அமெரிக்காவுக்கு கல்வி கற்கச் செல்கிறார் ரணில் விக்கிரமசிங்க
(Vi) எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நவீன தகவல் தொழில்நுட்பக் கல்வியை கற்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை 7 ஆம் திகதி ஒரு மாத கால பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா செல்கின்றார்.
மனிதன் மரணிக்கும் வரை கல்வியை கற்க வேண்டும் அப்போது தான் நவீன உலகின் மாற்றங்களை உள்வாங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொழும்பு ஹவ்லொக் வீதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இத்தகவலை வெளியிட்டார்.
இங்கு ஊடகவியலாளர்களிடம் மேலும் கருத்துக்களை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
உலகின் தலைசிறந்த 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றான மெசிடோசியஸ் இன்ஸ்டியுட் ஒப் டெக்னோலஜி என்னை அங்கு வருமாறும் சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டுமென்றும் மார்ச் மாதத்தில் அழைப்பு விடுத்தது. ஆனால் ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரச்சினை முடியும் வரை வெளிநாடுகளுக்கு விஜயம் செய்வதை தவிர்த்துக்கொண்டுள்ளதாக அவர்களுக்கு அறிவித்தேன். இதற்கமைய தற்போது மீண்டும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் பிறப்பிலிருந்து மரணிக்கும் வரை கல்வியை தொடர வேண்டும். எத்தனையோ தெரியாத விடயங்கள் உள்ளன. மேற்கண்ட பல்கலைக்கழகத்தில் நவீன தொழில் நுட்பம் நனோ தொழில்நுட்பம் நவீன விவசாய முறைமைகள் புதிய பொருளாதார கொள்கைகளை கற்க முடியும்.
மெசிடோசியஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலேயே பொஸ்டன் மற்றும் ஹாவாட் பல்கலைக்கழகங்கள் உள்ளன. எனவே இங்கு செல்வதன் மூலம் பொருளியல் நிபுணர்கள் உட்பட பல்வேறுபட்ட புத்திஜீவிகளுடன் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடிவதோடு புதிய வழிமுறைகளையும் கற்க முடியும்.
எதிர்காலத்தில் ஐ.தே.கட்சி ஆட்சியில் இவ்வாறு பெறப்படும் கருத்துக்களை உள்வாங்கி நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கான கொள்கைகளை வகுக்க முடியும். அரசியலமைப்பை மாற்றும் போது இக்கருத்துக்களை உள்வாங்க முடியும்.
அங்கு நான் சொற்பொழிவுகளை மட்டும் நடத்த மாட்டேன். அரசியலுக்கு அப்பால் சென்று கற்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அது தொடர்பாக அதிக கவனம் செலுத்துவேன்.
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை காலை அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறேன். ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்து கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
அதுவரை கட்சி நடவடிக்கைகளை தலைமைத்துவச் சபை முன்னெடுத்துச் செல்லும். ஒரு மாதம் கழித்தே நாடு திரும்புவேன். எனவே சிங்கள புதுவருடத்தில் நாட்டில் இருக்கமாட்டேன். எனவே உங்கள் அனைவருக்கும் இப்போதே எனது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தனது கட்சியின் தேர்தல் 'வெற்றிக்களிப்பில்' விடுமுறைக்கு செல்கிறார் போல் தெரிகிறது......??? அல்லது ஜெனீவா 'பிரச்சினை' களைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசின் பிரதிநிதியாக செல்கிறார் என்றும் சொல்லலாமா....!!! எது எப்படியோ... அந்த ஒரு மாதத்தில் UNP இன் தலைமைத்துவத்தில் ஒரு 'புரட்சி' ஒன்றை ஏற்படுத்துவதற்கு கட்சி 'மேலிடம்' முயற்சிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete