அங்கலாய்ப்பதை செவிமடுக்க முடிகின்றது.
எத்தனை இலட்சங்கள் காலத்துக்குக் காலம் செலவழித்து இந்தத் தோணாவைத் துப்புரவு செய்தாலும், மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதனை நிவர்த்திக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரைக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதை பலமுறை பலரும் பலவிதமாக சுட்டிக்காட்டியும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்படுகின்றது.
எனவே சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊர் நலனில் அக்கறை கொண்டு, தூரநோக்கோடு சிந்தித்து, முன்னேற்றகரமாக கருமமாற்றினால் மட்டுமே, இந்தத் தோணாவானது வடிகானாவதைத் தடுக்க முடியும்.
  
குப்பை அதிகரிக்கும் பொழுது சில அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம்தான் ஏனெனில் அதை அல்லும் சாக்கில் கொள்ளையடிக்கலாம் தானே அதேபோல் மற்றைய சில அரசியல்வாதிகளுக்கு இதை விமர்சனம் செய்து அரசியல் ஆதாயம் பெற இந்த குப்பை உதவும் குப்பையால் அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டமே. மொத்தத்தில் திண்டாடப் போவது அப்பாவி மக்கள்தான் இருந்தாலும் கொஞ்சம் மக்களும் விதைத்ததை அறுவடை செய்துதானே ஆகவேண்டும். குப்பைகள் என்ன வானத்தில் இருந்தா வந்த சில கேடுகெட்ட சுயநலமிக்க நபர்களின் தான்தோன்றித் தனமான செயற்ப்பாடுகள் தான் காரணம் பின்னர் குத்துது கொடையுது என்று சொல்வதில் எந்த நியாயமுமில்லை.சிங்கள மக்களிடம் உள்ள அர்ப்பணிப்பு நம்மளுடைய முஸ்லிம் சமூகத்திடம் அறவே இல்லை அதற்க்கு உதாரணம் அம்பாறை வைத்தியசாலை எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வீட்டை விட அழகாக அந்த மக்கள் வைத்துள்ளனர் நமது பிரதேசத்தை சற்று யோசித்து பார்த்தாலே தெரியும் நமது மக்களின் அணுகுமுறை.அரசியல் வாதிகளை எதிர்பார்க்காமல் பொதுமக்களாகிய நாம் ஓன்று பட்டு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பொழுதாவது கேடுகெட்ட அரசியல் சாக்கடைகளுக்கு ரோசம் பிடிக்குதா என்று பார்க்கலாம்.இது வரட்சியான காலமாகையால் குப்பை இன்னும் இன்னும் பெறுக வாய்ப்புள்ளது இதை உடன் தடுக்கவேண்டிய கடமை பிரதேச வாழ் மக்களுக்கு உரியதாகும்.
ReplyDelete